உயர்கல்வித் துறையில் தேவை சிந்தனை மாற்றம்
education
உலகின் மற்றெந்த நாட்டையும் விட கல்வித் துறையில் நமக்கு பெரும் பாரம்பரியமும், நீண்ட வரலாறும் உள்ளது. உயர்கல்வியைப் பொருத்த வரையில் உலகின் முதல் பல்கலைக்கழகமான தட்சசீலாவில் தொடங்கி, நாளந்தா உள்ளிட்ட புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டு வந்துள்ளன.

ஒரு காலனி நாடாக இந்தியா மாறிய பின்னர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நம்மை ஆளுமை செய்து வந்த ஆங்கிலேயர்கள் இங்கு நிலவிவந்த கல்வி முறையை மாற்றினர். அதற்கான நோக்கம் நமது தேசத்தின் அடிப்படையைத் தகர்த்தெறிந்து, நாட்டை அடிமையாக்க வேண்டும் என்பதுதான்.

அதனால் இங்கு நிலவிவந்த கல்விக் கட்டமைப்புகள் உடைக்கப்பட்டன. கல்வித் திட்டம், பாடங்கள், போதனை முறைகள் ஆகிய பலவும் மாற்றப்பட்டன. அதனால் இந்தியக் கல்வி முறை மிகக் குறுகிய காலத்தில் சிதைந்து போனது.

ஆங்கிலேயர்கள் இங்கு வந்த பின்னர், 1820-களில் நாட்டின் பல பகுதிகளில் அவர்களால் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகள் கல்வி முறை சிறப்பாகச் செயல்பட்டு வந்ததை தெளிவாகக் காட்டுகின்றன. அப்போது கல்வியறிவு பெற்றோர் சுமார் சுமார் 75 விழுக்காடு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

பின்னர் மெக்காலே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அறுபது வருடங்கள் கூட ஆகாத நிலையில், 1891-இல் கல்வி அறிவு பெற்றோர் வெறும் 6 விழுக்காடாகக் குறைந்து போனதாக அமெரிக்க வரலாற்றாசிரியர் வில் துரந்த் குறிப்பிடுகிறார்.

இதைத் தான் மகாத்மா காந்தி “ஓர் அழகான மரம் அழிந்து போனது’ என்று 1931-இல் லண்டனில் குறிப்பிட்டார்.

இப்போது நமது நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் முடிந்து விட்டன. கல்வி நிறுவனங்கள், கல்வி பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. ஆயினும் கல்வித் துறையில் காலனிய, மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கமே  நிறைந்துள்ளது.

அதனால்தான் நமது நாட்டைப் பற்றிய சரிதான புரிதல் நம்மிடம் இல்லை. நமது வரலாறு, சிந்தனைகள், மக்களின் வாழ்க்கை முறை, நடைமுறைகள் ஆகிய எவை பற்றியும் நமது பல்கலைக்கழகங்கள் சரியாகச் சொல்லிக் கொடுப்பதில்லை.

ஏனெனில் நாடு குறித்த தெளிவான கருத்துக்கள் நமது கல்விக்கூடங்களிலேயே இல்லை. அங்கே உள்ளவர்கள் மேலைநாட்டு ஆசிரியர்கள் எழுதுவதை அப்படியே வைத்து, அவர்களின் கருத்தோட்டம் மூலமே இந்தியாவை நோக்குகின்றனர்.

காலனி ஆட்சியின்போது ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட சார்பு மனநிலை இன்னமும் நமது உயர்கல்வித் துறையைப் பீடித்திருக்கிறது. அதனால்தான் மொழி, வரலாறு, பொருளாதாரம், அறிவியல், சமூகவியல் என எந்தத் துறையை எடுத்தாலும், நமது அடிப்படைகளைப் பிரதிபலிக்கின்ற கருத்தோட்டங்கள் இங்கு பெரும்பாலும் இல்லை.

இந்தப் போக்கு நமது நாடு குறித்த தவறான எண்ணங்களை மாணவர்களிடம் விதைத்து வருகிறது. அதனால் தேசம் குறித்த நேர்மறை எண்ணங்கள் குறைந்துள்ளன; நாட்டின் முன்னேற்றம் தடைபட்டுள்ளது.

உதாரணமாக பொருளாதாரத் துறையை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் இன்றைக்குப் பொருளாதாரமே மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானதாக முன்வைக்கப்படுகிறது. நமது பாடப்புத்தகங்களைப் படிக்கும்போது  பழைய காலந்தொட்டு இந்தியா  ஏழை நாடாக விளங்கி வந்ததாகவே ஓர் எண்ணம் உருவாகும்.

ஆனால், ஆங்கிலேயர்கள் நம்மை ஆளுமைப் படுத்தும் வரை, இந்தியா உலகின் மிகப் பெரிய செல்வந்த நாடாக விளங்கி வந்துள்ளது.

கடந்த இரண்டாயிரம் வருட காலமாக உலகப் பொருளாதாரம் செயல்பட்டு வந்த விதம் குறித்து, 1980-களில் இருந்து சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகள் வெளிவந்து கொண்டுள்ளன.

அவை ஐரோப்பியர்கள் காலனி ஆதிக்கக் காலத்தில் உருவாக்கிவைத்த உலக வரலாறு குறித்த தவறான பிம்பங்களை உடைத்து நொறுக்கியுள்ளன. யாராலும் மறுக்கப்படாத பொருளாதார வரலாற்றாசிரியர் ஆங்கஸ் மாடிசன் குழுவினரின் ஆய்வுகள், பொதுயுக (இர்ம்ம்ர்ய் உழ்ஹ) தொடக்கக் காலத்தில் இந்தியா உலகப் பொருளாதாரத்துக்கு மூன்றில் ஒரு பங்கை அளித்து  வல்லரசாக விளங்கி வந்ததை எடுத்துக் காட்டுகின்றன.

மேலும் இந்தியா கடந்த இரண்டாயிர வருட காலத்தில் 80 விழுக்காடு காலம் முதல் நிலையில் இருந்து வந்ததையும், இந்தியாவும் சீனாவும் உலகின் பெரும் பொருளாதார சக்திகளாக விளங்கி வந்தைதையும் கூறுகின்றன.

மேலும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகள் உலகப் பொருளாதார வரைபடத்தில் தலையைக் காட்டுவதே பதினாறாம் நூற்றாண்டுகளில் தான் என்பதும், காலனி நாடுகள் மூலமே ஐரோப்பாவின் பொருளாதாரம் மேலெழுந்தது என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளன.

இந்தியப் பொருளாதாரம் தனது இடத்தை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் இழந்தது. இவை இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும் உண்மைகள். ஆனால் இந்தியப் பல்கலைக்கழகங்களில் இந்த முக்கியமான விவரங்கள் எதுவும் தெளிவாகக் கற்பிக்கப்படுவதில்லை.

பழைய வரலாறு பற்றி மட்டுமல்ல, நிகழ்கால நடைமுறைகள் பற்றியும் நமது கல்வித் துறைக்குச்  சரியான பார்வையில்லை.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவே, உலகின் முக்கிய பொருளாதார சித்தாந்தங்களாக அறியப்படும் கம்யூனிசம், சந்தைப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் பெரும் தோல்வியைத் தழுவி வருகின்றன.

2008-ஆம் வருடத்திய உலகப் பொருளாதார நெருக்கடியில் பெருமளவில் பாதிக்கப்படாத நாடாக இந்தியா இருந்தது. எதிர்காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மற்ற எல்லா நாடுகளை விடவும் சிறப்பாக இருக்கும் என உலக வல்லுனர்களால் கணிக்கப்படுகிறது.

அதற்குக் காரணம் நமது நாட்டின் தனித்தன்மைகள். நமது குடும்ப அமைப்பு முறை, சேமிப்புகள், சமூக உறவு முறை, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாசாரம் ஆகிய பலவும்  நமது வளர்ச்சிக்குத் துணை புரிந்து வருகின்றன. எனவே நமது வளர்ச்சிக்கான காரணம் பற்றி அறிந்துகொள்ள மேலை நாட்டு பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் இந்தியா  வந்து கொண்டுள்ளன.

ஆனால் நமது நாட்டிலுள்ள எத்தனை பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் நடைமுறையில் உள்ள பொருளாதார, வியாபார, மேலாண்மை முறைகள் பற்றிப் படித்து வருகின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அந்த அளவுக்கு நம்முடைய உயர்கல்வித் துறையில் ஒரு தேக்கமும் தாழ்வு மனப்பான்மையும் நிலவுகின்றன.

இங்கிலாந்து இளவரசர் இந்தியா வந்தபோது மும்பையிலுள்ள “டப்பாவாலா’க்களைப் பாராட்டியபோதுதான் நமக்கு அவர்களின் அருமை புரிந்தது. நம்முடைய பெருமைகளைக்கூட பிற நாட்டவர் சொன்னால் தான் நாம் மதிக்கிறோம். மேலை நாட்டவரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் வழக்கம் எல்லாத் துறைகளிலும் நிலவுகிறது.

எந்த பொருளாதாரப் புத்தகத்தில் தமிழ்நாட்டின் பண்டைய வணிகம் பற்றிப் பேசப்படுகிறது? உலகின் தலைசிறந்த மருத்துவரான சுஷ்ருதரின் கருத்துக்கள் நமது மருத்துவக் கல்லூரிகளில் போதிக்கப்படுகின்றனவா?

எனவே உயர்கல்வித் துறையைப் பொருத்த வரை பெரிய சிந்தனை மாற்றம் அவசியமாகிறது. அரவிந்தர், தாகூர், மகாத்மா காந்தி, மகாகவி பாரதி உள்ளிட்ட நமது தேசத்தின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் வலியுறுத்தியவாறு தேசம் சார்ந்த கல்விமுறை உருவாக வேண்டும்.

மாறிவரும் சூழ்நிலையில் இந்தியா இன்று உலக அளவில் மிக முக்கியமான நாடாக உருவாகி வருகிறது. நமது நாடு உயர வேண்டுமெனில், அடுத்த தலைமுறையினருக்குத் தன்னம்பிக்கையும், தேசம் குறித்த சரியான பார்வையும் தேவை. அதற்கு உயர்கல்வித் துறை தனது கடமையை சரியாகச் செய்ய வேண்டும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *