shadow

சர்காரை வெற்றி பெற செய்த அ.தி.மு.க.வுக்கு நன்றி: ராதாரவி

சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டும் இன்னும் பிரச்சனைகள் முழுதாக முடிவடையாத நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ராதாரவி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

சர்கார் திரைப்படத்தில் வரும் காட்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த காட்சிகள் உண்மையாகிவிட்டது. எதிர்ப்பு வந்ததால் தான் சர்கார் திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. எனவே சர்காரை வெற்றி பெற செய்த அ.தி.மு.க.வுக்கு நன்றி என்று கூறிக்கொள்கிறேன்.

அந்த காட்சிகளை தி.மு.க எதிர்க்கவில்லை. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் கோமளவள்ளி இல்லை. அவரது பெயர் ஜெயலலிதா என்பது தான் எனக்கு தெரியும். திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதை நான் வரவேற்கிறேன். ஏனெனில் எந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன என்பதை அறிய ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை திரைப்படத்தை பார்ப்பார்கள். இதுவே இப்படத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

எம்.ஜி.ஆர் என்ற நடிகரால் வந்த கட்சி அ.தி.மு.க. என்பதால், நடிகர் விஜய்யின் வளர்ச்சியை கண்டு அக்கட்சியினர் பயப்படுகின்றனர். ஆனால் தி.மு.க.வுக்கு யாரையும் கண்டு பயமில்லை. ரஜினி, கமல், விஜய், என யாராக இருப்பினும் அரசியலுக்கு வரலாம். யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள் தான் ஆட்சிக்கு வரவேண்டும்.

கடந்த 50 ஆண்டு கால பாரம்பரியமும், உண்மையான தொண்டர்களை கொண்ட கட்சியாகவும் தி.மு.க திகழ்கிறது. நாங்கள் நடிகர் சங்கத்தில் இருந்தபோது, 6 நடிகைகள் மீது விபசார வழக்கு போடப்பட்டது. அந்த நடிகைகளுக்கு நடிகர் சங்கம் முழு ஒத்துழைப்பு அளித்து அந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தது.

ஆனால் தற்போது மீ டூ விவகாரத்தில் நடிகர் சங்கம் ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு என யாராவது ஒரு தரப்பினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அல்லது அவர்களை சமரசம் செய்து வைக்க முன்வர வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத நடிகர் சங்க தலைவர் நாசர் போன்றவர்கள் சங்க நிர்வாகியாக இல்லாமல் வெறும் நடிகராகவே இருந்து விட்டு செல்லலாம்.

ஆளுங்கட்சியின் ஆட்சி காலம் இன்னும் 2½ ஆண்டு காலம் மீதமுள்ள நிலையில், ஆட்சியை கலைத்து விடுவார்களோ என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. தற்போது நாடகங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை குறையவில்லை. தற்போது நான் ஒரு நாடகத்தில் இ.பி.கோ. கேசவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்.

டிராபிக் ராமசாமி போன்ற பொதுநல தொண்டன் கதாபாத்திரத்தினை கொண்ட நகைச்சுவை மற்றும் கருத்து நிறைந்த நாடகத்தை காண அதிக ரசிகர்கள் வருகின்றனர். அறிவியல் வளர்ச்சி காரணமாக நாடகக்கலை நலிவுறவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply