குளிர்காலத்தில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்

1குளிர்காலம் ஆரம்பிக்க இருப்பதால் வீட்டையும், அதில் உள்ள பொருட்களையும் பராமரிப்பது முக்கியம். காரணம், மனிதர்களைப்போல கட்டிட அமைப்புகளும் குளிரை உணரும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அதனால் வீட்டில் உள்ள பொருட்களை அதற்கேற்ப மாற்றி அமைப்பது நல்லது. எதை தொட்டாலும் சில்லென்று இருப்பதால் வீட்டிற்குள் வெப்பத்தை நிலைக்கும்படி செய்ய வேண்டியது அவசியமாகிறது. அதற்காக செயற்கையான வழிகளை தவிர்த்துவிட்டு, இயற்கையான வழிகளை கையாண்டு குளிரை தடுப்பதற்கான குறிப்புகளை இங்கே காணலாம்.

சரியான திரைகள் :

மழை மற்றும் குளிர் காலங்களில் வீட்டுக்குள் குளிராக இல்லாமல் அறையில் வெதுவெதுப்பான வெப்ப நிலை இருக்கவேண்டுமானால் கச்சிதமான திரைகளை பயன்படுத்துவது அவசியம். சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் எந்தெந்த ஜன்னல்கள் வழியாக வருகிறதோ அவற்றை சரியாக தேர்ந்தெடுத்து, அங்கு மெல்லிய திரைகளை பயன்படுத்தலாம். மற்ற ஜன்னல்களுக்கு சற்றே கெட்டியான துணிகளால் ஆன திரைகளை பயன்படுத்துவது நல்லது.

ஜன்னல்கள் கவனம் :

குளிர் கால இரவு நேரங்களில் சுற்றுப்புற வெப்ப நிலை குறைவாக இருப்பதோடு, குளிர் காற்றின் தாக்கம் எல்லா இடங்களிலும் பரவலாக இருக்கும். அதனால் மாலை நேரத்திலேயே ஜன்னல்களை மூடி வைத்துவிடுவதுதான் பாதுகாப்பான வழியாக இருக்கும். அதன் மூலம் குளிர் காற்று உள்ளே வருவது தடுக்கப்படுவதோடு, அறைகளுக்குள் நிலவும் வெப்பமும் வெளியேறாமல் இருக்கும். வெளிப்புற வெப்பநிலை குறையும்போது அறையின் வெப்ப நிலையை பாதுகாக்க வெளிக்காற்று உள்ளே துளியும் வராதவாறு அழுத்தமாக ஜன்னல்களை மூடி வைக்கவேண்டும். கதவுகளை அடிக்கடி திறந்து மூடுவதாலும் வெளிப்புற காற்று அறைகளுக்குள் வரும் வாய்ப்பு இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பர்னிச்சர்களை நகர்த்தவும் :

ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அருகில் உள்ள பர்னிச்சர்களை சற்று நகர்த்தி வைக்கவேண்டும். ஏனெனில் பகல் நேரங்களில் அறைக்குள் வரும் வெப்பமான காற்று தடுக்கப்படாமல் இருக்க வேண்டும். மேலும், இரவில் குளிர்ந்த காற்றின் காரணமாக அவை குளிர்ச்சி அடைந்து விடுவதோடு அறைக்குள்ளும் குளிர்ச்சியை உண்டாக்கும். அதனால் பர்னிச்சர்கள் வகைகள் எவ்வகையாக இருந்தாலும் ஈரமான மூலைகளில் இருந்து நகர்த்தி வைக்கப்படவேண்டும்.

தரைவிரிப்புகள் கவனம் :

பனிக்காலங்களில் அறைகளுக்குள் வெறும் கால்களால் நடக்காமல் வீட்டுக்குள் உபயோகப்படுத்தும் ‘ஸ்லிப்பர்’ வகை செருப்புகளை பயன்படுத்தலாம். அதன் காரணமாக தரையின் குளிர்ச்சியனது சுலபமாக உடலுக்குள் கடத்தாமல் தடுக்கப்படும். மேலும் அறைகளுக்கு கச்சிதமாகவும், சரியான வண்ணத்துடனும் இருப்பது போன்று கெட்டியான கம்பளம் அல்லது தென்னை நாரால் செய்யப்பட்ட ‘புளோர் மேட்’ ஆகியவற்றை பயன்படுத்தலாம். குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி புழங்கும் அறைகளிலும் கெட்டியான ‘மேட்’ விரித்து வைக்கலாம். அவ்வாறு செய்யும்போது உடல் வெப்பத்தை தரைத்தளம் உறிஞ்சி விடாமல் பாதுகாக்கப்படுகிறது.

உறைகள் அவசியம் :

ஹால் உள்ளிட்ட மற்ற அறைகளின் ‘பர்னிச்சர்’ மற்றும் ‘சோபா செட்கள்’ ஆகியவற்றுக்கு கம்பளி அல்லது அழுத்தமான ‘காட்டன்’ துணியால் தயாரிக்கப்பட்ட மேல் உறைகளை பயன்படுத்தி மூடி வைக்க வேண்டும். அதன் மூலம் அவற்றை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும்போது வெதுவெதுப்பாக இருக்கும்.

மெழுகுவர்த்திகள் ஏற்றலாம் :

அதிக குளிராக உணரும் சமயங்களில் படுக்கையறை உள்ளிட்ட மற்ற அறைகளில் பெரிய அளவிலான மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கலாம். அதனால் குளிர்காலத்தில் ஏற்படும் மந்தமான சூழ்நிலை தவிர்க்கப்படுவதோடு, அறை வெளிச்சமும் வெப்பமும் கூடிய இடமாக இருக்கும். இம்முறை இயற்கையாக இருப்பதோடு அதிக செலவும் ஆகாத வழியாக இருப்பதால் சுலபமாக எல்லோருமே இந்த முறையை கையாண்டு குளிரை விரட்டியடிக்கலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *