shadow

கடன் பிரச்னை தீர வேண்டுமா? இதோ சில எளிய வழிபாடுகள்!

மனிதனுக்கு மூவகைக் கடன்கள் உள்ளன என்கின்றன ஞானநூல்கள். அவை தேவ கடன், பித்ருக் கடன், ரிஷி கடன். இவற்றை நாம் செய்யவேண்டிய அறங்களாக, கடமைகளாகவே ஏற்க வேண்டும்.

அனுதின பூஜை வழிபாடுகளாலும், வேள்வி ஆராதனைகளாலும், ஆலய தரிசனங்களாலும் தேவ கடனை நிறைவேற்றுகிறோம். முன்னோருக்குச் செய்யவேண்டிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலானவற்றை முறைப்படி செய்வதன் மூலம் பித்ருக் கடனை நிறைவேற்றுகிறோம். மகான்களை, சாதுக்களை ஆராதிப்பதன்மூலம் ரிஷி கடனை நிறைவேற்றுகிறோம். இவை யாவும் பெரும் புண்ணியங்களை அளித்து, நமது பிறவியைப் பூரணத்துவமாக்கும் என்கின்றன ஞானநூல்கள்.
எனினும் பொதுவில் ‘கடன்’ எனும் சொல், பொருளாதாரப் பற்றாக்குறையால் ஏற்படும் நமது சுமையைக் குறிப்பதாகவே திகழ்கிறது. வேலையில்லாமையால் கடன், படிப்புக்காகக் கடன், வீடுகட்டுவதற்காகக் கடன், பிள்ளைகளின் கல்யாணத்தின் பொருட்டு கடன், மருத்துவ சிகிச்சைகளுக்காகக் கடன்… இப்படி தனிமனிதனின் கடன் பிரச்னைகள், அவனுக்குப் பெரும் சுமையாகி அழுத்துகின்றன. கடன் இல்லாத வாழ்க்கைதான் கவலையில்லாத வாழ்க்கை. பொருளாதார ரீதியாக நாம் ஏற்படுத்திக்கொள்ளும் கடன் பிரச்னைகள், நமது ஒட்டுமொத்த நிம்மதியையும் அழித்து விடும். திக்கற்றவருக்குத் தெய்வமே துணை. அவ்வகையில் கடன் சுமையால் திக்கற்று தவிக்கும் அன்பர்கள், கடன் சுமையில் இருந்து விடுபடும் பொருட்டு, தெய்வத்தின் திருவருளை நாடுவதற்கான எளிய வழிபாடுகள், கடன் பிரச்னை தீர திருவருள்புரியும் தெய்வ துதிப் பாடல்கள், ஜாதகத்தில் கடன் பிரச்னையைக் குறிக்கும் கிரகநிலைகள், அவற்றுக்கான எளிய பரிகாரங்கள் ஆகியவைக் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

கடன்கள் ஏற்படக் காரணமும் பரிகாரங்களும்…

லக்னத்தில் இருந்து 6-ம் இடம் என்பது ருண – ரோக – சத்ருஸ்தானம் ஆகும். ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவன் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்கு பொருளாதார ரீதியாக சரிவு ஏற்படுவதுடன், பெருத்த கடன்களையும் உண்டாக்கும். மேலும் எதிரிகளாலும், நோய்களாலும் துன்பப்பட நேரிடும். ஒவ்வொரு லக்னத்தைச் சேர்ந்தவர்களும் உரிய பரிகாரம் செய்வதன் மூலம் கடன்களில் இருந்து விடுபடலாம்.

மேஷ லக்னம்: மேஷ லக்னத்துக்கு 6-ம் இடமான கன்னிக்கு உரிய கிரகம் புதன். புதன் கிரகம் கன்னியிலேயே வலுப்பெற்று அமைந்திருந்தால், ஜாதகருக்குக் கடன் சுமை உண்டாகும். கடன் சுமைகளில் இருந்து விடுபட, திருப்பதிக்குச் சென்று பெருமாளை வழிபடுவதுடன், ஏழை அந்தணருக்குப் பச்சை நிற வஸ்திரங்கள், பச்சைப்பயறு போன்றவற்றை தானம் செய்யலாம்.

ரிஷப லக்னம்: ரிஷப லக்னத்துக்கு 6-ம் இடம் துலாம். துலாம் ராசிக்கு உரிய கிரகம் சுக்கிரன். சுக்கிரன் துலாமிலேயே வலுப் பெற்றிருந்தால், கடன்கள் ஏற்படும். கடன்கள் தீரவேண்டுமென்றால், ஸ்ரீரங்கத்துக்குச் சென்று ரங்கநாதப் பெருமாளைத் தரிசிப்பதுடன், பளபளப்பான வெண்ணிற வஸ்திரம், மொச்சை போன்றவற்றை தானம் செய்தால் கடன்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மிதுன லக்னம்: மிதுன லக்னத்துக்கு 6-க்கு உடைய செவ்வாய் 6-ம் இடமான விருச்சிகத்திலேயே வலுப்பெற்று இருந்தால், வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று செல்வ முத்துக்குமாரசுவாமியை வழிபடுவதுடன், செந்நிற வஸ்திரம், துவரம்பருப்பு போன்றவற்றை தானம் செய்யலாம்.

கடக லக்னம்: கடக லக்னத்துக்கு 6-க்கு உரிய கிரகமான குரு தனுசு ராசியில் வலுப்பெற்று இருந்தால், திட்டைக்குச் சென்று குரு பகவானை வழிபடுவதுடன், பொன்னிற வஸ்திரத்தையும், கறுப்பு கொண்டைக்கடலையையும் தானம் செய்வது கடன்களில் இருந்து நிவாரணம் தரும்.

சிம்ம லக்னம்: சிம்ம லக்னத்துக்கு 6-க்கு உடைய சனி 6-ல் வலுப்பெற்று இருந்தால், குச்சனூருக்குச் சென்று சனி பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதுடன், ஏழை அந்தணருக்குக் கருநீல வஸ்திரம், எள், வெல்லம் போன்றவற்றை தானம் செய்யலாம்.

கன்னி லக்னம்: கன்னி லக்னத்துக்கு 6-க்கு உடைய சனி 6-லேயே வலுப்பெற்று இருந்தால், திருநள்ளாறு சென்று சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். முன் சொன்னபடியே கருநீல வஸ்திரம், எள், வெல்லம் போன்றவற்றை ஏழை அந்தணருக்குத் தானம் செய்ய வேண்டும்.

துலா லக்னம்: துலா லக்னத்துக்கு 6-க்கு உடைய குரு மீனத்திலேயே வலுப்பெற்று இருந்தால், ஆலங்குடிக்குச் சென்று தட்சிணாமூர்த்தியைத் தரிசித்து, பொன்னிற வஸ்திரம், கறுப்பு கொண்டைக்கடலை போன்றவற்றை ஏழை அந்தணருக்குத் தானம் செய்து நிவாரணம் பெறலாம்.

விருச்சிக லக்னம்: விருச்சிக லக்னத்துக்கு 6-க்கு உடைய கிரகமான செவ்வாய் மேஷத்திலேயே வலுப்பெற்று இருந்தால், திருச்செந்தூருக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு, செந்நிற வஸ்திரம் மற்றும் துவரை போன்றவற்றை தானம் செய்வது சிறந்த பரிகாரம் ஆகும்.

தனுசு லக்னம்: தனுசு லக்னத்துக்கு 6-க்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர்கள் கஞ்சனூர் சென்று சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், மொச்சை, பளபளப்பான வெண்ணிற வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம்.

மகர லக்னம்: மகர லக்னத்துக்கு 6-க்கு அதிபதியான புதன் 6-ல் வலுப்பெற்று இருந்தால், திருவெண்காடு சென்று வழிபடுவதுடன், பச்சை நிற வஸ்திரம், பச்சைப்பயறு போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.

கும்ப லக்னம்: கும்ப லக்னத்துக்கு 6-க்கு அதிபதி சந்திரன். இவர் கடகத்தில் வலுப் பெற்று இருந்தால், திங்களூருக்குச் சென்று சந்திரனுக்கு அர்ச்சனை செய்து, வெண்ணிற வஸ்திரம், பச்சரிசி தானம் செய்ய வேண்டும்.

மீன லக்னம்: மீன லக்னத்துக்கு 6-க்கு உரிய சூரியன் 6-ல் வலுப்பெற்று இருந்தால், சூரியனார்கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து, ஆரஞ்சு நிற வஸ்திரம் மற்றும் கோதுமை தானம் செய்தால் கடன்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மேலே சொன்ன பரிகாரங்களைச் செய்ய இயலாதவர்கள் ஆறு வாரங்களுக்குப் பசுவுக்கு வாழைப் பழங்களும், அகத்திக்கீரையும் தந்து வந்தால் கடன்களில் இருந்து சிறிது சிறிதாக நிவாரணம் பெறலாம்.

Leave a Reply