குளியலறைக்குப் பொருந்தும் தரைத்தளங்கள்

குளியலறையின் தரைத்தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, பார்க்க அழகாக இருக்கிறதா என்பதை மட்டும் வைத்துத் தேர்ந்தெடுக்காமல் அது நடைமுறைக்கு ஏற்றதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். குளியலறைத் தரைத்தளத்தைப் பலவிதமான பொருட்களில் அமைக்க முடியும். ஆனால், அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அவற்றின் சாதக, பாதகங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. குளியலறை தரைத்தளத்தை அமைப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.

தரைத்தளத்தின் வண்ணம்

தரைத்தளத்திற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம்தான் குளியலறையின் அழகைப் பறைசாற்றும். வண்ணமும் வடிவமைப்பும் குளியலறைக்கு மிகவும் முக்கியம். குளியலறை பெரிதாக இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க மென்மையான, வெளிர் நிறங்களைப் பயன்படுத்தலாம். பளிங்கு, வெள்ளை, பழுப்பு, மென் சாம்பல் போன்ற வண்ணங்கள் தரைத்தளத்துக்கு ஏற்றதாக இருக்கும். அடர் நிற அடர் சாம்பல், கறுப்பு போன்ற அடர்நிறங்களையும் பயன்படுத்தலாம். இது குளியலறைக்கு வசதியான, பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்கும்.

சின்னதைப் பெரிதாக்கலாம்

ஒருவேளை குளியலறை சிறியதாக இருந்தால், தரைத்தளத்தின் டைல் குளியலறை சுவரின் நிறத்தோடு ஒத்துப்போகும்படி அமைக்கலாம். அத்துடன் குளியலறையில் பெரிய கண்ணாடியை மாட்டி வைக்கலாம். இவை சிறிய குளியலறையைப் பெரிதாகக் காட்டும். குளியலறை தரைத்தளத்தில் பெரிய டைலைப் பயன்படுத்துவதும் தோற்றத்தைப் பெரிதாகக்காட்டும். ஆனால், பெரிய டைல் சற்று விலை உயர்ந்ததாகவும், அமைப்பதற்குக் கடினமானதாகவும் இருக்கும்.

எது பாதுகாப்பான தரைத்தளம்?

குளியலறைக்குத் தரைத்தளம் அமைக்கும்போது அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டியது அவசியம். தரைத்தளம் வழுக்கும் தன்மையுடன் இல்லாமல் சற்று கடினமானதாகவும், சொரசொரப்பாகவும் இருக்கும்படி பார்த்து அமைக்கவேண்டும். வரவேற்பறைக்குப் பயன்படுத்தும் டைலை குளியலைறைக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் வீடுகளில் நிச்சயமாக சொர சொரப்பானதாக இருக்கும் தரைத்தளங்கள்தான் அமைக்க வேண்டும். தரைத்தளங்களில் பலவிதங்கள் உள்ளன.

மரத்தாலான தரைத்தளம்

மரத்தாலான தரைத்தளத்தைவிட மூங்கில், தேக்குப் போன்ற வன்மரத்தாலான தரைத்தளம்தான் குளியலறைக்கு ஏற்றது. இது குளியலறைக்குக் கதகதப்பையும், ஆடம்பரமான தோற்றத்தையும் கொடுக்கும். சாதாரண மரத்தாலான தரைத்தளம் தண்ணீர் படும்போது எளிதில் பாதிப்படையும். ஆனால், மூங்கில், தேக்குப் போன்றவை அவ்வளவு எளிதில் பாதிப்படையாது. நவீன குளியலறைக்கு ஏற்ற தோற்றத்தை மரத் தரைத்தளம் கொடுக்கும்.

டைல் தரைத்தளம்

டைல் தரைத்தளம் குளியலறைக்குச் செம்மையான தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால், இது மற்ற தரைத்தளங்களை ஒப்பிடும்போது சற்று விலையுயர்ந்தது. ஈரப்பதத்தால் பாதிக்கப்படாத டைல் இப்போது கிடைக்கிறது. இந்தத் டைல் தரைத்தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, வடிவமைப்பிற்குப் பலவிதமான வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல நிறங்களில், அளவுகளில் இந்த டைல் தரைத்தளத்தை வடிவமைக்கலாம். கல் போன்ற தோற்றம் கொண்ட டைல் நீண்ட நாட்களுக்கு உழைக்கும். அத்துடன், தரை வழுக்காமல் இருக்கக் சொர சொரப்பான டைல்தான் ஏற்றது.

கல் தரைத்தளம்

பளிங்கு, கிரானைட், சுண்ணாம்பு போன்ற கற்களால் ஆன தரைத்தளங்களையும் குளியலறைக்குப் பயன்படுத்தமுடியும். ஆனால், இந்தத் தரைத்தளத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் பட்ஜெட்டை முடிவுசெய்துகொள்வது அவசியம். குளியலறைக்குப் பயன்படுத்தும் இயற்கைக் கற்கள் விலையுயர்ந்ததாக இருந்தாலும் நீண்ட நாட்கள் உழைப்பவை.

தக்கை தரைத்தளம்

1960, 1970 களில், தக்கை தரைத்தளம் பிரபலம். இப்போது மறுபடியும் நவீன தரைத்தள வடிவமைப்பில் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது. இந்தத் தக்கைத் தரைத்தளம் சூழலுக்கு ஏற்றது.

ரப்பர் தரைத்தளம்

குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தும் குளியலறைக்கு ரப்பர் தரைத்தளத்தைப் பயன்படுத்தலாம். இந்தத் தரைத்தளத்தைச் சுத்தப்படுத்துவதும் எளிமையானது. இது நீர் புகாமலும், வழுக்காமலும் இருக்கும். அதனால் குழந்தைகளும் வயதானவர்களும் பாதுகாப்பாக இதைப் பயன்படுத்தலாம். இந்த ரப்பர் தரைத்தளத்தில் மரம், கற்கள் போன்ற பொருட்களில் நகல் தோற்றத்தையும் உருவாக்க முடியும்.

கான்கிரீட் தரைத்தளம்

கான்கிரீட் தரைத்தளம் அமைப்பதற்குப் பெரிதாக செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தத் தரைத்தளத்தை மெருகேற்றி மரம், டைல், கல் போன்ற எல்லாப் பொருட்களின் தோற்றத்தையும் கொண்டு வரமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *