ஒரு படுக்கையறை வீடு நல்லதா? கெட்டதா?

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், நகரின் மத்திய பகுதியில் வீடு வாங்குவது செலவு பிடிக்கும் விஷயம். ஆனால், அந்த வீடுகள் சில ஆண்டுகளிலேயே குறிப்பிடத்தக்க அளவு விலை உயர்ந்துவிடுவதையும் பார்க்கிறோம். இதன் காரணமாகவே, நகரின் மையப் பகுதியில் விலை அதிகம் என்றாலும், வீடுகளை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தங்களின் தேவைக்காக வீடுகளை வாங்குபவர்கள் ஒருபுறம் என்றால், சொந்த வீடு இருந்தாலும், முதலீட்டைப் பெருக்குவதற்காக மீண்டும் ஒரு வீட்டை வாங்கி, அதை வாடகைக்கு விடுபவர்களும் இருக்கிறார்கள்.

இதில் கிடைக்கும் வாடகை, முதலீட்டுத் தொகைக்கு ஈடாகுமா என்ற கேள்வி எழுந்தாலும், புதிதாக வாங்கிய வீடு, அடுத்த சில ஆண்டுகளில் விலை உயர்ந்துவிடும் என்பதே முதலீட்டாளர்களின் எண்ணம். எனவே, நகர்ப்பகுதிகளில் வீடு வாங்குவது சிறந்த முதலீட்டு யோசனையாக இருந்துவருகிறது. அதேசமயம் அதிகத் தொகையை முதலீடு செய்வது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறை முதலீட்டு ஆலோசகர்கள். ‘ஒரு வரவேற்பறை, ஒரு சமையலறை, ஒரு படுக்கை அறை கொண்ட விலை குறைந்த ஒரு படுக்கையறை வீடுகளை வாங்குவது சிறந்ததாக இருக்கும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள்கூடக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒரு படுக்கையறை வீடுகளைக் கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றன. இதற்கு முக்கியக் காரணம், அதற்கான தேவை உயர்ந்துள்ளதுதான் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையினர்.

அளவில் சிறியதாக இருந்தாலும், ஒரு படுக்கையறை வீடுகளுக்கான அடிப்படைத் தேவைகள், வசதிகளைச் செய்து தந்து கட்டுமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவரவும் செய்கிறார்கள். ஒரு புள்ளிவிவரக் கணக்கின்படி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கட்டப்பட்ட ஒரு படுக்கையறை வீடுகளே, முதலில் விற்பனையாகின்றன. ஒரு படுக்கையறை வீடுகளை வாங்கும் நுகர்வோருக்கு இதில் பல விஷயங்கள் சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இரு படுக்கையறை, மூன்று படுக்கையறை போன்ற பெரிய வீடுகளைவிட ஒரு படுக்கையறை வீடுகள் விலை குறைவாகவே இருக்கும் என்பதும் இதில் சிறப்பு. எனவே, குறைந்த வருமானம் உள்ள நடுத்தர குடும்பத்தினர்கூட வங்கி வழியே விண்ணப்பித்து, சிக்கலின்றிக் கடனுதவி பெறலாம். குறைந்த விலையில் வீடு வாங்குவதால் மாதாந்திரத் தவணைத் தொகை (இஎம்ஐ) குறைவாகவே இருக்கும். மேலும் வீட்டுக் கடனை எளிதில் திரும்பிச் செலுத்திவிடலாம். வருவாய் அதிகமுள்ள குடும்பம் என்றால், வங்கிக் கடனுதவி இல்லாமலேயே, சொந்த முதலீட்டில் ஒரு படுக்கையறை வீடுகளை வாங்கவும் முடியும்.

இதுமட்டுமல்ல, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றுவோர் எனப் பலரும் நகரின் மையப் பகுதிகளில், வீட்டை வாடகைக்கு எடுக்கவே விரும்புவார்கள். அவர்களுக்கு, ஒரு படுக்கையறை வீடுகள் சிறந்த தேர்வாகவே இருக்கும். முதலீடாக வாங்கினால்கூட இந்த வீட்டை வாடகைக்கு விடுவதில் தாமதம் ஏற்படாது என்பது கூடுதல் சிறப்பம்சம். குறிப்பாகக் கல்லூரி செல்லும் மாணவர்கள், தங்களின் படிப்பை முடிக்கும்வரை வாடகை வீடுகளில் தங்க விரும்புவார்கள். அதனால், குறைந்த வாடகை கொண்ட ஒரு படுக்கையறை வீடுகளே அவர்களின் முதல் தேர்வாக இருக்கும். தவிர, பிற பகுதிகளிலிருந்து பணி நிமித்தமாக, பெரு நகரங்களுக்குக் குடியேறுபவர்களும் ஒரு படுக்கையறை வீடுகளையே வாடகைக்கு எடுக்க விரும்புவார்கள்.

இப்படிப் பல சாதகமான அம்சங்கள் இருப்பதால், பெரு நகரங்களில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற, ஒரு படுக்கையறை வீடுகளைத் தேர்வு செய்வதே சிறந்த முடிவாக இருக்கும்

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *