கார்த்திகை தீபத்துக்கு பசுநெய் கொடுத்தால் வம்சம் தழைக்கும்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், திருக் கார்த்திகை தீபத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த நாளில், மலையில் தீபம் ஏற்றப்படும். மனிதனாகப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையேனும் திருக்கார்த்திகை தீப விழாவை கண்ணாரத் தரிசித்தால், மோட்சம் நிச்சயம் ; இன்னொரு பிறவி இல்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

மகாதீபத்திற்கென்றே, செப்பினால் ஆன கொப்பரை ஒன்றினைப் பயன்படுத்துகிறார்கள் அப்போது. இந்த கொப்பரை நாலரை முதல் ஐந்து அடி உயரமானது. மேலே 4 அடி அகலமும் அடிப்பாகம் 2 அடி அகலமும் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு தீபத்திருநாளிற்கும் இதில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. விளக்கினை போல் எண்ணெய் ஊற்றி திரியிட்டு ஏற்றுவதல்ல மகாதீபம். காடா துணி என்ற ஒரு வகைத் துணி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2000 மீட்டர் காடா துணி வாங்கப்படுகிறது என்கிறார்கள். மேலும் பக்தர்கள் கொடுக்கும் துணியும் பயன்படுத்தப்படும். சில சமயங்களில் அதுவும் கூட பத்தாமல் போய்விடுமாம்.

மகாதீபம்… தூய பசுநெய்யினால் ஏற்றப்படுகிறது. நெய், ஆவின் போன்ற அரசு பால் நிறுவனத் தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. சுமாராக 350 லிட்டர் நெய் கோயில் சார்பாக வாங்கு கிறார்கள். மேலும் பக்தர்கள் காணிக்கையாகத் தரும் பசுநெய், கணக்குவழக்கில்லாமல் வந்து குவிந்துவிடும்.

முந்தைய காலங்களில் அதிக நெய் வரத்து இல்லாததால் 3 நாட்கள் மட்டுமே தீபம் எரியவிட்டிருந்தார்கள். இப்போது அதிக அளவில் நெய் கிடைப்பதால் 11 நாட்கள் தீபம் ஒளிர்வதாகச் சொல்லிப் பூரிக்கிறார்கள் கோயிலின் ஆச்சார்யர்கள்.

கொப்பரையில் பசுநெய்யில் ஊறவைத்த காடாதுணியை அடைத்து அதன் மேல் சூடம் வைத்து மகாதீபத்தை ஏற்றுகிறார்கள். பக்தர்கள் நெய் காணிக்கை அளிக்க சீட்டுத் தருகிறார்கள். நம் இஷ்டப்படி எவ்வளவு நெய் வேண்டுமானாலும் வழங்கலாம். நேரடியாக நெய்யாகவும் வழங்கலாம். பசுநெய் அளித்த ஒவ்வொருவருக்கும் தீபம் முடிந்த பின், அண்ணாமலையாரின் மகாதீபப் பிரசாதமாக கொப்பரையில் சேர்ந்த மை தருகிறார்கள். இது திருஷ்டி முதலானவற்றை நீக்கவல்லது என்பதாக ஐதீகம்.

மகாதீபத்தைக் கண்டாலே புண்ணியம் நம்மைத் தேடி வரும் என்றால் அதனை ஏற்றுபவர் உண்மையில் எவ்வளவு பாக்கியசாலி. நாம் நினைப்பது போல் நினைத்தவரெல்லாம் தீபமேற்ற முடியாது. காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கார்த்திகை மகாதீபமேற்ற பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அடிப்படையில் மீனவ குலத்தை சார்ந்த இவர்கள், பர்வத மகாராஜாவின் வம்சாவளியில் வந்ததல் பர்வதராஜகுலத்தினர் என அழைக்கப்படுகின்றனர்.

அதிலும் திருவண்ணாமலையைப் பிறப்பிடமாக கொண்ட இந்தக் குலத்தினர் மட்டுமே தீபமேற்ற வேண்டுமென்பது புராணகாலத்து சம்பிரதாயம்.

திருக்கார்த்திகை தீபத்திருநாள் முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கும் தினமும் மாலை இவர்கள் கொப்பரையை சுத்தம் செய்து மீண்டும் நெய் மற்றும் துணி வைத்து தீபமேற்றுகிறார்கள். ஒவ்வொரு நாளும் கொப்பரையில் இருக்கும் மையினை சேகரிக்கிறார்கள்.

இத்தனை சிறப்பாக திகழும் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் இன்னுமோர் விசேஷம், அர்த்தநாரி தாண்டவமாடுதல். தீபத்திருநாளன்று திருவண்ணாமலையில் மட்டுமே நடக்கும் வைபவம் இது!

இதோ… 2ம் தேதி திருக்கார்த்திகை தீபம். அருகில் உள்ள சிவாலயங்களுக்கு, உங்களால் முடிந்த பசுநெய்யை வழங்குங்கள். கார்த்திகை தீபம் சுடர்விட்டுப் பிரகாசிப்பது போல், நீங்களும் உங்கள் சந்ததியும் பிரகாசமாக வாழ்வீர்கள் என்பது உறுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *