கோடையில் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்

கோடை விடுமுறையை குழந்தைகள் குஷியாக கொண்டாடி மகிழ பெற்றோர் அவர்களை அனுமதிக்க வேண்டும். அதேவேளையில் ஒருசில விஷயங்களில் கவனமாகவும் இருக்க வேண்டும்.

* விடுமுறை காலம் என்பதற்காக தூங்கும் நேரத்தை வரைமுறைப்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது. பள்ளி நாட்களில் தூங்க செல்லும் நேரத்தையும், காலையில் எழும் நேரத்தையும் வழக்கமாக கடைப்பிடிப்பது போல் இப்போதும் தூங்கும் நேரத்தையும், விழிக்கும் நேரத்தையும் முறைப்படுத்த வேண்டும். விடுமுறை என்பதற்காக இரவில் அதிக நேரம் கண் விழித்து விளையாட அனுமதிக்கக்கூடாது. உடல் புத்துணர்ச்சி பெறவும், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடவும் போதுமான தூக்கம் அவசியம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.

* விடுமுறை நாட்களில் வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் மாறுதல் ஏற்படுத்திவிடக்கூடாது. குழந்தைகள் சீரான இடைவெளியில் உணவு உட்கொள்வதுதான் செரிமானத்திற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. அவர்களுடைய அறிவையும், திறமையையும் மேம்படுத்த ஆரோக்கியமான உணவு அவசியமானது.

* சுகாதாரம் மற்றும் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க குழந்தைகளை பழக்கப் படுத்த வேண்டும். சாப்பிடும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும் கை களை கழுவும் பழக்கத்தை கட்டாயப்படுத்த வேண்டும். சுகாதாரத்தை பேணுவது பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

* செல்போனிலோ, டி.வி.யிலோ பிள்ளைகள் வீடியோ கேம் விளையாடும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். அது அவர்களுடைய உடல் இயக்க செயல்பாட்டை அதிகப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியையும் உயர்த்தும்.

* சிறுவயது முதலே சர்க்கரையின் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். சர்க் கரையை அதிகமாக உட்கொள்ளும்போது கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியை உடல் இழந்து பலவீனமாகிவிடும்.

* குழந்தைகள் தொலைக்காட்சி அல்லது கணினிக்கு முன்னால் அதிகநேரம் உட்கார்ந்தால் மந்த உணர்வு ஏற்பட்டுவிடும். அதனால் உடல் நலத்திற்கும் தீங்கு ஏற்படும். டி.வி.யோ, வீடியோ கேமோ விளையாடிக்கொண்டே சாப்பிடவும் கூடாது.

* குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை வெளிப் படுத்தும் களமாக அவர்களின் கோடை விடுமுறையை மாற்ற வேண்டும். ஓவியம் தீட்டும் வகையிலான புத்தகங்களை வாங்கிக்கொடுத்து பயனுள்ள பொழுதுபோக்காக மாற்றிவிடலாம். கலர் பென்சில்களும், கிரையான்களும் அவர்களுடைய கண்களுக்கும், கைவிரல்களுக்கும் மனதை ஒருமுகப்படுத்தி சிந்தனையாற்றலை வெளிப்படுத்தும் சக்தியை கொடுக்கும்.

*களிமண், வண்ண காகிதங்கள், கத்திரிக்கோல், தெர்மாக்கோல் போன்றவைகளை வாங்கிக்கொடுத்தும் அவர்களுடைய கலைத்திறனை வெளிப்படுத்தலாம். படிப்பு சார்ந்த படைப்புகளை உருவாக்குவதற்கு கட்டாயப்படுத்தாமல் வீட்டு அலங்கார பொருட்களை தயார் செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். அவர்களும் ஆர்வமாக கலைப்பொருட்கள் உருவாக்கத்தில் ஈடு படுவார்கள்.

* இணையதளங்களில் குழந்தைகளின் படைப்பு திறனை மெருகேற்றும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை வீடியோ காட்சிகளாக பதிவேற்றம் செய்து காண்பித்து அவர்களிடம் கலை ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம்.

* விடுமுறை நாட்களில் வீட்டு தோட்டம் அமைப்பதற்கும் ஊக்கப்படுத்தலாம். செடிகள் வளர்க்கும் ஆர்வத்தை துளிர்விட செய்து பள்ளிக்கூடம் தொடங்கிய பிறகும் அதில் கவனம் பதிக்க செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *