shadow

‘சர்கார்’ திரைவிமர்சனம்

விஜய்-முருகதாஸ் கூட்டணி படம் என்றாலே அது மாஸ் ஆகத்தான் இருக்கும். அதிலும் இந்த முறை சன்பிக்சர்ஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்ததால் எதிர்பார்ப்பின் அளவு உச்சத்திற்கு சென்றது. இந்த நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

இந்த படத்தின் கதை ஏற்கனவே நாம் டிரைலரை பார்த்து மற்றும் பாக்யராஜ் சொன்னது போலத்தான். அமெரிக்காவில் இருந்து தேர்தலில் ஓட்டு போட வரும் விஜய், தனது ஓட்டை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டுவிட்டது தெரிந்து நீதிமன்றம் செல்கிறார். விஜய் போலவே லட்சக்கணக்கானோர் தங்களுடைய ஓட்டும் கள்ள ஓட்டாக போடப்பட்டதாக வழக்குகள் போட, ஒட்டுமொத்த தேர்தலும் ரத்தாகிவிடுகிறது. இதனால் ஆட்சியை இழந்த ப்ழ.கருப்பையாவும், அவரது கனடா மகள் வரலட்சுமியும், விஜய்யை பழிவாங்க எடுக்கும் அதிரடி திட்டங்கள், அந்த திட்டத்தை முறியடிக்கும் கார்ப்பரேட் மூளைக்காரர் விஜய்க்கும் இடையே நடைபெறும் ஆடுபுலி ஆட்டம் தான் இந்த படத்தின் மீதிக்கதை

ஒவ்வொரு படத்திலும் அமைதியான, அழுத்தமான நடிப்பை பதிவு செய்யும் விஜய், இந்த படத்தில் கொஞ்சம் அலட்டல் மற்றும் ஓவர் ஆக்டிங் கலந்துள்ளார். கார்த்திக் மாதிரி திக்கி திணறி வசனம் பேசுவது, இரண்டு கைகளையும் விரித்து ஸ்டைல் செய்வது ஆகியவற்றை விஜய் ரசிகர்கள் மட்டுமே ரசிப்பார்கள். ராதாரவியிடம் எல்லோருக்கும் பொதுவானது குறித்து பேசுவது, பழ.கருப்பையா, வரலட்சுமியிடம் நேருக்கு நேர் சவால் விடுவது போன்ற மாஸ் காட்சிகள் இந்த படத்தை ஓரளவு தூக்கி நிறுத்துகிறது.

கீர்த்திசுரேஷ் இதேபோல் இன்னும் நாலு படங்கள் நடித்தால் அவர் பீல்ட் அவுட் ஆகிவிடுவார். ‘நடிகையர் திலகம்’ போன்ற படங்களில் அருமையாக நடித்த கீர்த்திக்கு உப்புசப்பில்லாத கேரக்டரை கொடுத்து இயக்குனர் பழிவாங்கிவிட்டதாகவே தெரிகிறது.

வரலட்சுமிக்கு நல்ல அழுத்தமான நெகட்டிவ் வேடம். விஜய்க்கு நிகரான கேரக்டரில் நடிப்பில் அசத்தியுள்ளார். அவரது கெத்தான நடிப்பு மிரட்டுகிறது. அரசியல்வாதி கேரக்டர்களில் நடித்திருக்கும் பழ.கருப்பையா, ராதாரவி கேரக்டர்கள் ஓகே ரகம். ஒருசில காட்சிகளில் வந்தாலும் யோகிபாபுவின் காமெடி சூப்பர்

இந்த படத்தை ஆங்காங்கே தூக்கி நிறுத்துவது ஜெயமோகனின் கூர்மையான அரசியல் வசனங்கள் தான். மக்களை திசைதிருப்ப இன்னொரு பிரச்சனை போதும்’, ;நெகடிவ்வா சொன்னால்தான் ஒரு விஷயம் மக்களை போய்ச்சேருகிறது’, ‘எதிர்க்க ஆளே இல்லை என்று இறுமாப்புடன் இருப்பதுதான் ஜனநாயகத்தின் முதல் பலவீனம் போன்ற வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன. இசை ஏ.ஆர்.ரஹ்மானா? என்ற சந்தேகம் படம் பார்க்கும்போது ஏற்படுகிறது. மெர்சலில் மிரட்டிய ரஹ்மான், இந்த படத்தில் இருப்பதே தெரியவில்லை

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகள் சூப்பர். கிரிஷ் கங்காதரன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத்துக்கு வாழ்த்துக்கள்.

துப்பாக்கி, கத்தி போன்ற ஷார்ப்பான விறுவிறுப்பான திரைக்கதை இந்த படத்தில் மிஸ்ஸிங். திருப்புமுனை இல்லாமல் திரைக்கதை ஒரே நேர்கோட்டில் செல்கிறது. ஒரே வாரத்தில் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆவது, 210 தொகுதிகளில் 210 சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவது, ஒரு அமெரிக்க ரிட்டன் தர லோக்கலில் தெருவில் சண்டை போடுவது என நம்ப முடியாத, நம்பகத்தன்மையில்லாத காட்சிகள் அதிகம். விஜய் படம் என்றாலே குழந்தைகள் ரசிக்கும் வகையில் காமெடி இருக்கும். இந்த படத்தில் ஒருசில காமெடிகளே உள்ளது. அதேபோல் பெண்கள் ரசிக்கும் காட்சிகளும் இந்த படத்தில் மிஸ்ஸிங். மொத்தத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத சர்கார் தான் இந்த சர்கார்

2/5

Leave a Reply