சூர்யாவின் என்.ஜி.கே திரைவிமர்சனம்

ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர், ஒரு கட்சியின் அடிமட்ட தொண்டராக இணைந்து தனது புத்திசாலித்தனதால் முன்னேறி முதலமைச்சர் பதவியை பிடிப்பதுதான் இந்த படத்தின் ஒருவரி கதை

எல்.கே.ஜி. படத்திலும் இதே கதைதான் என்றாலும், சூர்யாவின் கேரக்டரை நல்லவராக இதில் காட்டி கொஞ்சம் வித்தியாசப்படுத்த முயன்றுள்ளார். இயக்குனர். சூர்யாவின் கேரக்டரை கச்சிதமாக உருவாக்கிய இயக்குனர் செல்வராகவும், சாய்பல்லவி, ரகுல் ப்ரித்திசிங் ஆகிய இரண்டு கேரக்டர்களிலும் கோட்டை விட்டுள்ளார். குறிப்பாக சாய்பல்லவி ஓவர் ஆக்டிங் எரிச்சலை தருகிறது. எல்.கே.ஜி படத்தில் ப்ரியா ஆனந்த் நடித்த அதே கேரக்டர்தான் ரகுல் ப்ரித்திசிங். ஆனால் இரண்டாம் பாதியில் இந்த் கேரக்டருக்கு அழுத்தம் இல்லாததால் ஏமாற்றம்தான் ஏற்படுகிறது.

படத்தின் ஒரு முக்கிய பிளஸ் சூர்யாவின் நடிப்பு. இயற்கை விவசாயத்தின் பெருமையை எடுத்து கூறுவதில் இருந்து அரசியலில் நுழைந்து பல திகிடுதத்தங்களை செய்வது வரை சும்மா புகுந்து விளையாடியுள்ளார். நீளமான ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் காட்சியும் கிளைமாக்ஸ் மேடை காட்சியும் சூர்யாவின் திறமையான நடிப்புக்கு சான்று

இன்றைய முன்னணியில் உள்ள இரண்டு கட்சிகளையும் போட்டு தாக்கியுள்ளார் இயக்குனர். குறிப்பாக முதல்வர், எதிர்க்கட்சி தலைவரின் கல்யாண வீட்டு சந்திப்பு, சாய்பல்லவி-ரகுல்ப்ரித்திசிங் மருத்துவமனையில் சந்திப்பு, சூர்யா, ரகுல்ப்ரித்திசிங் முதல்முறையாக ஹாலில் சந்திக்கும் காட்சி ஆகியவை செல்வராகவனின் வித்தியாசமான தனித்துவமான காட்சிகள்

இளவர்சு, தேவராஜ், பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் என அனைவரும் அரசியல்வாதி கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதில் தேறுவது இளவரசு மட்டுமே. உமா பத்மனாபன் நடிப்பிலும் ஓவர் ஆக்டிங், நிழல்கள் ரவி ஒரே ஒரு வசனம் மட்டும் பேசுகிறார்.

செல்வராகவன் படம் என்றாலே யுவன்ஷங்கர் ராஜாவின் இசை சூப்பராக இருக்கும் என்பது தெரிந்ததே. இதிலும் அதே சூப்பர் தொடர்கிறது. பாடல்கள் தான் கொஞ்சம் ஏமாற்றம். யோசிக்காமல் ‘அன்பே அன்பே’ பாடலை நீக்கிவிடலாம்.

மொத்தத்தில் இன்றைய அரசியல் சூழ்நிலையை சரியாக பிரதிபலிக்கும் ஒரு படம் தான் என்.ஜி.கே

4/5

Leave a Reply