shadow

கேரளக் கட்டிடக் கலைகளின் தனித்துவம்

இந்தியக் கட்டிடக் கலை மரபில் கேரளக் கட்டிடக் கலைக்குத் தனித்த இடமுண்டு. இந்தப் பகுதியில் கேரளக் கட்டிடக் கலை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறோம். வாசகர்கள் கடிதங்கள் வழியாக அந்தக் கட்டிடக் கலை பற்றி மீண்டும் விரிவாக எழுத வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதன் பெயரில் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம்.

மரபைப் போற்றும் இந்தப் பண்பு கேரளத்தின் கட்டிடக் கலையிலும் பிரதிபலிக்கிறது. புதிதாகக் கட்டப்பட்டுவரும் வில்லாக்கள், வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கேரளத்தின் மரபான கலையை உள்வாங்கிக் காலத்தின் கண்ணாடியாக எழுந்து நிற்கின்றன.

கேரளத்தின் கட்டிடக் கலையைப் பொறுத்தமட்டில் அது பலவிதமான கலைகளை உள்வாங்கிக்கொண்டது. திராவிடக் கட்டிடக் கலை, போர்த்துக்கீசியக் கட்டிடக் கலை, யூதக் கட்டிடக் கலை, பிரஞ்சுக் கட்டிடக் கலை, பிரிட்டிஷ் கட்டிடக் கலை எனப் பல கட்டிடக் கலையின் ஒருங்கிணைவைப் பார்க்க முடியும்.

கேரளக் கட்டிடக் கலை, அப்பிரதேசத்தின் இயற்கைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த பிரதேசம். ஒரு பக்கம் அரபிக் கடல். எப்போதும் மழை பெய்யும் பிரதேசம். அதனால் கேரளத்தின் வீடுகள் தாழ்வாகக் கட்டப்பட்டுவருகின்றன. அது போல நேரடி வெளிச்சம் உள்ளே நுழையும் படியும் கட்டப்படும்.

கேரளக் கட்டிக் கலையின் முக்கியமான அம்சம் அதன் கோயில் கட்டிடக் கலை. அது தென்னிந்தியக் கோயில் கட்டிடக் கலையில் இருந்து வேறுபட்டது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மட்டும் தென்னிந்தியக் கட்டிக் கலையைச் சார்ந்தது. கேரளத்தின் மற்ற கோயில்கள் அதன் தனித்தன்மை வாய்ந்த கட்டிடக் கலையைப் பிரதிபலிப்பவை.

தமிழ்நாட்டுக் கட்டிடக் கலையிலும் கோயில்களுக்கு முக்கியமான அம்சம் உண்டு. என்றாலும் தமிழ்நாட்டு வீடுகள் கோயில் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. ஆனால் கேரளத்தின் வீடுகள் கோயில் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவை. கேரளத்தின் வீடுகள் சாதியை அடிப்படையாகக் கொண்டு தரவாடு, இல்லம், கோவிலகம், கொட்டாரம், மேடை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இந்த வீட்டுக் கட்டிடக் கலையில் பிரபலமானது ‘நாலுகெட்டு’ வீடு.

அது பலவிதமான உள்ளடுக்குகளைக் கொண்டது. இப்போது இந்தக் கட்டிடப் பாணியை மையமாகக் கொண்டு வில்லாக்கள் கட்டப்பட்டுவருகின்றன. ‘நாலுகெட்டு’ வீடு என்பது நான்கு புறம் சதுர வடிவில் கட்டப்பட்டு நடுவில் வானவெளி உள்ள வீடு. அதன் நான்கு புறமும் வாசல்கள் இருக்கும். வடக்கினி,தெக்கினி, கிழக்கினி, படிஞ்சாட்டினி என அந்த நான்கு வாசல்களும் அழைக்கப்படும்.

இதிலும் பல விதமான அம்சங்கள் உண்டு. படிப்புரா, பூமுகம், சுற்று வெரந்தா, சாருபடி, ஆம்பல் குளம், நடு முற்றம், பூஜை அறை ஆகிய பகுதிகள் அடங்கியிருக்கும். படிப்புரா என்பது வீட்டின் வெளிப்புறச் சுவரின் நுழைவு வாசலின் இருபக்கமும் உள்ள தூண். இரு தூணும் மேல் பகுதி, கேரளக் கோயிலின் கட்டிடக் கலையைப் போன்று இணைந்திருக்கும். வீட்டுக்குக் கம்பீரமான அழகைத் தரும் இந்த அமைப்பு வீட்டுக்கு வருபவரைக் கைகூப்பி வணக்கம் செலுத்தும் வண்ணம் இருக்கும்.

பூமுகம் என்பது வீட்டின் முன்புறப் பகுதி. முன்பகுதியில் வண்டிகளில் வந்து இறங்குவதற்குத் தோதான இட வசதி கொண்டது. அது போல வீட்டின் பெரியவர் முன்புறம் அமர்வதற்கான சாய்வு நாற்காலி இந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும். இப்போது கட்டப்பட்டுவரும் வீடுகளில் இந்த அமைப்பைக் காண முடியும்.பூமுகத்தில் இருந்து நான்கு புறமும் பிரிந்து செல்லும் வெளிச்சுற்று வரந்தா என அழைக்கப்படுகிறது. இதுவும் கோயில் கட்டிடக் கலையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

சாருபடி என்பது கேரளத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிட அமைப்பு. சுற்று வரந்தாவைச் சுற்றி மரத்தால் வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த அமைப்பு வீட்டுக்கு அழகைக் கொண்டுவரும். இதன் வழியாக வரும் சூரிய ஒளி வீட்டுக்கு ஆரோக்கியத்தையும் வெளிச்சத்தையும் கொண்டுவரும். ஆம்பல் குளம் என்பது வீட்டுக்குள்ளேயே அமைந்த குளம் இது. சுற்று வரந்தாவில் இருந்து இறங்கிச் செல்லும் படிகள் இந்தக் குளத்தை வந்தடையும். குளத்தில் ஆம்பல் மலர்கள் பூத்திருக்கும் என்பதால் ஆம்பல் குளம் என அழைக்கப்படுகிறது.

நடு முற்றம் என்பது வீட்டின் நடுவில் உள்ள வானவெளி. வெயிலும் மழையும் இந்த நடு முற்றத்தில் விழுந்து வீட்டுக்கு இயற்கை சக்தியைக் கொண்டுவரும். நாலுகெட்டு வீட்டின் வடகிழக்கு மூலையில் பூஜை அறை அமைக்கப்பட்டிருக்கும். உள்ளே சிலைகள் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதி பூஜை அறை. நாலு கெட்டு வீடு போல எட்டு கெட்டு வீடும், பதினாறு கெட்டு வீடும் உள்ளது. இன்றைக்குள்ள இளம் தலைமுறையினர் இது போன்ற மரபான கட்டிடக் கலையில் ஆர்வம் காட்டிவருவதால் இந்தக் கட்டுமானம் இன்று கேரளத்தில் பிரபலமாகிவருகிறது.வீடுகள் வெறும் சுவர்கள் அல்ல என்பதையும் இந்தக் கட்டிடக் கலை உணர்த்தி வருகிறது.

Leave a Reply