shadow

உண்மையைச் சொல்லித்தான் வீடுகளை இனி விற்க முடியும்

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிக்கும் பிரதான துறைகளுள் ஒன்று ரியல் எஸ்டேட். இந்தியர்களின் வீட்டு வசதியை நிறைவேற்றுவதற்காகப் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் இந்தியா முழுவதும் செயல்பட்டுவருகின்றன. கட்டுமான நிறுவனங்கள் கட்டி முடித்த வீட்டுக் குடியிருப்புகளை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நேரடியாக விற்பனைசெய்வதும் உண்டு. அதே போல் ரியல் எஸ்டேட் துறையில் சிலர் தரகு வேலைகளில் ஈடுபட்டும் வருகிறார்கள். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் அமலுக்கு வந்தால் இத்தகைய தரகு நிறுவனங்கள் தங்கள் சேவையை முறைப்படுத்த வேண்டிய அவசியம் வந்துவிடும் என்று நினைத்துவந்தன. இந்நிலையில் மே 1 முதல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவரும் சிறு சிறு தரகு நிறுவனங்களை இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. அந்த நிறுவனங்கள் கவலை அடைந்துள்ள அதே நேரத்தில் இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டமானது வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்றுதான் ரியல் எஸ்டேட் துறையினர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதாவது கட்டுமான நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் எந்த அளவுக்கு நேர்மையாக நடந்துகொள்ள வேண்டுமோ அதே அளவுக்கு ரியல் எஸ்டேட் தரகு நிறுவனங்களும் நடந்துகொள்ள வேண்டும் என்பதும் அவசியமாகிறது. தாங்கள் விற்கும் வீடு குறித்தோ கட்டுமானம் குறித்தோ முறையான தகவல்களைப் பரிமாறிய பின்னரே அவற்றை விற்க வேண்டும் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. தாங்கள் விற்கும் கட்டிடங்கள் பற்றிய விழிப்புணர்வுடன் தரகு நிறுவனங்கள் செயல்பட வேண்டும்; இதில் ஏதாவது பிழை நேரிடும்போது, தரகு நிறுவனங்களுக்கு அபராதம் விதித்திடவும் இந்த சட்டம் வழிவகைசெய்கிறது.

இதனிடையே கடந்த வாரம் செய்தியாளர்களிடையே பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தாங்கள் மேற்கொள்ளும் கட்டுமானத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அனைத்து நிறுவனங்களும் வரும் ஜூலை 31-க்குள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடும் கட்டுமான நிறுவங்களைப் போல் அத்துறையில் ஈடுபட்டுவரும் முகவர்களும் இத்தகைய பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இத்தகைய நடவடிக்கையால், தந்திரங்களை மேற்கொண்டு கட்டிடங்களை விற்கும் வேலைகளில் ஈடுபடும் தரகு நிறுவனங்கள் துடைத்தழிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் கூறுகிறார்கள். வாடிக்கையாளர்களிடம் கட்டிடங்களைப் பற்றிய உண்மைத் தகவல்களைத் தெரிவித்து முறையான விற்பனையில் ஈடுபடும் தரகு நிறுவனங்கள் மாத்திரமே இத்தகைய நடவடிக்கையைத் தாங்கிக்கொண்டு நிற்க இயலும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

கட்டிடங்களின் மறு விற்பனை தொடர்பான பரிமாற்றங்களில் ஈடுபடுவோரில் 65 சதவீதத்தினர் தரகர்களே. புது வீடு அல்லது கட்டிடங்களில் விற்பனையை முதல் நிலை என்று கருதினால் மறு விற்பனை போன்ற இரண்டாம் நிலை வர்த்தகத்தில் ஈடுபடுவோர்களில் பெரும்பாலானோர் தரகர்களே என்பதுதான் இன்றைய ரியல் எஸ்டேட் துறையின் நிலைமை. அதே போல் இத்தகைய தரகர்கள் அல்லது தரகு நிறுவனங்கள் புதுக் கட்டிட விற்பனையிலும் 30 சதவீதம் அளவுக்குப் பங்களிக்கின்றன என்பதையும் மறந்துவிட முடியாது.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை எல்லா மாநிலங்களும் ஏப்ரல் 30-க்குள் அமைத்துவிட வேண்டும் என்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் மே 1 முதல் அமலாக்கப்படும் என்றும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. என்ற போதும், 13 மாநிலங்களில் மாத்திரமே ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் அறிமுகமாகியிருக்கிறது.

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுவரும் பெரும்பாலான தரகர்கள் இந்தச் சட்ட அமலாக்க நடவடிக்கையை வரவேற்கிறார்கள். என்றாலும் சிறு சிறு தரகர்களும் தரகு நிறுவனங்களும் இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டத்தால் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவின் 15 நகரங்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தரகு நிறுவனங்கள் கட்டிட விற்பனையில் ஈடுபட்டுவருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய தரகுச் சந்தையில் சுமார் 15 ஆயிரம் கோடியிலிருந்து 20 ஆயிரம் கோடி வரையான பணம் புழங்குகிறது. சில தரகு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டத்துக்கு உட்பட்டு எப்படி வர்த்தகத்தில் ஈடுபடுவது என்பது பற்றிய பயிற்சியை அளிக்கத் தொடங்கியுள்ளன. முறையான ஆவணங்களைப் பராமரிப்பது தொடர்பாகவும், வெளிப்படைத் தன்மையான பரிமாற்றம் தொடர்பாகவும் தேவைப்படும் நடவடிக்கைகளிலும் அவை ஈடுபட்டுவருகின்றன.

ஒரு கட்டிடத்தைப் பற்றிய உண்மைத் தகவல்களைக் கூறி அதை விற்று அதன் மூலம் குறிப்பிட்ட சதவீதத்தைத் தங்களின் சேவைக்காகப் பெற்றுக்கொள்ளும் தரகு நிறுவங்களுக்கோ தரகர்களுக்கோ பிரச்சினையில்லை. ஆனால், உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்து அதன் மூலம் வாடிக்கையாளர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் செயல்களில் ஈடுபடுவோரது நிலைமைதான் இனி கஷ்டமாகப் போகிறது. அப்படிப் பார்க்கும்போது இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டமானது வாடிக்கையாளர்களுக்கு அனுகூலமானதாகவே உள்ளது

Leave a Reply