shadow

உணவில் சேரும் நுண்ணுயிரிகளை தடுப்பது எப்படி?

உண்ணும் உணவுகள் சுவையானதா எனப்பார்க்கும் நாம் பாதுகாப்பானதா எனப் பார்ப்பதில்லை. உணவில் நம் கண்ணுக்குத் தெரியாதவை பல உண்டு. உதாரணமாக நுண்ணுயிர்கள். இந்த நுண்ணுயிர்கள் மிகவும் சிறியவை. நம் உணவில் இருக்கும் நுண்ணுயிர்களை மூன்றாக வகைபடுத்தலாம்.

* நல்ல நுண்ணுயிர்கள்: நல்ல நுண்ணுயிர்கள், உணவைத் தயாரிக்க பெரிதும் உதவுபவை. பால் தயிராகவும், மாவு நொதிக்கவும் காரணமாக இருப்பவை இந்த நுண்ணுயிர்கள்தான்.

* துர்நாற்றம் வீசுபவை: சில நுண்ணுயிர்கள் உணவுகளில் துர்நாற்றம் வீசச்செய்யும். சுவையைக் கெடுக்கும். உணவுக்கு அழுகிப்போன தோற்றத்தை கொடுக்கும். இந்த நுண்ணுயிர்கள் சில நேரங்களில் நோயை உண்டாக்குபவை.

* கெட்ட நுண்ணுயிர்கள்: மிகவும் விபரீதமானவை இந்த நுண்ணுயிர்கள்தான். இவை உணவின் தோற்றதிலோ, நாற்றதிலோ மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அதனால், இவற்றை எளிதில் கண்டறிய முடியாது. வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு இந்த நுண்ணுயிர்கள்தான் காரணம். இந்த வகை நுண்ணுயிர்கள் பல மடங்கு வேகத்தில் வளரும்.

நுண்ணுயிர்கள்

எப்படித் தடுக்கலாம்!

கெட்ட நுண்ணுயிர்களிடமிருந்து தப்பிக்க ஐந்து வழிகள் உண்டு. அவற்றைப் பார்க்கலாம்.

* சுத்தமாக இருங்கள்- உணவு உண்ணும் முன்னர் கைகளை நன்கு சுத்தமாக கழுவுங்கள். பழங்களை கழுவிய பின்னரே உண்ணுங்கள்.

* சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளைப் பிரித்து வையுங்கள். இது சமைக்காத உணவிலுள்ள நுண்ணுயிர்கள் சமைத்த உணவுக்குப் பரவாமல் தடுக்கும்.

* உணவுப்பொருட்களை அவற்றிலுள்ள நுண்ணுயிர்கள் இறக்கும் அளவிற்கு வேகவைக்க வேண்டும்.

* உணவுப்பொருட்களை பாதுகாப்பான வெப்பநிலையில் வைக்க வேண்டும். பாதுகாப்பான வெப்பநிலை என்பது அதிக சூடாக அல்லது குளிரான நிலையில் இருக்கலாம்.

* சுத்தமான தண்ணீரை சமைக்க பயன்படுத்தவும். அசைவம் வாங்கும்போது புதியனவற்றை வாங்குங்கள். வாங்கியவுடன் சமைத்துவிடுங்கள்.

Leave a Reply