குறுஞ்செயலி, மின்னூட்டி… கைப்பேசி கலைச்சொல் அறிவோமா?! – கைப்பேசிக் கலைச்சொல் அகராதி

ஏதேனும் ஒரு பொதுவிடத்தில் நின்று, அப்படியே திரும்பிப் பாருங்கள். 90 சதவிகிதம் பேர் மொபைல் போனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார்கள். பேச, எப்ஃஎம் கேட்க, வீடியோ பார்க்க, சாட்டிங் செய்ய, வாட்ஸப் என ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு தேவைக்காக மொபைலை உயிர்ப்பித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

முற்றுமுழுதாக நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்டது மொபைல் போன். வயது வித்தியாசமின்றி எல்லோரின் கரங்களிலும் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஒரு தொழில்நுட்பம் பற்றிப்பரவி வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்ட நிலையில், எந்த அளவுக்கு அதை நாம் நம் தாய்மொழியில் பயன்படுத்துகிறோம்? அதிகபட்சம் எஸ்எம்எஸ்ஸோ, வாட்ஸப்போ அனுப்ப… அதுவும் சுருக்கமாக , பாதிப் பாதி வார்த்தைகளாக.

கைபேசிக் கலைச்சொல் அகராதி

தொழில்நுட்பங்கள் மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும்தான் இருக்கும். அவற்றை தமக்குள் உள்வாங்கிகொண்டு நீடிக்கும் மொழிதான் காலம் கடந்து நிற்கும். மொபைல் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, நாம் பயன்படுத்தும் 99 சதவீத சொற்கள் ஆங்கிலத்தால் ஆனவை. அவற்றை எல்லாம் தமிழ்ப்படுத்த முடியாதா? அல்லது தமிழில் சொற்கள் இல்லையா?

2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழில் இல்லாத வார்த்தைகளே இல்லை. உலகம் கண் விழித்து வானைப் பார்க்கத் தொடங்கிய காலத்திலேயே, பூமிக்கு மேலேயும், அருகிலும் சுற்றிக்கொண்டிருக்கும் கோள்களைப் பற்றியும், அவற்றின் தன்மைகள் பற்றியும் பேசிய மொழி தமிழ். உலகம் நோயை உணருவதற்கு முன்பாகவே அந்நோய்களுக்கான சிகிச்சைகளைப் பற்றிப் பாடிய மொழி தமிழ். மொபைல் தொழில்நுட்பம் மட்டுமல்ல… அடுத்த நூற்றாண்டில் அறிமுகமாகப்போகிற தொழில்நுட்பங்களைப் பற்றியெல்லாம் நம் புலவர்களும், மகான்களும் பாடிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

ஆனால், நாமே அவற்றை உணரவில்லை. ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு என்கிற மூடநம்பிக்கைதான் அதற்குக் காரணம். தமிழில் பொறியியல் படிப்புகளை வைத்திருந்தாலும், அந்த வகுப்பறையிலும் ஆங்கிலம்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. காரணம், மாணவர்களுக்கு மட்டுமல்ல… பெற்றோருக்கும் பேராசிரியர்களுக்குமே தமிழ் மேல் நம்பிக்கையில்லை.

பொறியியலையும், மருத்துவத்தையும் இன்னபிற உயர்கல்வியையும் தமிழ் வழியில் வழங்கும் நோக்கில் பாடத்திட்டங்களையும், பாடப்புத்தகங்களையும் தயாரிப்பதற்குத்தான் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால், 35 ஆண்டுகள் கடந்தும், ஓர் அடிகூட முன்னே நகரவில்லை. தொழில்நுட்பங்களைத் தமிழ்ப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பணி இங்கு நடக்கவேயில்லை. மணவை முஸ்தபா போன்ற சில தனி நபர்களின் முயற்சியால் ஆங்காங்கே சில செயல்பாடுகள் நடந்தேறுகின்றன. அப்படியான தனிப்பட்ட ஒரு பெரு முயற்சிதான், `கைபேசிக் கலைச்சொல் அகராதி’.

சென்னை ராஜகுணா பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த அகராதியை நான்கு கல்வியாளர்கள் தொகுத்திருக்கிறார்கள். கேரள மத்தியப் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கோ.பழனிராஜன், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரி ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் லெ.ராஜேஷ், மைசூர் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன ஆராய்ச்சியாளர் மு.முகமது யூனூஸ், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிரலாளர் அகிலன் ராஜரத்தினம் ஆகியோரின் கடும் உழைப்பில் விளைந்துள்ளது இந்த அகராதி. ஒரு பல்கலைக்கழகம், ஒரு குழுவை அமைத்து, லட்சங்களில் செலவு செய்து மேற்கொள்ள வேண்டிய வேலையை இவர்கள் மிக எளிமையாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.

முதல் 110 பக்கங்களுக்கு மொபைல் சார்ந்து நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கான கலைச்சொற்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள். அடுத்த 20 பக்கங்களுக்கு தொலைத்தொடர்பை வழங்கும் நிறுவனங்களின் பெயர்கள், அந்நிறுவனங்களைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. 40 பக்கங்களுக்கு குறுஞ்செயலிகள் (ஆப்ஸ்) தொடர்பான கலைச்சொற்கள்…

புத்தகத்தில் உள்ளவற்றிலிருந்து ஒருசில தமிழ்ச்சொற்கள்;

App – குறுஞ்செயலி
Auto Start – தன்னியக்கம்
Battery – மின்கலம்
Bug – பிழை
Call setting – அழைப்பு அமைப்பு
Charger – மின்னூட்டி
Download – பதிவிறக்கம்
Media Player – ஊடக இயக்கி

தகவல் தொழில்நுட்பம் குறித்து தமிழில் மிகக்குறைவாகவே எழுதப்படுகிறது. விக்கிபீடியா போன்ற தகவல் தளங்களில் தமிழிலான கட்டுரைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. காரணம், நம் கல்வியாளர்கள், தொழில்நுட்பவாதிகள் இந்தப்பணியில் அக்கறையும் முனைப்பும் காட்டாததுதான். இந்தச் சூழலில் மிகுந்த கல்விப்பின்புலமும் ஆராய்ச்சி அறிவும் கொண்ட நான்கு பேர் இதுமாதிரியான ஒரு பணியை முன்னெடுத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. தவிர, காலத்திற்கேற்ற ஆக்கபூர்வமான பணியும்கூட.

உலக மக்கள்தொகையில் 97 சதவிகிதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். மொத்த மக்கள்தொகை 701.20 கோடி எனக் கொண்டால், ஏறக்குறைய 688 கோடி பேர். உலக அளவில் மொபைலை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இந்தியா அளவில் மொபைல் போன் அதிகம் பயன்பாட்டில் உள்ள மாநிலங்களில் உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்த நிலையில், தமிழகம் இருக்கிறது. இங்கு 7.31 கோடி மொபைல்கள் இங்கே இருக்கின்றன. இது டிசம்பர் 2016 டேட்டா. இன்று, இன்னும் பல லட்சங்கள் இந்தக் கணக்கில் சேர்ந்திருக்கும். இந்த அளவுக்கு பரவலாகப் பயன்பாட்டில் உள்ள ஒரு தொழில்நுட்பத்தைத் தமிழ்ப்படுத்த வேண்டியது காலத்தின் தேவை. அதைத் தக்க சமயத்தில் இந்தக் கல்வியாளர்கள் செய்திருக்கிறார்கள்.

கலைச்சொல் அகராதி என்பது இயல்புக்கு அப்பாற்பட்டது என்றொரு எண்ணம் இருக்கிறது. வார்த்தைகள் செயற்கையாகக் கட்டமைக்கப்படுவதாகவும் கலைச்சொல்லாளர்கள் மேல் புகார்கள் உண்டு. ஆனால் புதியதொரு தொழில்நுட்பத்தை நம் மொழிக்கேற்ப வடிவமைக்கும்போது அப்படியான தன்மையைத் தவிர்க்க முடியாது. எந்த அளவுக்குக் கலைச்சொற்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன என்பதைவிட, அவற்றை நம் மொழியில் பதிவு செய்து வைக்கவேண்டும் என்பது முக்கியமானது. மூன்றாம் பாலினத்தவரை வெவ்வேறு அவமானகரமான பெயர்களால் அழைத்துக்கொண்டிருந்தபோது, `திருநங்கை’ என்ற அழகான கலைச்சொல்லை அறிமுகம் செய்தார் `திருநங்கை’ நர்த்தகி நட்ராஜ். இப்போது அரசுப் பதிவேடுகள் வரைக்கும் அந்தச் சொல் ஏறிவிட்டது. `கம்ப்யூட்டர்’ என்ற சொல்லை `கணினி’ என்று தமிழ்ப்படுத்திய காலத்தில் ஏளனம் செய்தவர்கள் எல்லாம் இப்போது அந்தச் சொல்லைத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆழ வேர்பாய்ச்சி, காலம் கடந்து நிற்கிற மொழி தன்னைத்தானே தகவமைத்துக்கொள்ளும். ஆனால், அதற்கான சில சூழல்களை நாம் உருவாக்கித் தரவேண்டும். அப்படியான ஏற்பாடுகள்தான் கலைச்சொல் அகராதிகள். காலம் கடந்து அதே அழகோடும் இளமையோடும் புத்துணர்வோடும் தமிழ் செழிக்க இந்தக் கைப்பேசிக் கலைச்சொல் அகராதி உரமாக இருக்கும். தொகுப்பாளர்களுக்குப் பாராட்டுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *