ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வராவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு: ராஜ்தாக்கரே

எலக்ட்ரானின் வாக்குப்பதி இயந்திரத்தில் தேர்தல் நடத்துவதால் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் மீண்டும் பழையபடி வாக்குச்சீட்டு பயன்படுத்தியே தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்த நிலையில் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவராவிட்டால் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடிதம் எழுதி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலேயே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விக்குறி எழுந்தது.

பல தொகுதிகளில் எனது கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களும், எம்.எல்.ஏ.க்களும் தீவிரமாக உழைத்தனர். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது. சில தொகுதிகளில் எங்களது வேட்பாளருக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. இது எப்படி சாத்தியமாகும்?

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற முன்னேறிய நாடுகள் தற்போதும் ஓட்டுச்சீட்டு முறையை தான் கடைப்பிடிக்கின்றன.

இந்தியா, நைஜீரியா, வெனிசுலா உள்ளிட்ட சில நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துகின்றன. இந்த முரண்பாடான முறையை நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும்?

இதுகுறித்து அரசியல் கட்சிகள் ஒன்றாக வலியுறுத்தவில்லை என்றால், நாம் ஜனநாயக நாடு என்ற பெருமையை இழக்க நேரிடும்.

எனவே பழைய ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவரவேண்டும் அல்லது வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டு அளிக்கும் எந்திரத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு ராஜ்தாக்கரே தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *