காடுவெட்டி குருவின் மகன் பாமக ராமதாஸுக்கு உருக்கமான வேண்டுகோள்

மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனல்அரசன் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மறைந்த காடுவெட்டிகுருவின் மனைவி சொர்ணலதா எழுதியதாக கூறப்படும் கடிதம், ஃபேஸ்புக்கில் சிலரால் பகிரப்பட்டது. அந்தக் கடிதத்தில், “எனது கணவர் இறந்த பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறேன். எனது மகள் விருதாம்பிகை, மகன் கனல்அரசனை பார்க்கவும், பேசவும் முடியவில்லை. கணவரின் குடும்பத்தார் மீது எனக்கு நம்பிக்கையில்லை. சொத்துக்கு ஆசைப்பட்டு ஏதாவது செய்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் நல்ல முடிவை எடுத்து எனது மகளும், மகனும் என்னோடு சேர்த்து வாழ வழி செய்ய வேண்டும்” என்று தெரி வித்துள்ளார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குருவின் மகன் கனல்அரசன் சில தினங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், “அப்பா இறந்ததில் இருந்து அம்மா மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். அம்மாவுக்கு ஆறுதலாக இருக்கும் என்று அவரது பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். போன இடத்தில் அம்மாவின் கால் உடைந்துவிட்டது. அவராக கீழே விழுந்ததில் கால் உடைந்ததா அல்லது அவரது உறவினர்கள் யாராவது தள்ளிவிட்டதில் கால் உடைந்ததா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

நான் பார்க்கச் சென்ற போது அம்மா பதற்றமாகவே பேசினார். தீபாவளிக்கு அம்மாவை அழைக்க சென்ற போதும், அவர் பதற்றமாகவே இருந்தார். உறவினர்கள் கூடவே இருந்தனர். ஆனால், ஊருக்கு அம்மா வரவில்லை. மீண்டும் அரும்பாக்கத்தில் உறவினர் வீட்டில் இருக்கும் அம்மாவை பார்த்து பேச சென்றேன்.

ஆனால், அம்மா இங்கு இல்லையென்றும், திண்டிவனம் சென்றுவிட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். செல்போனிலும் பேச முடியவில்லை. அம்மாவை எங்க வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அம்மாவுக்கு எழுதப் படிக்க தெரியாது.

இந்தக் கடிதத்தை எழுதியது யார் என்பது தெரியவில்லை. அம்மாவை மிரட்டி கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ்தான் எனது அம்மாவை எப்படியாவது கண்டு பிடித்து ஊருக்கு அழைத்து வந்து விடவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *