கூரை அமைக்க உதவும் பலகை

வீட்டுக்கு மேற்கூரை அமைக்கும் பணி, வீட்டுப் பணிகளுள் முக்கியமானது. இதை செண்ட்ரிங் எனச் சொல்வார்கள். இந்த செண்ட்ரிங் நிறைவடைந்தால் வீட்டுப் பணி முக்கால்வாசி முடிந்த மாதிரிதான். அதனால்தான் இந்தப் பணி ஒரு திருவிழா போல் நடக்கும். அன்று மட்டும் தொழிலாளர்களுக்குச் சாப்பாடு, தின்பண்டங்கள் எல்லாம் வேலை செய்யும் இடத்துக்கே தருவித்து விடுவார்கள்.

வேலை நேரத்தைச் சேமிப்பது ஒரு காரணமாக இருந்தாலும் வீட்டு உரிமையாளர்களே மனமுவந்து இதைச் செய்வார்கள். இடும் கான்கிரீட்டைத் தாங்கிப் பிடிப்பதற்காகப் பலகை அடைப்பது மரபான வழக்கம். ஆனால் இப்போது இரும்புத் தகடுகளைப் பயன்படுத்துவதும் அதிகரித்துவருகிறது. இந்த இரண்டும் அல்லாமல் இப்போது பிளாஸ்டிக் பலகைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பிளாஸ்டிக் பலகைகளைப் பயன்படுத்துவதில் பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. பொதுவாகப் பலகை கொண்டு சென்ட்ரிங் இடும்போது அது கான்கிரீட்டைப் பிடித்துக்கொள்ளும். பலகையைப் பிரிக்கும்போது பிசிறுகள் வரக்கூடும். அது மட்டுமல்ல பலகைகளைப் பிரிப்பது மிகச் சிரமமான காரியமாகவும் இருக்கும். இப்படிப் பலகை இடும்போது அதில் கான்கிரீட்டில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு சென்டிரிங் ஆயில் இட வேண்டும்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் இம்மாதிரியான மரப் பலகைகள் கொண்டு சென்ட்ரிங் போடும்போது அதன் மேல் புற வடிவம் நேர்த்தியுடன் இருக்காது. சொரசொரப்பான மேல் பாகத்துடன் இருக்கும். அதற்கு மேல் ஒரு சிமெண்ட் பூச்சு பூச வேண்டி வரும். பிளாஸ்டிக் பலகைகளைப் பயன்படுத்தும்போது பிசுறுகள் இருக்காது.

மேலும் இதைப் பயன்படுத்துவதால் செலவு மிச்சமாகும். எப்படியென்றால் மரப் பலகை அடைக்கும்போது இடும் சென்டிரிங் ஆயில், பிளாஸ்டிக் பலகைகளுக்குத் தேவையில்லை. அந்த வகையில் செலவு குறையும். இதில் கான்கிரீட் கலவை ஒட்டுவதில்லை. மேற்பரப்பு சமதளமாக இருக்கும். இதனால் அதற்கு மேல் சிமெண்ட் பூச்சு தேவைப்படாது. அப்படியே வீட்டுக்கு வண்ணம்கூடப் பூசிக்கொள்ளலாம்.

மரப் பலகைகள் நெருக்கமான பிணைப்பை அளிப்பதில்லை. ஒரு பலகையும் மற்றொரு பலகையும் அளவு வித்தியாசம் இருக்கும் என்பதால் சில இடங்களில் சிறிய இடைவெளி உண்டாகக்கூடும். இடையிடையே துளைகள் உண்டாகும் இதில் கான்கிரீட் கலவை வழிந்து கூரைத் தளத்துக்குப் பாதிப்பை உண்டாக்கும். பிளாஸ்டிக் பலகைகள் நெருக்கமான பிணைப்பை உண்டாக்கும்.

மேலும் பிளாஸ்டிக் பலகைகளைத் திரும்பத் திரும்பப் பலமுறை பயன்படுத்த முடியும். மேலும் எடை குறைவாக உள்ளதால் இவற்றைக் கையாள்வது எளிது. பலகைகளைப் போல் எளிதில் சேதமடையாது. இரும்புப் பலகைகள் போல் துருப்பிடிக்காது. மேலும் பிளாஸ்டிக் பலகைகள் உறுதியான, நேத்தியான கூரையைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *