கான்கிரீட்டுக்கு விடை கொடுங்கள்

17தரமான கம்பி கொண்டு கட்டப்பட்ட உறுதியான வீடு என விளம்பரப்படுத்துகிறார்கள். அதை அப்படியே நம்புகிறோம். வீடு கட்டும்போது தரமான கம்பிகளைப் பயன்படுத்துகிறார்களா என்பதை மிகக் கவனமாக கேட்டுக்கொள்கிறோம். இதெல்லாம் சரிதான். ஆனால் வீடு முதலான கட்டிடங்களையே இரும்பை அடிப்படையாகக் கொண்டு கட்டுவதில் மட்டும் இன்னும் நமக்குத் தயக்கமே. குடியிருப்புக் கட்டிடங்களுக்கு மட்டுமல்ல வணிகக் கட்டிடங்களுக்கே முழுவதும் இரும்பைப் பயன்படுத்த நாம் இன்னும் தயக்கம் காட்டுகிறோம் என்பதுதான் யதார்த்தம். ஆனால் கட்டிடத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கட்டுமானப் பொருளான கான்கிரீட்டுக்குப் பதில் இரும்பைக் கையாண்டு கட்டிடங்களை எழுப்பலாம் எனத் தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார்கள்.

இரும்பு மூலம் கட்டப்பட்ட கட்டிடம் என்று சொல்லும்போது அது எப்படி இருக்கும் எனப் புருவம் உயர்த்துகிறோம். இரும்பு கட்டிடம் என்றாலே நமது நினைவில் ஏதோ ஒரு குடோன் என்பதாகத் தோன்றிவிடுகிறது. ஆனால் உண்மை அப்படியல்ல. கான்கிரீட், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் கொண்டு நாம் கட்டும் கட்டிடங்களைப் போலவே இரும்பை அடிப்படையாகக் கொண்டும் கட்டிடங்களை எழுப்பலாம். அது பொருளாதாரரீதியாகவும், சுற்றுச்சூழல்ரீதியாகவும் நலம் பயக்கக்கூடியதும்கூட.

ப்ரீ-இன்ஜினீயர்டு ஸ்டீல் என்று சொல்லப்படும் இரும்புத் தடவாளங்களைக் கொண்டு கட்டிடங்களை எழுப்பவதால் கட்டுமானக் காலம் குறைகிறது, கட்டுமானச் செலவும் குறைகிறது என்று கட்டிடவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பொறியாளர்கள், கட்டிட வடிவமைப்பு நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட விருதுக் கூட்டம் ஒன்று சிங்கப்பூரிலே நடைபெற்றிருக்கிறது. அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்ட கட்டிடவியல் நிபுணர்கள் பலர் இந்தக் கருத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்களிப்பைச் செய்துவரும் ரியல் எஸ்டேட் துறையில் இரும்பின் பயன்பாடு அதிகரித்தால் அது ரியல் எஸ்டேட் துறையில் பணிகளை விரைவில் முடிக்கலாம் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

கான்கிரீட் கொண்டு கட்டப்படும் வழக்கமான கட்டிடப் பணிகளை முடிப்பதற்கான காலத்தில் பாதி அளவுக்குத்தான் இரும்புத் தடவாளங்கள் பயன்படுத்தி கட்டிடங்களை எழும்புவதற்குத் தேவைப்படும் என்கிறார்கள். பொதுவாக இத்தகைய இரும்புத் தடவாளங்களை இப்போது தொழிற்சாலைகளை உருவாக்கவே அதிக அளவில் பயன்படுத்துகிறோம். வெல்டிங், கிரைண்டிங், அசெம்ப்ளிங் உள்ளிட்ட பெரிய பெரிய பொறியியல் வேலைகளைச் செய்யத் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் பெரும் அறைகளை இரும்புத் தடவாளங்களைக் கொண்டே உருவாக்குகிறார்கள். இரும்புத் தகடுகள், உத்திரங்கள், இணைப்புக் கம்பிகள் ஆகியவை மூலம் இந்தக் கட்டிடங்களைக் கட்டி எழுப்புகிறார்கள். இதே முறையில் பெரிய குடியிருப்புத் திட்டங்களையும், வணிகக் கட்டிடங்களையும்கூடக் கட்டி எழுப்ப முடியும் என்பதே கட்டிட நிபுணர்கள் முன்வைக்கும் வாதம். ஆகவே ரியல் எஸ்டேட் துறையினர் இரும்பைப் பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்துக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்.

செங்கல், கான்கிரீட் போன்ற கட்டுமானப் பொருள்கள் கொண்டு உருவாக்கப்படும் மரபான கட்டிடங்கள் தருவது போன்ற அழகியல் தோற்றத்தை இரும்பு கொண்டு உருவாக்கப்படும் கட்டிடங்கள் தருமா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்புகிறார்கள். கட்டுமானச் செலவு குறைவு என்பது பொருளாதாரரீதியாக அனுகூலமான செய்தி என்றபோது கட்டிடங்களுக்குத் தோற்றமும் முக்கியம் என்பதையும் யோசிக்க வேண்டியதிருக்கிறது.

கட்டிடங்களுக்குத் தேவையான இரும்புத் தடவாளங்களைத் தரமான இரும்பால் தொழிற்சாலைகளில் உருவாக்கிவிடுகிறார்கள். அவற்றைக் கட்டிடம் அமைய உள்ள இடங்களுக்குக் கொண்டுவந்து வரைபடங்களின் உதவியால் நிறுவினால் போதும், கட்டிடங்களை உருவாக்கிவிடலாம். இரும்பைக் கொண்டு கட்டுமானத்தை உருவாக்கும்போது கான்கிரீட் கட்டுமானத்துக்கு ஆகும் நேரத்தில் பெரும்பகுதி குறைந்துவிடும் ஆனால் முறையாகப் பயின்ற, தகுதி வாய்ந்த தொழிலாளர்களைக் கொண்டுதான் இந்தக் கட்டிடங்களை எழுப்ப முடியும். ஏனெனில் கட்டிடங்களுக்கான இரும்புப் பகுதிப் பொருட்களை இணைப்பதற்கு வெல்டிங் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளில் முறையான பயிற்சியற்ற தொழிலாளர்களால் ஈடுபட முடியாது.

இரும்பால் ஆன கட்டிடங்களைத் தேவைப்படும்போது எளிதில் விரிவாக்கம் செய்துகொள்ளலாம். இதைப் பராமரிப்பதும் எளிது என்கிறார்கள். மரபான கட்டிடங்களைவிடத் தீப்பற்றும் தன்மை இதில் குறைவு. ஏனெனில் மரபான கட்டிடங்களில் அதிகமாக மரம் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதால் இரும்புக் கட்டிடங்களைவிட எளிதாக அதில் தீ பரவக்கூடும். மரபான கட்டிடங்களைவிட இரும்புக் கட்டிடங்கள் எடையும் குறைவு. ஆனால் மரபான கட்டிடங்கள் நீண்ட காலத்துக்கு உறுதியுடன் இருக்கும். அதே போன்று உறுதித் தன்மையுடன் இரும்புக் கட்டிடங்கள் இருக்குமா என்பது போன்ற பல விஷயங்களைத் தகுந்த நிபுணர்களிடம் ஆலோசித்துக் கொண்டு இரும்புக் கட்டிடங்களுக்கு ஆதரவு தருவதைப் பற்றி ரியல் எஸ்டேட் துறையினர் யோசிக்கலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *