shadow

கமலா கல்பனா கனிஷ்கா: பள்ளி மாணவியின் சமூக அக்கறை

மகளிர் தினம் எதுக்காகக் கொண் டாடுறோம்னு புரியாம அதையும் ஃபேஷன் விழா போல மாத்திட்ட கொடுமையை என்னன்னு சொல்ல?” என்று அலுத்தபடியே வந்தார் கல்பனா ஆன்ட்டி.

“ஆமாம் ஆன்ட்டி. உலகம் முழுக்க எத்தனையோ பெண்கள் நடத்திய போராட்டங்களோட விளைவாதான் இன்னைக்குப் பெண்களால ஓரளவு சுதந்திரமா இயங்க முடியுது. ஆனால் இன்னைக்கு போராட்டங்களுக்கான தேவை அதிகரிச்சிக்கிட்டே போறதை நினைச்சாதான் பயமா இருக்கு. கருவில் இருக்கும்போதே பெண்ணுக்குப் பிரச்சினை ஆரம்பிச்சுடுது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு மருத்துவர் பெண் சிசுக் கலைப்பு வேலையைச் செய்திருக்கார். சில நாட்களுக்கு முன்னால அவங்க மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துகிட்ட பெண் ஒருவர் இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம்தான் இந்த விஷயம் வெளிய வந்திருக்கு. இது போல் கருக்கலைப்பால் கொல்லப்பட்ட 19 பெண் சிசுக்களைக் காவல்துறையினர் கண்டுபிடிச்சிருக்காங்க. இந்த நாகரிக உலகத்துல இது எவ்வளவு மனிதத்தன்மையற்ற விஷயம்” என்று கோபப்பட்டாள் கனிஷ்கா.

“எத்தனையோ தடைகளுக்கும் போராட்டங் களுக்கும் இடையே தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ளும் பெண்களுக்குத் தலை வணங்கணும். ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பெண்ணான மஞ்சுளா, ‘நவோதயம்’ என்ற பத்திரிகையை 2001-ல் ஆரம்பிச்சாங்க. பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அடிப் படை வாழ்வாதார விஷயங்கள்னு பெண்கள் தொடர்பான செய்திகள் இந்தப் பத்திரிகையில இடம்பெறுது. அதுவும் ரொம்ப எளிமையான தெலுங்கில் எழுதுறாங்க. மஞ்சுளா முறையா இதழியல் படிக்கலை. ஆனா சமூகப் பிரச்சினைகளை எழுதணும்னு மட்டும் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னிக்கு அந்தப் பத்திரிகைக்கு நாலு லட்சம் வாசகர்களும் 40,000 சந்தாதாரர்களும் இருக்காங்க!” என்று கமலா பாட்டி பெருமிதத்தோடு சொன்னார்.

“மஞ்சுளாவுக்கு மகளிர் தின வாழ்த்தைச் சொல்லும் விதமா பலமா கைதட்டுவோம்” என்று கனிஷ்கா சொன்னதும் கைத்தட்டல் ஒலித்தது.

“ஒரு பக்கம் மருத்துவமும் தொழில்நுட்ப மும் வளர்ந்துகிட்டே போகுது. இன்னொரு பக்கம் குற்றங்களும் பெருகிகிட்டே போகுது. நேபாளத்துல பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி அவங்களோட தோலை வெட்டியெடுத்து விற்பனை செய்யறாங்க. 20 அங்குல தோலை சுமார் 10,000 ரூபாய்க்குப் பெண்கள் விற்பனை செய்யறாங்க. இந்தத் தோல் பிளாஸ்டிக் சர்ஜரிக்குப் பயன்படுத்தப் படுதாம்” என்றார் கல்பனா ஆன்ட்டி.

“அதிர்ச்சியா இருக்கு, இப்படிப்பட்ட கிரிமினல் குற்றங்களைத் தடுத்து நிறுத்தணும். கர்நாடக மாநிலத்தில் பின்தங்கிய மாவட்டமான சாமமராஜநகர், கம்மரஹல்லி கிராமத்தில் படிக்கிற 11 வயது சுசித்ராவும் அவள் தோழிகளும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே பள்ளிக்கு வந்து, அங்கேதான் கழிவறையைப் பயன்படுத்தினாங்க. சுசித்ரா வீட்டில் மட்டும் கழிவறை இருக்கு. பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளிடம் சுசித்ரா தன் ஊரோட நிலைமையைச் சொல்லியிருக்காங்க. ஆச்சரியப்பட்ட அதிகாரி, சுசித்ராவைக் கழிவறை அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு பிரச்சாரகராக ஆக்கியிருக்கார். சுசித்ராவின் முயற்சியால் இப்ப 300 வீடுகளில் கழிவறை வந்திருச்சு. இது எவ்வளவு பெரிய சாதனை!” என்றாள் கனிஷ்கா.

சுசித்ராவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்த கமலா பாட்டியும் கல்பனா ஆன்ட்டியும் அவரவர் ஸ்கூட்டியில் கிளம்ப, கையசைத்தாள் கனிஷ்கா.

Leave a Reply