எட்டு நிமிடங்களில் ஒரு கட்டுமானம்

தொழில்நுட்பத்தின் எல்லைகள் நாளுக்குநாள் விரிவடைந்துகொண்டே இருக்கின்றன. இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாத் துறைகளிலும் எதிரொலிப்பதைப் போல் கட்டுமானத் துறையிலும் வெவ்வேறு விதங்களில் எதிரொலிக்கிறது. அந்த வகையில், பட்டனைத் தட்டினால் எங்கு வேண்டுமானாலும் கட்டுமானத்தை உருவாக்கும் ஒரு அதி நவீன தானியங்கித் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம். ‘டென்ஃபோல்ட் இஞ்சினீயரிங்’ (Ten Fold Engineering) என்ற இந்த நிறுவனம், இந்த ஆண்டின் இறுதியில் இந்த ‘டென் ஃபோல்ட்’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தயாரிப்புகளை விநியோகிக்க இருக்கிறது.

நகரும் கட்டிடங்கள்

2011-ம் ஆண்டு, டேவிட் மார்டின் என்ற கட்டிடக் கலைஞரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கடந்த ஆண்டு சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது. ஒரு டிரக்கில் எடுத்துச் சென்று எங்கு வேண்டுமானாலும் அமைக்கப்படும் நகரும் கட்டுமானமாக இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பத்து மடிப்புகளாக ‘லிவர்’ (Lever) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிரக்கில் எடுத்துச்செல்லும்படி இந்தக் கட்டுமானங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பட்டனை அழுத்திய எட்டு நிமிடங்களில், நிலத்தில் ஒரு கட்டுமானத்தை உருவாக்குகிறது இந்தத் தொழில்நுட்பம்.

இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கிய கட்டிடக் கலைஞர் டேவிட் மார்டின் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக சொகுசுக் குடியிருப்புகளை வடிவமைத்துவந்திருக்கிறார். அவர், கட்டுமானத் துறையில் நிலவும் குடியிருப்புகளுக்கான இடப்பற்றாக்குறை பிரச்சினையைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படித் தீர்க்க முடியும் என்பதைத் தொடர்ந்து சிந்தித்துவந்திருக்கிறார். அப்படிச் சிந்தித்துதான், இந்த ‘டென்ஃபோல்ட்’ தொழில்நுட்பம். “நாங்கள் கட்டுமானங்களைப் பற்றிய புதிய சிந்தனையை உருவாக்க நினைத்தோம். நாம் தற்போது நிலத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டுமானங்களில் வசித்துவருகிறோம். நாம் நாடோடிக் கலாச்சாரத்தைவிட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். ஆனால், இந்த ‘டென்ஃபோல்ட்’ தொழில்நுட்பம் ஒரு நவீன நாடோடிக் கலாச்சாரத்தின் கருத்தாக்கமாக்க இருக்கும்” என்று சொல்கிறார் டேவிட் மார்டின்.

பலவிதமான பயன்பாடுகள்

இந்த ‘டென் ஃபோல்ட்’ தொழில்நுட்பத்தின் தயாரிப்புகள் பலவகையான கட்டுமானத் தேவைகளைப்பூர்த்தி செய்யும்படி வடிவமைக்கப்படுகின்றன. இந்தத் தயாரிப்புகளை வைத்து நகரும் பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் அகதிகள் முகாம்களையும் தற்காலிக தங்குமிடங்களையும் பிரம்மாண்ட அரங்கங்களையும் வடிவமைக்க முடியும். இந்த ‘டென் ஃபோல்ட்’ கட்டமைப்புகள் ‘ஸ்மார்ட்’ கணினித் தொழில்நுட்பம் எதையும் பயன்படுத்தாமல், எளிமையான இயற்பியலில் மட்டுமே இயங்குவதாகத் தெரிவிக்கிறார் மார்ட்டின். இந்நிறுவனம் வெளியிட்ட காணொளி, சென்ற ஆண்டு சமூக ஊடகங்களில் வைரலானது. ஐரோப்பிய, அமெரிக்கச் சந்தைகளில் இந்தக் குடியிருப்புப் பகுதிகள் இந்த ஆண்டின் இறுதியில் விநியோகிக்கப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இந்தக் குடியிருப்புப் பகுதியின் ஆரம்ப விலை 1,30,000 அமெரிக்க டாலர்கள் (ரூ. 81,90,000) என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நகரும் சுவர்கள், கப்பல் கொள்கலன் வீடுகள், ஸ்யூரிக்கின் ரோபோட் கட்டிய ‘டிஃஎப்ஏபி ஹவுஸ்’ போன்றவற்றைத் தொடர்ந்து இப்போது சர்வதேச கட்டமைப்புச் சந்தையில் ‘டென்ஃபோல்ட்’ கட்டமைப்புகள் அறிமுகமாகி யிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *