குட்கா விவகாரம்: முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி

சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று நொளம்பூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் 36 ஆண்டுகளாக காவல் துறையில் சேவையாற்றி வந்துள்ளேன். சென்னை கமிஷனராக இருந்தபோது மற்ற யார் மீதும் நான் குற்றம் சாட்டவில்லை. திமுக வழக்கறிஞர் தனது மனுவில் எந்த இடத்திலும் எனது பெயரை குறிப்பிடவில்லை.

குட்கா விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நான் சந்திக்கும் பிரச்னையை கூற விரும்பவில்லை. இங்கு நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை.

குட்கா விவகாத்தில் பணம் பெற்றதாக கூறப்படும் காலகட்டத்தில் நான் கமிஷனராக பதவியில் இல்லை. எம்.எல்.ஏ. அன்பழகன் அளித்த புகார் தேதிகளில் நான் சென்னை கமிஷனராக இல்லை. சிபிஐ வெளியிட்ட முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை.

நான் மீண்டும் காவல் ஆணையராக பதவியேற்பதற்கு முன்னர் இந்த குட்கா பற்றிய செய்திகள் வெளியாகின. போலீஸ் உயரதிகாரி மட்டத்தில் பலர் லஞ்சம் வாங்கிக் கொண்டு குட்கா வியாபாரத்துக்கு துணையாக இருப்பதாக வதந்திகள் பரவின.

எனவே, இதுதொடர்பாக, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு நான் கடிதம் அனுப்பினேன்.

குட்கா விவகாரத்தில் 2016-ம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் சோதனை நடைபெற்றது. அப்போது நான் காவல் ஆணையர் பதவியில் இல்லை.

21.4.2016, 25.6,2016, 26.6.2016 ஆகிய தேதிகளில் பணம் தரப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்படுகிறது. ஆனால் அந்த காலகட்டத்தில் நான் காவல் ஆணையர் இல்லை. செப்டம்பரில்தான் நான் மீண்டும் பதவிக்கு வந்தேன்.

மாதவரத்தில் குட்கா குடோனை சோதனையிட்ட அதிகாரிகள், அங்கு புகையிலை பொருள்களை பார்க்கவில்லை என தெரிவித்தனர். இதுதொடர்பாக நான் மேலதிகாரிகளுக்கு தகவலும் அனுப்பினேன். மேலும் இவ்விவகாரம் பற்றி விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தேன்.

எனக்கு கீழ் துணை காவல் ஆணையராக பணியாற்றிய ஜெயகுமாரிடம் நிறைய பொறுப்புகளை ஒப்படைத்திருந்தேன். அவரது செயல்பாடு சரியில்லை என்பதால் அவரை கண்டித்துள்ளேன்.

குட்கா விற்பனை போன்ற பெரிய விவகாரங்கள் காவல் ஆணையர் உதவியுடன் மட்டுமே நடக்குமா? இந்த விவகாரத்தில் எனது பெயரை சேர்த்து என்னை குறிவைத்து செயல்படுவது மிகவும் வருந்தத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *