கோமாளி: திரைவிமர்சனம்

சிறுவயதில் இருந்தே ஜெயம் ரவியும், யோகி பாபுவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ஸ்கூலில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இதே ஸ்கூலில் சம்யுக்தா ஹெக்டே சேருகிறார். இவரை பார்த்தவுடன் ஜெயம் ரவிக்கு பிடித்து விடுகிறது. இவரிடம் தன்னுடைய காதலை 1999ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி சொல்ல செல்கிறார்.

அப்போது ரவுடியாக இருக்கும் கே.எஸ்.ரவிகுமாரால் ஜெயம் ரவிக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. இதில் ஜெயம் ரவி கோமா நிலைக்கு செல்கிறார். 16 வருடங்களுக்கு கோமாவில் இருந்து விடுபடுகிறார்.

கோமாவில் இருந்து எழுந்த ஜெயம் ரவிக்கு எல்லாம் புதுசாக இருக்கிறது. இதிலிருந்து ஜெயம் ரவியின் வாழ்க்கை மாறுகிறது. இதன்பின் என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்தார். எப்படி வாழ்க்கை சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி இரண்டு காலகட்டங்களுக்கு ஏற்றார் போல் திறமையாக நடித்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ்சாக சிறுவயதில் தொலைத்த பல்வேறு விஷயங்களை தற்போது தேடி அலையும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். சில குறும்பு காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அவருக்கு போட்டியாக யோகி பாபு வேற லெவலில் காமெடி செய்துள்ளார்.

நாயகிகளாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், மற்றும் சம்யுக்தா ஹெக்டே இருவரும் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். தன்னுடைய அனுபவ நடிப்பால் கவர்ந்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

16 வருடமாக கோமாவில் இருந்த 90-ஸ் கிட் திடீரென்று தற்போது நவீன உலகத்தில் கண்முழித்து பார்க்கும்போது அவர் காணும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார். மேலும், 90ஸ் கால கட்டத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கையை தற்போது 2கே வாழும் வாழ்க்கை முறையையும் எப்படி அவருக்கு மாற்றத்தையும் வலியை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன். நவீனம் என்ற பெயரில் நாம் எவற்றையெல்லாம் துளைத்துள்ளோம் என்பது நமக்கு உணரவைக்கிறது.

படத்தின் மிகப்பெரும் பலம் ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை. ஆனால், பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ரிச்சர்ட் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கோமாளி’ காமெடி கலாட்டா.

ரேட்டிங்: 4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *