எல்லாவற்றுக்கும் ஆயுட்காலம் உண்டு

படைத்தல், காத்தல், அழித்தல் மூன்றும் ஆண்டவன் கடமைகள் மட்டுமல்ல. முதலாளியின் கடமைகளும்கூட. ஒரு தொழிலை உருவாக்குவதும் பராமரிப்பதும் சரி. அதென்ன அழிப்பது? யாராவது தான் வளர்த்த தொழிலைத் தானே அழிப்பார்களா என்று நீங்கள் யோசிக்கலாம்.

எல்லாவற்றுக்கும் ஆயுட்காலம் உண்டு

இதை விவாதிப்பதிற்கு முன்னதாக உங்களுடைய தொழிலின் ஆயுள் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் ஆயுள் உள்ளது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும்கூட ஆயுட்காலம் உண்டு. காலத்தை மீறி நிற்பவை என்பதெல்லாம் பம்மாத்து வேலை. நூறு ஆண்டுகள் தாக்கு பிடித்த நிறுவனங்கள்கூட அடுத்த 100 ஆண்டுகள் இருக்கும் என்று சொல்ல முடியுமா?

இவ்வளவு ஏன், இங்குள்ள ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களைக் கேளுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்த்து மூடிய நிறுவனங்கள் எத்தனை என்றும். எத்தனை பொருட்கள் காலாவதியாகி உள்ளன என்றும் கேளுங்கள். எத்தனை பிரபலங்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்றால் பெரிய பட்டியலே தருவார்கள். இதெல்லாம் அழியவே அழியாது என்று நான் நம்பியவை, என் கண் முன்னே சரிவதை நானே பல முறை கண்டிருக்கிறேன். பலரின் ஆருடம் பொய்த்திருப்பதை நினைத்தால் சிரிப்பாகக்கூட இருக்கும்.

எல்லாவற்றுக்கும் ஆயுட்காலம் உண்டு என்பதுதான் நிஜம். அதைப் புரிந்துகொள்ளுதல் புத்திசாலித்தனம். முன்பு தொழில் உலகில் எல்லாவற்றுக்கும் சற்று நீண்ட ஆயுள் இருந்தது உண்மை. இன்று ஆயுள் குறைந்துவருகிறது. ஜனத்தொகை பெருகுவதுபோலத் தொழில்களின், தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் பெருகிவருவது உண்மை. அவற்றில் பல அற்ப ஆயுளில் மறைந்துவிடுகின்றன. பல நின்று நிலைத்து ஏதோ ஒரு அலையில் அடித்துச் செல்லப்படுகின்றன.

அழித்தல் படைத்தலை உருவாக்கும்

அதனால் என்ன செய்ய வேண்டும்? காலம் அழிக்கும் முன் நீங்கள் உங்கள் தொழிலைச் சிறிதாகவோ பெரிதாகவோ முற்றாகவோ அழிக்க முன் வர வேண்டும். ஒரு தொழிலை விட்டு எப்போது வெளியே வர வேண்டும் என்று தெரிய வேண்டும். லாபத்தில் கணக்கை முடிக்க வேண்டும். எல்லோர் ஆசிகளுடனும் நல்ல எண்ணங்களுடனும் விடை தர வேண்டும். ஒரு அழித்தல் ஒரு படைத்தலை உருவாக்கும். இதுதான் நியதி. இன்னமும் சொல்ல வேண்டும் என்றால் அழித்தல்தான் படைத்தலைத் தோற்றுவிக்கும். அழிவை ஒரு பிரச்சினையின்போது யோசிக்காதீர்கள். தொழில் உங்கள் கட்டுக்குள் இருக்கும்போது, நிலைமை நன்றாக உள்ளபோது யோசியுங்கள். அதுதான் சரியான தருணம். அதுதான் சிறந்த படைப்பாற்றலை உருவாக்கும்.

உருமாற்றுவது நல்லதுதானே?

தெருவெல்லாம் தனியார் டெலிஃபோன் பூத்கள் இருந்த காலத்தில் அதை மட்டுமே நம்பியிருந்தவர்கள் பலர் காணாமல் போய்விட்டார்கள். லாபமாகப் போய்க்கொண்டிருக்கும்போதே அதையொட்டிப் பெட்டிக்கடை போட்டவர்கள் பிழைத்தார்கள். இப்படி ஒவ்வொரு தொழிலும் அழிவின் விளிம்புக்கு வரும் முன்னரே அடுத்த தொழிலுக்கோ அல்லது இதே தொழிலின் வேறு வடிவத்துக்கோ செல்பவர்கள் நிலைக்கிறார்கள். வேறு தொழிலுக்குக்கூடப் போகாமல் அதோடு முடித்துக்கொள்பவர்களும் உண்டு. “இந்த அச்சுத் தொழிலை என் மகன் செய்யப்போவதில்லை. வேறு தொழில் செய்யப் பிரியமோ, திடமோ என்னிடம் இல்லை. எனக்கும் வயதாகிவிட்டது. அதனால் அதை விற்றுவிட்டேன். மகனுக்குச் சில அசையா சொத்துகள் போதும். அதனால் மீதமுள்ள பணத்தில் உலகச் சுற்றுலா போகிறேன்!” என்றார் நண்பர் ஒருவர்.

பஞ்சு அருணாசலம் ஒரு முறை எழுதியிருந்தார்: “மாறி வரும் காலத்தின் போக்கு தெரிந்து என்னுடன் அதிகம் பணியாற்றிய எஸ்.பி. முத்துராமன் சினிமாத் தொழிலை விட்டார். ஆனால், நான் தொடர்ந்து படங்கள் எடுத்துப் பெரும் நஷ்டத்துக்கு ஆளானேன்!” இயக்குனரான எஸ்.பி.முத்துராமன் அடிப்படையில் நல்ல தொழில் அறிவு கொண்டவராக இருந்ததும், தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாசசலம் அடிப்படையில் ஒரு கலைஞராக இருந்ததும்தான் காரணம் என்று எண்ணிக்கொள்வேன்.

நீங்கள் ஒரு தொழில் முதலாளியாக இருந்தால் உங்கள் தொழிலின் அழிவு பற்றி யோசியுங்கள். காலம் உங்களை உருமாற்றுவதற்கு முன்பு நீங்களே உங்களை உருமாற்றுவது நல்லது தானே? அழிவு என்பது பெரிய வார்த்தையாகத் தெரிந்தால் மாற்றம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் தொழிலில் எதைச் மாற்றலாம், எதை நீக்கலாம், எதை சேர்க்கலாம், எதை முழுவதுமாக அழிக்கலாம்? இப்படி ஒரு பட்டியல் போடுங்கள். பணியாளர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் கேளுங்கள்.

எதை அழித்து எதை எப்படி உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *