செல்போனுக்கு தடை என்ற காலம் போய் இப்போது செல்போனிலேயே தேர்வு

செல்ஃபோனுக்குத் தடை என்பது பரவலாகப் பல்வேறு கல்லூரி வளாகங்களிலும் அமலில் இருப்பது. கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் கவனச் சிதறலாகும் என்பதே கல்லூரி நிர்வாகம் இதற்குத் தரும் விளக்கம். பெற்றோர்களும் இந்தக் கட்டுப்பாட்டுக்கு உடன்படுகின்றனர். இந்த நிலையில்தான் புதிதாக வந்திருக்கும் சில செயலிகள் ஸ்மார்ட் போன்களைக் கல்லூரி வளாகத்துக்குள் குறிப்பாகத் தேர்வறைக்கே கொண்டுசெல்கின்றன. ஸ்மார்ட் ஃபோன் ஆப்ஸ் அடிப்படையிலான தேர்வுகள் நாட்டின் பெருநகரக் கல்லூரிகளில் பிரபலமடைந்துவருகின்றன.

முன்னாள் மாணவரின் செயலி

செயலி வழிப் பாடச் செயல்கள் என்பது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவை. பாடக் குறிப்புகள், திருப்புதல்கள், தேர்வுக்கான தயாரிப்புகள், பாடம் சார்ந்த மற்ற உதவிகள் என ஏராளமான செயலிகள் சந்தைகளில் இலவசமாகவும் குறைவான கட்டணத்திலும் கிடைக்கின்றன.

இதன் அடுத்த கட்டமாக அறிமுகமாகி இருப்பதே தேர்வுக்கான செயலிகள். மும்பை வித்யாவிகாரைச் சேர்ந்த கே.ஜே.சோமையா கல்லூரி குழுமம் சோதனை முயற்சியாக ஒரு செமஸ்டருக்கான தேர்வுகள் பலவற்றையும் ‘offee’ என்ற செயலி மூலம் நடத்தியுள்ளது.

கல்லூரியின் முன்னாள் மாணவரான அமித்ஷா உருவாக்கிய இந்தச் செயலி மூலம் 3,000 மாணவர்கள் தேர்வுகளை எழுதி உள்ளனர். பேனா மற்றும் பேப்பர் இன்றி நடந்த இந்தத் தேர்வு மாணவர்- ஆசிரியர் என இரு தரப்பினருக்கும் திருப்தியைத் தந்திருக்கிறது.

முறைகேட்டுக்கு வழி இல்லை!

தேர்வறைக்குள் ஸ்மார்ட் ஃபோனுடன் மாணவ மாணவியர் அனுமதிக்கப் படுகின்றனர். இணைய இணைப்புக்கு மாறாக வைஃபை வாயிலாக ஆசிரியர் அல்லது தேர்வறைக் கண்காணிப்பாளர் வசமிருக்கும் பிரத்யேகக் கருவி மூலம், மாணவர்களின் மொபைல்கள் இணைப்பு பெறுகின்றன.

மொபைல்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கும் செயலி வழியாக வினாத்தாள் விநியோகம் நடைபெறுகிறது. இணைய இணைப்பு இல்லாததால் ஸ்மார்ட் ஃபோனில் விடைகளைத் தேட முடியாது. வேறு ஏதேனும் முறைகேடுகளை செல்போனில் மேற்கொண்டாலும் அது உடனுக்குடன் தேர்வு கண்காணிப்பாளரை எச்சரிக்கை செய்யும். வினாத்தாளில் வினாக்களின் வரிசை என்பது தாறுமாறாக மாறியிருக்கும் என்பதால், மாணவர்கள் ஒருவருக்கொருவர் காப்பியடிப்பது இங்கே கடினம்.

தேர்வு முடிந்த சூட்டில் செயலி வாயிலாகவே முடிவுகளை அறிந்துகொள்வதும் எளிது. மாணவர்கள் பதிலளித்த விதம், கடினக் கேள்விகள், அதிகம் தவறு இழைத்தவை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆசிரியர் அறிந்துகொள்ளவும் இந்தச் செயலியில் வகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடின மற்றும் குழப்பமான பகுதிகளை ஆசிரியர் வகுப்பறையில் மீண்டும் கற்பிக்கவும், அதன் வழியே மாணவரின் கல்வித் திறனை மேம்படுத்தவும் வாய்ப்பாகிறது.

ஐ.ஐ.டி.-யின் செயலி

கணினி வாயிலான ஆன்லைன் தேர்வுகள் பரவலாகிவரும் காலத்தில் அதன் அடுத்த பாய்ச்சலாகச் செயலிவழித் தேர்வு முறை பார்க்கப்படுகிறது. இந்த வகைத் தேர்வுகளில் அப்ஜெக்டிவ் வகை, கோடிட்ட இடத்தை நிரப்புக, சரியா அல்லது தவறா உள்ளிட்ட ஒரு மதிப்பெண் அடிப்படையிலான தேர்வுகளே நடைபெறுகின்றன.

விரிவான விடைகளை விடைத்தாளில் எழுதி அதைப் படமாக ஆசிரியருக்கு அனுப்பும் வசதி இருந்தும் அம்முறை வரவேற்பைப் பெறவில்லை. Offee செயலியின் வரிசையில் சிறு குறைகளைக் களைந்தும், பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்தியும் புதிய செயலி ஒன்றை மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர்.

Safe (safe, Authenticated Fast Exam) என்ற இந்தச் செயலியைக் கொண்டு ஐ.ஐ.டி. வளாக மாணவர்களுக்கு மாதிரித் தேர்வுகளை நடத்தி அதன் பல அம்சங்களை மேம்படுத்தி உள்ளனர். தற்போது செயலிப் பயன்பாட்டைப் பரவலாக்கும் வகையில் பல கல்லூரி, பள்ளிகளுக்கு விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர்.

அனைவருக்கும் செயலி செல்லுமா?

செல்வகுமார்

சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் ஒருவர், “மாணவரின் திறனைப் பரிசோதிப்பதே தேர்வின் நோக்கம். பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டு முறைகள் சரியாக இருந்தால் எந்த வகையிலான தேர்வு நடைமுறைகளையும் செயல்முறைப்படுத்தலாம். தற்போது இணையத்தின் உதவியுடன் கணினி வாயிலான ஆன்லைன் தேர்வுகளைப் பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் நடத்துகிறோம்.

கணினியின் பல்வேறு நவீனங்கள் டேப்லட் மற்றும் மொபைல் ஃபோன்களில் இடம்பெறும்போது, அவற்றைக்கொண்டும் தேர்வு நடத்துவதில் தவறில்லை” என்றார்.

அரியலூர் அரசு கலைக் கல்லூரி கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ப.செல்வகுமார், “அரியலூர் போன்ற பின்தங்கிய பகுதிகளில் கைவசம் செல்போன் இல்லாத கல்லூரி மாணவர்கள் அதிகம் உள்ளனர். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியது போல் பாடத் தேவைகளுக்கு மட்டுமேயான மொபைல் ஃபோன் அல்லது டேப்லட் உபகரணத்தை அரசே வழங்கலாம்.

கல்லூரி செல்லவே இலவசப் பேருந்து பயணச் சலுகையை நம்பியிருக்கும் எளிய மாணவர்களுக்கும் இந்த வசதிகள் சேரும்போதுதான் நவீன அறிவியலின் கற்றல்-கற்பித்தல் முறைகள் முழுமை பெறும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *