காவிரி நீரை திருப்பிவிட வேண்டும்: அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

காவிரியில் இருந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியும் கடைமடை பகுதி உள்பட பல பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் கடலில் கலக்கும் காவிரி நீரைத்தடுத்து வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் திருப்பி விடுமாறு அ.தி.மு.க அரசைக் கேட்டுக் கொள்வதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் கனமழை பெய்வதால் கிடைக்கும் பயனை வேளாண்மைப் பணிகளுக்கு பயன்படுத்தி முறையாக அனுபவிக்க முடியாத கொடுமையில் தமிழக விவசாயிகளைத் தள்ளி, அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இருமுறை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியும், அங்கிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராகக் கடலில் கலப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

காவிரி டெல்டா பகுதியில் 2500-க்கும் மேற்பட்ட ஏரிகளும், குளங்களும் முறையாக உரிய காலத்தில் தூர்வாரப்படாத காரணத்தால், தினமும் 2 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்டும் கூட, அந்தக் குளங்களும், ஏரிகளும் நிரம்பவில்லை. குறிப்பாக, திருவாரூரில் உள்ள ஐநூற்று பிள்ளையார் கோவில் குளம் தண்ணீரே இல்லாமல் இன்னும் வறண்டே காட்சியளிப்பது, அ.தி.மு.க ஆட்சியின் மோசமான நீர் மேலாண்மைக்கு உதாரணமாகத் திகழ்கிறது.

உபரி நீர் எல்லாம் இன்று கடலில் கலப்பதற்கு, ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க அரசே முழுப்பொறுப்பேற்க வேண்டும். இதுதவிர, பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வறண்டு கிடக்கும் குளங்கள் மற்றும் ஏரிகளை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதை பரிசீலனை செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

தொலைநோக்குப் பார்வையற்ற அ.தி.மு.க அரசால், இன்றைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளும் சீரழிந்து நிற்கின்றன. தூர்வாரியதில் செய்த முறைகேடுகளால் கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நேர் சென்றடைவதில் சிக்கலாக இருக்கிறது. வெள்ளமெனப் பாய்ந்து ஓடும் நீரை தேக்கி வைக்கவும் இந்த அரசால் முடியவில்லை. ஒருபுறம் கடலில் நீர் கலக்கிறது. இன்னொரு புறம் ஏரி, குளங்கள் வறண்டே காட்சியளிக்கிறது.

இனியாவது தொலைநோக்கு “நீர் மேலாண்மை” திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தும், கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நதி நீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றியும் கடலில் கலக்கும் காவிரி நீரைத்தடுத்து வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் திருப்பி விடுமாறு அ.தி.மு.க அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *