சிமெண்ட் பூச்சு எப்படி இருக்க வேண்டும்?

வீட்டுக் கட்டுமானத்தில் முக்கியமான பொருள் சிமெண்ட். செங்கலை இணைக்கவும் செங்கல்லின் மேல்புறப் பூச்சுக்கும் சிமெண்ட் கலைவையைப் பயன்படுத்துகிறோம். சிமெண்ட் கலவையைத் தயாரிப்பதில் சில முறைகள் இருக்கின்றன. உதாரணமாக கான்கிரீட் கலவைக்கு சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றை 1:2:4 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இதில் சிமெண்டில் பாதி அளவுக்குத் தண்ணீர் சேர்க்க வேண்டும். அதே சமயம் பூச்சுக்குக் கலவை தயாரிக்கும்போது 1:4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஒரு மூட்டை சிமெண்டுக்கு 4 மூட்டை மணல் என்ற அளவில் கலவை இருக்க வேண்டும். இப்படிக் கலக்கும்போது அது மென்மையாக இருக்கும். இது மேல் பூச்சுக்கு உகந்ததாக இருக்கும். வெளிப்பூச்சுக்கு 1:5 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இது வெளிப்புறப் பூச்சுக்கு உகந்ததாக இருக்கும்.

சிமெண்ட் பூச்சிலும் சில முறைகள் இருக்கின்றன. எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரி இருக்கக் கூடாது. வெளிப்புறச் சுவர், உள்புறச் சுவர் போன்றவற்றுக்கு ஏற்ப சிமெண்ட், மணல் ஆகியவற்றின் விகிதம் வித்தியாசப்படும். பொதுவாக ஒரு கட்டிடத்தின் உள்புறச் சுவரின் பூச்சு வெளிப்புறச் சுவரின் பூச்சைவிட அதிகத் தரத்தில் அமைய வேண்டும். வெளிப்புறச் சுவர் சற்று சொரசொரப்பாக இருந்தால்கூடப் போதும். ஆனால் உள்புறம் சொரசொரப்பின்றி மிருதுவாக அமைய வேண்டும். ஆகவே அதற்கு ஏற்றபடி மணலையும் சிமெண்டையும் கலந்து கான்கிரீட்டை உருவாக்குகிறார்கள்.

சுவர்களின் உள்புறச் சுவரின் பூச்சுக்கு சிமெண்ட் ஒரு பங்கு என்றால் மணல் நான்கு பங்கு கலப்பதாகச் சொல்கிறார்கள். அதே நேரத்தில் வெளிப்புறச் சுவரின் பூச்சுக்கு சிமெண்ட் ஒரு பங்கு போடும்போது மணலை ஐந்து பங்கு போடுவதாகச் சொல்கிறார்கள் இத்தொழிலில் ஈடுபட்டுவருபவர்கள்.

அதேபோல் சுவரின் மேலே கான்கிரீட்டால் பூசும்போது கவனமும் அவசியம். அதிக தடிமனுடன் பூசிவிட்டால் சுவருக்குப் பலம் என நினைத்துவிடக் கூடாது. போதுமான தடிமனைவிட அதிக அளவு தடிமனில் பூச்சு அமைந்தால் அதனால் சுவருக்கு பாதிப்பு தான் ஏற்படும். கான்கிரீட் பூச்சின் தடிமன் அதிகமாகிவிட்டால் நாளடைவில் சுவரில் காற்றுக் குமிழ்கள் காரணமாக விரிசல்கள் தோன்ற வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

ஹாலோ பிளாக், ப்ளை ஆஷ் கற்கள் போன்றவற்றால் கட்டப்படும் சுவரின் மேற்பரப்பு சுமார் 10 மி.மீ தடிமனில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவருக்கு இதைவிடச் சிறிது அதிக தடிமனில் பூச்சு போடப்படுகிறது. ஏனெனில் செங்கற்களின் மேற்பரப்பு மேடு பள்ளங்கள் கொண்டவையாக இருக்கும்போது தடிமன் சிறிது அதிகம் போடுவது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *