கனரக வாகனங்களை இயக்கும் வளைகரம்

karmal_2334713gவீடு, வயல்வெளி, செங்கல்சூளை, கட்டுமானப் பணியிடம், தொழிற்சாலை, அலுவலகம் இப்படி எங்கேயும் எப்போதும் உழைத்துக்கொண்டே இருக்கும் பெண்களுக்கு மார்ச் 8 மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் மகளிர் தினமே. சிலர் வாழ்க்கையில் அவ்வப்போது சோதனைகளைச் சந்திக்கலாம். சிலர் அவற்றைக் கடந்துவந்து சாதனையும் புரியலாம். ஆனால் சில பெண்களுக்கு தினசரி வாழ்க்கையே சோதனைதான். அதில் வெற்றிபெற்றுத்தான் அந்தப் பொழுதை அவர்கள் நிறைவுசெய்கிறார்கள். அடுத்தவருக்குப் பாடமாகத் தங்கள் வாழ்க்கையையே முன்வைக்கும் சில சாமானியப் பெண்கள்தான் இந்த மகளிர் தினக் கொண்டாட்டத்தை மேலும் மெருகேற்றுகிறார்கள்.

தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரைக் கொண்ட மாவட்டம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இன்னுமொரு உழைக்கும் கரம். நாகர்கோவிலைச் சேர்ந்த கார்மல் மங்கலம் என்பவர்தான் அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர். பரதநாட்டியக் கலையில் அபிநயம் பிடித்த அவரது கரங்கள் இன்று ஜே.சி.பி. கனரக வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன.

கார்மல் மங்கலத்தின் சொந்த ஊர் நாகர்கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கும் சுங்கான்கடை கிராமம்.

“என்கூடப் பிறந்தவங்க மொத்தம் நாலு பேரு. மூத்தது அண்ணன். அதுக்கப்புறம் நாலு பெண்களில் மூன்றாவது பெண் நான். அப்பா, அம்மா கூலி வேலை செஞ்சுதான் எங்களை வளர்த்தாங்க. அதனால் பள்ளிக்கூடப் படிப்பையே தாண்ட முடியலை” என்று சொல்லும் மங்கலம், பத்தாம் வகுப்புடன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சூழல். அவரது 21-வது வயதில் அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டனர். உடன்பிறந்தவர்கள் திருமணமாகி சென்றுவிட, வீட்டில் மங்கலமும் அவருடைய தங்கையும் மட்டும் தனித்து விடப்பட்டனர்.

“அதுக்கப்புறம் நான் வேலைக்குப் போய் தங்கச்சிக்குக் கல்யாணம் செய்து வைச்சேன். வாழ்க்கை எவ்வளவோ ஓடிருச்சு. எனக்கு மோட்டார் தொழில்தான் வாழ்க்கையைக் கொடுத்துச்சு. வறுமையை விரட்டி, குடும்பத்தைத் தூக்கி நிறுத்தணும்னு ஓடினதுல என்னோட கல்யாணத்தைப் பத்தி நினைக்கக்கூட நேரமில்லாமப் போச்சு” என்று சொல்லும் மங்கலம், முதலில் கார் டிரைவராகத்தான் தன் பணியை ஆரம்பித்தார்.

பெண்களாலும் முடியும்

“நான் ரொம்ப குறைவான காலத்துலேயே டிரைவிங் கத்துகிட்டதைப் பார்த்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர், என்னை அவங்க டிரைவிங் ஸ்கூலிலேயே பயிற்சியாளராக வேலைக்குச் சேர்த்தாரு. அதில் 12 வருஷம் வேலை செய்தேன். இடையில் தனியார் பள்ளி வேனும் ஓட்டினேன்” என்று சொல்லும் மங்கலம், அதற்குப் பிறகு தனியாக ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களுக்காக பெண்ணால் தொடங்கப்பட்ட முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளி இவருடையதுதான். பள்ளி நல்ல நிலைமையில் இருக்கும்போதே கனரக வாகனம் இயக்கக் கற்றுக் கொண்டார். ஆனால் அது அத்தனை சுலபமானதாக இல்லை. பொதுவாகவே ஜேசிபி போன்ற கனரக வாகனங்களை ஆண்கள் மட்டுமே இயக்க முடியும் என்ற பலரது நினைப்பு, மங்கலத்தின் பயிற்சிக்குத் தடையாக இருந்தது.

“அந்த எண்ணத்தை மாத்தி, ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் எல்லாம் செய்ய முடியும்னு நிரூபிக்க நினைச்சேன். பெண்களால் ஜேசிபி ஓட்ட முடியாதுன்னு பல பயிற்சி மையங்களில் என்னைத் திருப்பி அனுப்பிட்டாங்க. அப்போதான் என் நண்பர் ஒருவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவரது ஜேசிபியிலேயே குறுகிய காலத்திலேயே ஓட்டவும் கத்துக்கிட்டேன். ஜேசிபியை இயக்கும்போது ஒரே நேரத்தில் பலகட்ட பணிகளைச் செய்ய வேண்டும் என சிலர் பயமுறுத்தினர். பெண்கள் அதை நினைத்து மலைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு? மகள், மனைவி, தாய், இல்லத்தரசினு பல பரிமாணங்களிலும் ஒரு பெண் முத்திரை பதிப்பவள்தானே” என்று சொல்லும்போதே மங்கலத்தின் கண்களில் வெற்றிப் பெருமிதம்.

தன் எல்லா முயற்சிக்கும் உறுதுணையாக இருந்த தன் தோழி ஜோஷியை நன்றியுடன் நினைவுகூர்கிறார். மங்கலத்துக்கு பரதக் கலையின் மீதும் ஆர்வம்.

“எனக்குச் சின்ன வயசிலேயே பரத நாட்டியம் மேல கொள்ளைப் பிரியம். பரதமும் கத்துகிட்டேன். ஆனா அந்தக் கலையை தாண்டி வாழ்க்கை ஓட்டத்துக்குப் பணம் தேவைன்னு ஒரு சூழல் உருவானப்போ டிரைவர் அவதாரம் எடுத்தேன். பரதத்தை விடவும் மனசு இல்லை. இப்பவும் அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு பரதம் சொல்லித் தர்றேன்” என்று சொல்லிவிட்டு ஜேசிபி இன்ஜினை முடுக்குகிறார் மங்கலம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *