ஊழல் நிரூபிக்கப்பட்டதால் முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அரசியல்வாதிகள் தண்டனை பெறுவது வெகு அரிதாகவே உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் நடந்து வரும் நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது .அதுமட்டுமின்றி நவாஸ் ஷெரிப் மகள் மரியம் ஷெரீப் அவர்களுக்கு 7 வருட காவல் தண்டனையும், அவருடைய மருமகன் முகமது சஃப்தார் அவான் அவருக்கு 1 வருட தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது.

கடந்த 2015ஆம் வெளியான பனாமா பேப்பர் விவகாரத்தின் மூலமாக அவரும் அவருடைய குடும்பத்தினரும், வெளிநாட்டில் பல்வேறு நிறுவனங்களில் சட்டத்திற்கு புறம்பாக பணம் முதலீடு செய்யப்பட்டது தெரிய வந்தது.

லண்டன் பார்க் லேன் பகுதியில் இருக்கும், அவென்ஃபீல்ட் பகுதியில் நான்கு விலையுயர்ந்த சொகுசு பங்களாக்கள் வாங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி வெளிவந்த பின்பு, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு இந்த வழக்கினை விசாரித்தது.அதில் அவர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற 25ம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடக்க இருப்பதால், இந்த தீர்ப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. லாகூர் தொகுதியில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் வேட்பாளராக மரியம் அறிவிக்கப்பட்ட நிலையில், தண்டனை வழங்கப்பட்டதால், தேர்தலில் அவரால் போட்டியிட இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *