கோடையில் ஏற்படும் வியர்வை தொல்லை: தப்பிப்பது எப்படி?

கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க உடலின் ஏர்கண்டிஷன் ஆப்பாக வியர்வை செயல்படுகிறது. வியர்வைக்கு வாசம் இல்லை. ஆனால் சருமத்தின் மீது படிந்து காற்றில் உலரும் போது பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் வாசனை துர்நாற்றமாக உணரப்படுகிறது. அதை தடுக்க விலை உயர்ந்த பர்ஃபியூம்கள் பயன்படுத்தினாலும் சிறிது நேரத்தில் மீண்டும் பழைய வாசனை உடலிலிருந்து வெளிப்படுவதை தவிர்க்க இயலாது.

பெரும்பாலான நேரம் குளிர் சாதன அறையில் இருப்பவர்களுக்கு வியர்வை வெளியேறாத காரணத்தால் உடல் உபாதைகள் உருவாக்கக்கூடும். அதே சமயம் அதிகப்படியாக வியர்வை வெளியேறுவதால் துர்நாற்றம் ஏற்படும். இந்த நிலையில் ஆரோக்கியத்தை காக்கவும், துர்நாற்றத்தை தவிர்க்கவும் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதற்கான குறிப்புகளை பார்க்கலாம்.

தினமும் இருமுறை குளிக்கலாம். வாசனை சோப்புகளை தவிர்த்து கிருமிகளை நீக்கும் சோப்பு வகைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம். குளித்தவுடன் அக்குளை நன்றாக துடைத்த பின்னர் ஆடை அணிய வேண்டும். மாதம் இருமுறை அல்லது கட்டாயம் ஒரு முறை அக்குளில் வளர்ந்த முடிகளை அகற்றும் பழக்கம் அவசியம். இறுக்கமான ஆடைகளை அணியாமல் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம்.

கிருமிகளை விரட்டி அடிக்க உதவும் வேப்பிலையை கொதிநீரில் போட்டு அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து கொள்ளலாம். தர்பூசணி போன்றவற்றை உட்கொண்டாலும் நீர்ச்சத்து அதிகரித்து வியர்வையை கட்டுப்படுத்தும்.

சந்தனத்தை நீர் விட்டு குழைத்து தினமும் இரவு நேரத்தில் அக்குளில் தடவலாம். சந்தனப்பொடியை பன்னீரில் குழைத்தும் அக்குளில் பூசிக்கொளள்லாம். இரவு குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் வராது.

கீரைகள், ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம் ஆகியவற்றை சாப்பிட்டால் அவற்றில் உள்ள நார்ச்சத்து காரணமாக வியர்வை வெளியேற்றம் குறையும். உடலில் அதிக வியர்வை சுரக்கும் பகுதிகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி, பவுடர் பூசிக்கொள்ளலாம். நீரில் கிருமி நாசிகள் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் விலகிவிடும்.