Chennai Today News

காமன்வெல்த் 2018: பதக்கப் பெண்கள்!

காமன்வெல்த் 2018: பதக்கப் பெண்கள்!

ஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட்டில் கடந்த 5-ம் தேதி தொடங்கிய காமன்வெல்த் போட்டி இன்றோடு நிறைவுபெறுகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்ததாகக் கருதப்படும் இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் சார்பில் சென்ற 218 பேரில் 103 பேர் பெண்கள். தடகளம், துப்பாக்கிச் சுடுதல், பளு தூக்குதல், மல்யுத்தம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட 17 பிரிவுகளில் அவர்கள் பங்கேற்றனர்.

தங்க மங்கைகள்

போட்டி தொடங்கியதுமே பதக்க வேட்டையும் தொடங்கியது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு பளு தூக்குதல் போட்டியில் 196 கிலோ எடையை அநாயசமாகத் தூக்கி இந்தியாவின் தங்கப் பதக்கக் கணக்கைத் தொடங்கிவைத்தார்.

அவரைத் தொடர்ந்து 53 கிலோ எடைப் பிரிவில் சஞ்சிதா சானு தங்கம் வென்றார். அவர் ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 84 கிலோ எடையை ஒரே மூச்சில் தூக்கி புதிய சாதனையை நிகழ்த்தினார். கடுமையான முதுகுத் தண்டுவட பாதிப்புக்கு நடுவிலும் சஞ்சிதா சானு சாதித்திருக்கிறார். “முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் இந்தப் போட்டியில் பதக்கம் வெல்வேனா எனப் பலர் சந்தேகப்பட்டனர். இந்தப் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற கனவோடு கடந்த சில மாதங்களாக வலிக்கு நடுவே கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். என் திறமையைச் சந்தேகித்தவர்களுக்கு இந்தப் பதக்கத்தால் பதில் சொல்லியிருக்கிறேன்” என கம்பீரமாகச் சொல்கிறார் சஞ்சிதா.

Weightlifting – Gold Coast 2018 Commonwealth Games – Women’s 69kg Final – Carrara Sports Arena 1 – Gold Coast, Australia – April 8, 2018. Punam Yadav of India competes. REUTERS/Athit Perawongmetha – REUTERS

69 கிலோ எடைப் பிரிவினருக்கான போட்டியில் கலந்துகொண்ட பூனம் யாதவ் இந்தியாவுக்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்று சாதனைபடைத்தார். பளு தூக்குதல் பிரிவில் கலந்துகொண்ட எட்டு வீராங்கனைகளில் மூன்று பேர் அடுத்தடுத்து தங்கப் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியாவை முன்நோக்கி நகர்த்தினர்.

தப்பாத குறி

பெண்களுக்கான பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீராங்கனை மனு பாகர் தங்கப் பதக்கத்தை வென்றார். “காமன்வெல்த் போட்டியில் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. ஒலிம்பிக் போட்டியில் வெல்வதே என் அடுத்த இலக்கு. இந்தத் துறையில் நான் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதற்குக் கிடைத்த வாய்ப்பாகவே இந்த வெற்றியைப் பார்க்கிறேன்” என்கிறார் மனு.

மனு பாகர் – AFP

25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான ஹீனா சித்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். முன்னதாக அவர் பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். “என் கணவரும் பயிற்சியாளருமான ரோனக் பண்டிட்தான் இந்த வெற்றிக்குக் காரணம். நான் ஜெயிக்க வேண்டும் என்ற அவரது உத்வேகம் அளிக்கும் வார்த்தைதான் எனக்கு வெற்றியைத் தேடித் தந்தது. சர்வதேசப் போட்டிகளில் இதுபோல் பதக்கங்களை வெல்வது மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது” என நெகிழ்ச்சியோடு சொல்கிறார் ஹீனா.

மெஹூலி கோஷ் – AFP

தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியாததால் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் பதக்கத்தால் வென்றுவிட்டார் கொல்கத்தாவைச் சேர்ந்த 17 வயது மெஹூலி கோஷ். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சிறு தவறால் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்ட மெஹூலி, வெள்ளிப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டார். இதே போட்டியில் ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த அபூர்வி சந்தேலா வெண்கலப் பதக்கத்தை வென்றார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து ஆச்சரியப்படுத்தினார்கள். துப்பாக்கி சுடுதல் போட்டியில் டபுள் டிராப் பிரிவில் இலக்கைச் சரியாகக் குறிபார்த்துத் தாக்கிய ஷ்ரேயாஸி சிங் தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் ப்ரோன் பிரிவில் தேஜஸ்வினி சாவந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

முதல் சாதனை

டேபிள் டென்னிஸ் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிங்கப்பூர் அணியை சிறப்பான ஆட்டத்தால் 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கான ஏழாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது மகளிர் அணி. இந்தப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிகா பத்ரா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். புலியின் பாய்ச்சலைப் போல இருந்த அவரது ஆட்டம் பார்வையாளர்களை இருக்கை நுனிக்குக் கொண்டுவந்தது. இவர் தனிநபர், இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் கலந்துகொண்டார்.

டேபிள் டென்னிஸ் அணி – REUTERS

பாட்மிண்டன் போட்டிகளுக்குப் பெருவாரியான பார்வையாளர்களை உருவாக்கியதில் சாய்னா நேவால், பி.வி. சிந்து போன்ற நட்சத்திர வீராங்கனைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் ராங்கிரெட்டி, அஸ்வினி பொன்னப்பா, பி.வி. சிந்து ஆகியோர் நேர் செட் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி முதன்முறையாகக் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிச் சாதித்தனர். தனிநபர் பிரிவில் சாய்னா நேவால் தங்கம் வென்றார்.

நம்பிக்கை ஒளி

மல்யுத்த வீராங்கனை பபிதா குமாரி ஃபிரீ ஸ்டைல் 53 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதேபோல் கிரண் பிஷ்னோய் ஃபிரீ ஸ்டைல் 76 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பாக முதன்முறையாக வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். வட்டு எறிதல் பிரிவில் சீமா பூனியா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதே போட்டியில் நவ்ஜித் தில்லான் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

பபிதா குமாரி – PTI

ஆண் பிள்ளைக்கு விளையாட்டு, பெண் பிள்ளைக்கு வீட்டு வேலை எனக் காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டவற்றை வெற்றிப் பதக்கங்களால் களையெடுத்து, வருங்கால தலைமுறையினருக்கு நம்பிக்கை தந்திருக்கிறார்கள் இந்திய வீராங்கனைகள்.