கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை

தலைக்கு விதவிதமா கலரிங் செய்து கொள்ள வேண்டும், பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று டீன் ஏஜ் வயதினருக்கு ஆசை. நரை முடி மறைக்க வேண்டும், இளமையாய் தெரிய வேண்டும் என நடுத்தர வயதினருக்கு ஆசை. இப்படி அழகுக்காக செய்து கொள்வதால், அதன் பின்விளைவுகளைப் பற்றி நாம் யோசிப்பதில்லை.

டைகளில் உள்ள கெமிக்கல் தலையிலுள்ள சருமத்திற்கு ஒரு அந்நிய உணர்வை தருகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு செல்கள் உடனே டை பட்ட இடங்களுக்கு விரைந்து வந்து தங்கள் எதிர்ப்பை காட்டுகின்றன, இதன் விளைவே அலர்ஜி மற்றும் எரிச்சல் உண்டாகக் காரணம்.

எப்போதெல்லாம் தலை சருமம் எரிச்சலை உண்டுபண்ணும் என்று கவனித்தீர்களேயானால், அடிக்கடி தலைக்கு அடிக்கும் நிறத்தினை மாற்றும்போது, இல்லையென்றால் வேறு வேறு பிராண்டை மாற்றும்போது, தரம் குறைந்த டை உபயோகப்படுத்தும் போது, திடீரென சருமத்தினால் ஏற்றுக் கொள்ளாமல் அதன் எதிர்ப்பை காட்டுகின்றது.

அதேபோல் சருமம் ஹெல்தியாக இல்லாமல் இருந்தால், பொடுகு மற்றும் ஸ்கால்ப் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், டை உபயோகப்படுத்தும்போது இன்னும் பாதிக்கும். எனவே ஸ்கால்ப் பிரச்சனைகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை ஆலோசித்தபின் டை உபயோகிப்பது நல்லது. இல்லையெனில் அது சருமத்தில் வேறுவிதமான பிரச்சனைகளை கொண்டு வரும்.

எந்த கலரிங் டை யும் டெஸ்ட் பண்ணிவிட்டே உபயோகப்படுத்த வேண்டும். டையை சிறிதளவு பின்னங்கையில் தேய்த்து சில நிமிடங்கள் பாருங்கள். அங்கே எரிச்சலோ, சிவந்து தடிப்போ ஏற்பட்டால், அந்த டையை உபயோகப்படுத்தக் கூடாது என நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது: சிலர் ஹேர் டையை தலையில் போட்டுவிட்டு அவர்கள் வேலையை பார்ப்பார்கள். அது முழுவதும் காய்ந்த பின் அலசுவார்கள். இது மிகவும் தவறு. கலரிங்க் டை பாக்கெட்டுகளில் எத்தனை நிமிடங்கள் வைத்திருக்க சொல்லியிருக்கிறதோ அதன்படிதான் செய்ய வேண்டும். அதற்கு மேல் வைத்திருக்கக் கூடாது.

நீங்கள் பியூட்டி பார்லரில் சென்று கலரிங்க் அடித்துக் கொள்கிறீர்களேயானால், அவரிடம் உங்களுக்கு ஸ்கால்ப் பிரச்சனை ஏதும் இருந்தால் சொல்லிவிட வேண்டும். இதனால் சருமப் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

நிறைய பேர் டையை ஸ்கால்ப்பினை ஒட்டி தடவுவார்கள். அது மிகவும் தவறு. ஸ்கால்ப் முடியின் வேர்க்கால்களுக்கு மிக அருகில் இருப்பதால், ஸ்கால்ப்பில் போடும் போது, வேர்க்கால்களை பாதிக்கும். எனவே ஸ்கால்ப்பிலிருந்து அரை இஞ்ச் தள்ளியே டையை அடிக்க வேண்டும்.

டை அடிப்பதற்கு முன் நெற்றியில், காதில் பின்னங்கழுத்தில் பெட்ரோலியம் ஜெல்லை தடவி விடுங்கள். இது டையின் கெமிக்கலை உங்கள் சருமத்தில் படாதவாறு காக்கும்.

நமது தலையில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும். அது தலைமுடிக்கு கண்டிஷனராக, ஈரப்பதம் அளித்து காக்கும். நீங்கள் தலைக்கு குளிக்கும் போது அந்த எண்ணெய் முடியிலிருந்து நீங்கி, வறண்டிருக்கும். அதன் பின் அடுத்த ஓரிரு நாளில் நீங்கள் டை அடிக்கும் போது தலைமுடி மேலும் வறண்டு போகும். ஆகவே டை அடிப்பதற்கு முன் தலைக்கு குளிக்காதீர்கள்.

தலைக்கு ஹேர் ப்ளீச் செய்த பின், ஹேர் டிரையர் உபயோகப்படுத்தக் கூடாது. இது தலையில் எரிச்சலை உண்டு பண்ணும். முடியும் அதிகமாக உடையக் கூடிய அபாயம் உண்டு.

எனவே தரமான டையினை தக்க முன்னெச்சரிகையுடன் உபயோகித்தால் கூந்தலை கெமிக்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *