ஏர் இந்தியா பங்கு விலக்கல்: எர்னஸ்ட் அண்ட் யங் ஆலோசகராக நியமனம்

கடனில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. பங்கு விலக்கலுக்கு ஆலோசனை வழங்குவதற்காக எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தை மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. இந்த தகவலை மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு இது தொடர்பான ஏலத்தை அறிவித்தது. ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கு அரசுக்கு நிதி மற்றும் சட்ட ஆலோசனைகளை இந்த நிறுவனம் வழங்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வழித்தடங்களை மொத்தமாக வாங்கும் நிறுவனங்களுக்கே ஏர் இந்தியா விற்கப்படும் என அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். தவிர ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்கள் தனியாக ஏலம் விடப்படும். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்றும் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

முன்னதாக இண்டிகோ நிறுவனம் ஏர் இந்தியாவின் வெளிநாட்டு வழித்தடங்களை மட்டுமே வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தது. இந்த நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயல்பாடுகளை வாங்கும் நிறுவனங்களுக்கே ஏர் இந்தியா பங்கு விலக்கல் என அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது.

எஸ்ஏடிஎஸ், பர்டு குழுமம் செலிபி ஆகிய நிறுவனங்கள் ஏர் இந்தியாவின் இதர பிரிவுகளை (விமான நிலைய செயல்பாடு உள்ளிட்டவை) வாங்குவதற்கு ஆர்வம் காட்டியிருக்கின்றன. கடந்த 2015-16-ம் ஆண்டில் செயல்பாட்டு லாபம் ரூ.105 கோடியாக இருந்தது. ஆனால் நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.50,000 கோடிக்கு மேல் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *