shadow

கட்டாய கட்டுமான ஒப்பந்தம் நன்மையா?

கட்டுமானத் துறையில் வாடிக்கையாளார்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல புதிய அம்சங்களும் சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு அம்சமாகக் கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கட்டுமான ஒப்பந்தங்கள் செய்துகொள்வது வழக்கத்தில் உள்ளது. ஆனால், சில ஆண்டுகள் முன்பு வரை கட்டுமான ஒப்பந்தம் பதிவுசெய்யப்படாமலேயே கட்டிடங்கள் கட்டப்படுவதும் வழக்கத்தில் இருந்தது. இதனால் கட்டுநர்கள் வாக்குறுதி மீறும்போது அதற்கு எதிராக வாடிக்கையாளர்களால் எதுவும் செய்ய முடியாமல் போக வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க இந்தப் புதிய சட்டத்தில் கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கட்டுமான ஒப்பந்தம் சொல்வது என்ன?

இடத்தின் அளவு, வீடு கட்டி முடிக்கப்படும் காலம், வீட்டுக்கான மதிப்பு, வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிவறை, குளியலறை எப்படி அமைக்கப்படும் உள்படப் பல்வேறு விஷயங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெறும். வீட்டைச் சுற்றி உள்ள நான்கு எல்லைகள், வீடு அமைய உள்ள அளவு, வீடு எங்கு அமைந்துள்ளது, எந்தப் பதிவு மாவட்டத்தின் கீழ் வருகிறது போன்ற ஷரத்துகள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும்.

எந்த உள்ளாட்சி அமைப்பில் இருந்து கட்டிட அனுமதி பெறப்பட்டது, அதற்கான அனுமதி எண், திட்டத்துக்கான அங்கீகாரம், அது வழங்கப்பட்ட நாள், கட்டப்படும் கட்டிடம் எந்தப் பெயரால் அழைக்கப்படும் போன்ற விவரங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறும். வீட்டை ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்பட்டால் கட்டுமான நிறுவனம் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது முக்கியமான அம்சம். கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் புகைப்படமும், வீட்டை வாங்குபவரின் புகைப்படமும் கைரேகையும் இடம்பெறும். வீட்டின் மொத்த மதிப்பும், தரப்பட்ட முன்பணம், எந்தெந்த நிலைகளில் மீதிப் பணத்தைத் தர வேண்டும் போன்ற விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இவையெல்லாம் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்.

ஒப்பந்தத்தின் நடைமுறைச் சிக்கல்கள்

வாடிக்கையாளர் களுக்குப் பாதுகாப்பு இருந்தால்தான் கட்டுமானத் துறையில் முதலீடு பெருகும். அந்த வகையில் இந்தக் கட்டுமான ஒப்பந்தம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்கிறார் அக்‌ஷயா ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைவர் சிட்டிபாபு. “சமீபத்திய பட்ஜெட்டாக இருக்கட்டும். இந்தப் புதிய சட்டமாக இருக்கட்டும். கட்டுமானத் துறைக்குச் சாதகமாகத்தான் உள்ளது. வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடுகளுக்கு மானியமும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் கட்டுமான ஒப்பந்தம் கட்டாயப் பதிவின் மூலம் வாடிக்கை யாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். வாடிக்கையாளார்கள் பாதுகாப்பு உறுதியிருந்தால்தான் வீடு வாங்க முன்வருவார்கள். இந்தச் சட்டம் தரும் பாதுகாப்பின் மூலம் கட்டுமானத் துறை வளர்ச்சி அடையும்” என்கிறார் அவர்.

ஆனால், இந்தக் கட்டுமான ஒப்பந்தப் பதிவால் பதிவுக் கட்டணம் சுமையாக உயர்ந்துள்ளது எனச் சொல்லப்படுகிறது. கட்டுமானத்துக்கு ஆகும் செலவில் ஒரு சதவீதம் முத்திரைத் தீர்வையாக வசூலிக்கப்படும். இது ஒரு புதிய சிக்கலைக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறார் புறநகர் கட்டுமானச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ரகுநாத். “இந்தக் கட்டுமான ஒப்பந்தப் பதிவால் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்பது உண்மைதான். ஆனால், ஏற்கெனவே உள்ள சேவை வரி, பத்திரப்பதிவு எனப் பல கட்டணங்கள் இருக்கும்போது இந்தப் புதிய சட்டம் மேலும் சுமையாகிறது. வாடிக்கையாளர் வீட்டைப் பதிவுசெய்வதற்கு ரூ.650 (சதுர அடிக்கு) ஆகிறது. பத்து ஆண்டுக்கு முன்பு 100 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது” என்கிறார் அவர்.

ஆனால், இந்த எல்லாம் அம்சத்துடன் இந்தச் சட்டம் அவசியமானதுதான் எனச் சொல்லும் ரூபி பில்டர்ஸ் கட்டுமான நிறுவனத் தலைவர் ரூபி.மனோகரன், “கட்டுமானத் துறைக்குச் சாதகமான சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் இந்த ஆண்டு தொடக்கத்திலிந்தே விரைவாக விற்பனையாகி வருகின்றன. அதற்கு முக்கியக் காரணம் வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்வுதான். நாங்கள் ஒப்பந்தப்படி சரியான காலக்கெடுவில் வீட்டைக் கையளித்துவிடுகிறோம். மற்ற கட்டுநர்களும் இதைப் பின்பற்ற இந்தச் சட்டம் வழிவகை செய்யும்” என்கிறார் அவர்.

Leave a Reply