shadow

குரல் வளம் அருளும் குடுமிக்கார குமரன்!

உலகின் இயக்கத்துக்கு அடிப்படை ஓசை. காற்று, அலை, அருவி, பறவைகள், மனிதர்கள் போன்ற உயிரினங்கள் என இயற்கையின் படைப்புகள் முதல் இசை, நாதம், தாளம் என மனிதன் படைத்த கலைகள் வரை அனைத்துக்குமே ஆதார சுருதி ஓசைதான். ஓசையில்லாத உலகம் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாதது!

அவ்வகையில் மனிதர்களுக்குப் பலமே பேச்சும் மொழியும்தான். குறைதீர்க்கும் கோயில்கள் வரிசையில் இந்த இதழில் நாம் தரிசிக்கப் போவது, பேச்சு வராதவர்கள், திக்குவாய் பிரச்னை உள்ளவர்களின் குறை தீர முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருப்பந்துறை என்னும் திருப்பேணு பெருந்துறை திருக்கோயில்.

புராண காலத்திலும் சம்பந்தரின் தேவாரப் பாடல்களிலும் திருப்பேணு பெருந்துறை என்று அழைக்கப்பட்ட இந்தச் சிற்றூர், இப்போது பேச்சு வழக்கில் திருப்பந்துறை என்று அழைக்கப்படுகிறது. காவிரித் தென்கரைத் தலங்களில் இது 64-வது தலம். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்தத் தலம், பேச்சு வராதவர்களும் திக்கிப் பேசுபவர்களும் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம். கும்பகோணத்துக்கு அருகே, அரசனாற்றங்கரையில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.

மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கூடிய சிறிய, அழகிய திருக்கோயில் நன்கு பராமரிக்கப்படுகிறது. கோயிலுக்கு எதிரே ‘மங்கள தீர்த்தம்’ என்னும் திருக்குளம். அதன் அருகே, குக விநாயகர், சாட்சி விநாயகர் என்ற இரட்டைப் பிள்ளையார்கள் காட்சி தருகின்றனர். ‘தல விநாயகர்’ என்று அழைக்கப்படும் இவர்களை வணங்கிவிட்டுத்தான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

முருகப்பெருமானால் பூஜிக்கப்பட்ட விநாயகர்கள் என்பதால், இவர்களுக்கு இங்கே முக்கியத்துவம் அதிகம். இரட்டைப் பிள்ளையார் மட்டுமல்ல; இங்கே தல விருட்சமும் கூட ‘இரட்டை வன்னி மரம்’தான். பிராகாரத்தில் அவற்றைக் காணலாம்.

மூலவர் அருள்மிகு சிவானந்தேஸ்வரர். இந்தச் சிவனார் ‘பிரணவேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியில், அருள்மிகு மலையரசி எனப்படும் மங்களாம்பிகை வீற்றிருக்கிறாள். எங்கும் இல்லாத அதிசயமாக, இங்கே சுவாமி சந்நிதியில், முருகப்பெருமான் வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறைக்கு முன்பாக நமக்கு இடதுபுறம் முருகப்பெருமான் நான்கு அடி உயரத்தில் அர்ச்சாவதார மூர்த்தி. அதுவும் வித்தியாசமான திருக்கோலத்தில்!

அப்படி என்ன வித்தியாசம் என்கிறீர்களா?

சிரசில் குடுமியுடன் நீங்கள் எங்கேயாவது முருகன் திருவுருவத்தைக் கண்டதுண்டா? திருப்பந்துறை வந்தால் பார்க்கலாம். தலையில் குடுமியுடன், வலதுகை சின்முத்திரையில் இருக்க, இடதுகையில் தண்டம் ஏந்திய ஞான தண்டாயுத பாணியாக, கழுத்தில் மணிமாலை அணிந்து, காதுகள் நீண்டு தொங்க, கண் மூடி மவுனியாக, மோனத் தவத்தில் இருக்கும் முருகனின் கோலம் காண்போரை வியக்க வைப்பது நிஜம்.

கோயில் அர்ச்சகர் நாகராஜ குருக்களிடம் காரணம் கேட்டோம். விரிவாக அந்தப் புராணத்தைச் சொன்னார் அவர்.

‘‘சுவாமி மலையில் தந்தைக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் முருகப்பெருமான். சிவபெருமானும் கை கட்டி, வாய் பொத்தி மாணவனாகப் பணிந்து, ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளைத் தந்தைக்குக் குருவான மகன் மூலம் பெற்றார். அவருக்கு உபதேசிப்பதற்கு முன்னதாக, அம்மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவைச் சிறையில் அடைத்திருந்த முருகனின் செயல், ஸ்ரீசரஸ்வதி தேவிக்குக் கோபத்தை வரவழைக்க, முருகனை `மூகைத்தன்மை’ (வாய் பேசாத ஊமை நிலை) உடையவராகப் போகும்படிச் சபித்துவிட்டார்.

சரஸ்வதியின் சாபம் தீரும் விதமாக, ஞானி போல வடிவம் எடுத்து, திருப்பேணி பெருந்துறைக்கு வந்த முருகப்பெருமான், மங்கள தீர்த்தத்தில் நீராடி, இரட்டை விநாயகரைப் பூஜித்தார். பின்னர், சிவானந்தேஸ்வரரான பிரணவ நாதரையும், மலையரசியான மங்களாம்பிகையை யும் வணங்கினார். பூஜைகள் செய்தார். மனதில் அருட்பிரகாசம் பரவக் கண்டார். அவருடைய சாபம் நீங்கியது. சிவாச்சார்யார் கோலத்தில் முருகன் சிவனைப் பூஜித்து, மௌன நிலை மாறி சிவத்துதிகள் உரைக்க ஆரம்பித்தார்.

