கோவை சரளா என்னை நேர்காணல் செய்வதா? கமல் கட்சியில் இருந்து விலகிய குமரவேல் பேட்டி

கமல் கட்சியில் இருந்து இன்று விலகிய குமரவேல் தான் ஏன் அக்கட்சியில் இருந்து விலகினேன் என்பதற்கு விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:

கட்சியில் நடக்கும் அனைத்தும் முரண்பாடாகவே நடந்து வருகிறது. திடீரென யாருக்கும் தெரியப்படுத்தாமல் கட்சியின் துணைத் தலைவரை அறிவிக்கிறார்கள். கட்சிக்குள்ளேயே கமல்ஹாசனை சந்தித்துக் கொள்ள முடியாதவாறு அரண் அமைக்கின்றனர். அவருக்கு பிடித்தவர்கள் மட்டுமே அவரை சந்திக்க முடியும். பேச முடியும். கமலும் அவர்கள் கூறும் தவறான அரசியல் பாதையை பின்பற்றி கட்சி முடிவுகளை எடுக்கிறார். அதில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை. மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் இன்னும் வேட்பாளர் தேர்வு கூட நடைபெறவில்லை. இதுபோன்ற மந்தமான கட்சி நிர்வாகம்தான் நடக்கிறது.

கட்சிக்குள்ளேயே சில பிளவுகளை வகுத்துள்ளனர். மேலாண்மைக் குழு, நிர்வாகக் குழு என இரண்டாகப் பிரித்துள்ளனர். அதில் மேலாண்மைக் குழுக்களுக்கு மட்டும்தான் முடிவெடுக்கும் பொறுப்புகள் மற்றும் கட்சியின் முடிவுகள் நேரடியாக சென்றடையும் வழிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மேலாண்மைக் குழுவில் ஒருவர் கூறியதையடுத்தே கடலூரில் களப்பணியாற்ற முகநூலில் அழைப்பு விடுத்தேன். அது தவறு என்று சுட்டிக்காட்டியதால் கமலை நேரடியாகச் சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டேன். கட்சியில் இணைந்து ஒரு வாரமே ஆன கோவை சரளா வேட்பாளர்களுக்கான நேர்காணலில் கேள்வி கேட்கிறார். வீட்டிற்குச் சென்றால், கோவை சரளா நேர்காணல் செய்யப்படுவதற்காகத்தான் நீ அரசியலுக்குப் போனாயா என என் மனைவி கேட்கிறார். எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை

இவ்வாறு குமரவேல் கூறினார்

Leave a Reply