இந்தத் திருக்கோயிலில் தலையில் குடுமியுடன் வலதுகை சின்முத்திரை காட்ட, மிக அழகாகச் சுப்ரமணிய சுவாமிநாதன், பால தண்டாயுதபாணி என்ற திருநாமத்துடன் உறைந்து, உலக மக்களின் ஊமைத் தன்மையைப் போக்குபவராக அருளாசி வழங்குகிறார்.

மோனத் திருநிலையில் இருக்கும் முருகனுக்குப் பால், சந்தனம், தேன் போன்றவற்றை அபிஷேகம் செய்யலாம். பேச்சு வராதவர்கள் அல்லது திக்குவாய் பிரச்னை உள்ளவர்கள், இங்கே ஞான தண்டாயுதபாணியை மனமுருகிப் பிரார்த்தித்து, அபிஷேகம் செய்து, அபிஷேகம் செய்த தேனை, தினமும் நாக்கில் வைத்து வந்தால் ஊமைத்தன்மை, திக்குவாய் போன்றவற்றிலிருந்து விடுபடலாம். ஒரு மண்டலம் தேனை நாக்கில் தடவிச் சாப்பிடுவதுடன், கோயிலில் கொடுக்கப்படும் பாடலையும் தினசரி படித்து முருகனைத் தியானிக்க வேண்டும். தந்தையைப் பூஜித்ததும் எவ்வாறு மகனின் நாக்கு பேசியதோ, அதபோல பேச்சு வரும் என்பது நம்பிக்கை!’’ என்று கோயில் வரலாற் றையும் பிரார்த்தனை முறையையும் விளக்கினார் நாகராஜ குருக்கள்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் போற்றி 11 பதிகங்கள் பாடியுள்ளார். பேச்சுத் திறனை வழங்குவது மட்டுமல்லாமல், ஸ்ரீபிரணவநாதரைப் பேணி பணிபவருக்குத் திருமணம் கைகூடுதல், உத்தியோகம் போன்ற வேண்டுதல்களும் நிறைவேறுகின்றன.

சிறிய கோயில் என்பதால் ஒரே ஒரு பிராகாரம்தான். அதில் உள்ள சந்நதிகளில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நால்வர், விநாயகர்கள், பாணலிங்கம், தெய்வானை ஆகியோர் காட்சி தருகின்றனர். மகா விஷ்ணுவின் அறிவுரைப்படி முருகன் இங்கு வந்து சிவபூஜை செய்தபடியால், இடதுபுறம் ஸ்ரீலட்சுமி தேவியை மடியில் அமர்த்திய நிலையில் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளும் காட்சி தந்து, கடாட்சிக்கிறார்.

செங்கல் கோயிலாக இருந்த இதைக் கருங்கல் கோயிலாகத் திருப்பணி செய்து கட்டிய மன்னர் கரிகாலச் சோழனுக்கும் அவனது அரசிக்கும் சிலைகள் இருக்கின்றன. கோஷ்டத்தில் பிள்ளையார், பிரம்மா, லிங்கோத்பவர், விஷ்ணு துர்கை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் கோயிலில் இன்னுமொரு விசேஷம் என்னவென்றால், தட்சிணாமூர்த்தி சந்நதிக்கு நேர் மேலே அமைந்திருக்கும் கருவறை விமானம். அதில் பல சிவ விஷ்ணு ரூபங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. எங்கும் காணமுடியாத மிகவும் அற்புதமான இரண்டு குரு வடிவங்கள் – கோபுரப் பகுதியில் முதல் நிலையில் வீணா தட்சிணாமூர்த்தி மற்றும் அடுத்த நிலையில் அர்த்தநாரீஸ்வர ரூபமாக சிவசக்தி தட்சிணா மூர்த்தியும் காட்சி தருவது மிக அற்புதம்.

சிவத்தையும் சக்தியையும் எந்த வடிவில் கண்டு வணங்கினாலும் பிறவித் துயர் தீருமே!

பிராகார வலம் வரும்போது விநாயகர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சந்நிதிகள்… நவகிரக சந்நதியிலும் ஒரு சிறப்பு… நடுநாயகராக விளங்கும் சூரிய பகவான் உஷா, பிரத்யுஷா தேவியருடன் தனி மேடையில் நின்ற கோலத்தில் காணப் படுகிறார். இங்கே முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் ஈசனுக்குரிய விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

கோயிலைச் சுற்றி வந்து, கொடிமரத்தின் முன்னே விழுந்து நமஸ்காரம் செய்யும்போது, நமக்குப் பேச்சே எழவில்லை! அப்படி ஓர் ஆகர்ஷண சக்தி அங்கிருக்கும் தெய்வங்களுக்கு.

பேச்சுப் பிரச்னை இருக்கும் குழந்தைகள், வார்த்தைகள் சரியாக வராமல் சிரமப்படுபவர்கள் இருந்தால், அவர்களை ஒரு முறை திருப்பந்துறைக்கு வந்து வேண்டிக்கொள்ளச் சொல்லுங்கள்! வண்ணத் தமிழ் நாவில் நின்று விளையாட குரல் தருவார், இங்கிருக்கும் குமரக்கடவுள்!

Leave a Reply