உங்களைத்தான் கேட்கிறேன் மிஸ்டர் சி.எம், பதில் சொல்லுங்கள் கமல்ஹாசன்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து குறித்து திரையுலகினர், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினர்களும் தங்கள் ஆவேசமான கருத்தை தெரிவித்துவிட்டனர். இந்த விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே கடும் கண்டனம் தெரிவித்து வரும் நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அந்த பொண்ணு அலர்ன்ன சத்தம் கேட்டதில் இருந்து மனசு பதறுது. என்ன ஒரு 18, 19 வயசு இருக்குமா? அந்த பெண்ணின் அலறலில் இருந்த அதிர்ச்சி, பயம், நண்பன் என்று நம்பியவன் காப்பாற்ற மாட்டானா? என்ற ஏக்கம் ஆகிய கண்ணை மூடினாலும் கண்முன் வந்து நிற்கின்றது

டெல்லியில் நிர்பயாவுக்கு கொடூரம் நடந்தபொது தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது காவல்துறை உயரதிகாரிகள் தலைமையில் விசாரணை நடக்கும் என்றார். அந்த பெண்மணியின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் நீங்கள், இவ்வளவு கவனக்குறைவாவும் மெத்தனமாகவும் இருப்பது எப்படி?

குற்றம் சாட்டப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவசர அவசரமாக அறிக்கை விடும் இந்த அரசாங்கம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை வாங்கி தருவதை உறுதி செய்யாதது ஏன்?

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று கூறிய தலைவியின் போட்டோவை பாக்கெட்டில் வைத்திருக்கும் நீங்கள், பெண்கள் பாதுகாப்பிற்காக என்ன செஞ்சிருக்கிங்க? நீங்க செஞ்சது இது ஒண்ணுதான். தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்க முயற்சித்த மாணவிகளை பலவந்தமாக அப்புறப்படுத்தியிருக்கிங்க. மாணவிகளை போலீஸை வைத்து மிரட்டியிருக்கிங்க

பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களின் பெயா் வெளியிடப்படக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஆனால், அதனையும் மீறி காவல் அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொதுவெளியில் கூறுகிறார். இதற்கு தமிழக அரசும் மௌனமாக உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கேட்கவில்லை. இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக கேள்வி கேட்கிறேன். இந்த கேள்விகள் அனைத்தும் உங்களுக்குத்தான் மிஸ்டா் சிஎம். தன் மனைவிக்கு ஒன்று என்றாலே போருக்கு புறப்படுகிற கடவுள் கணவர்கள் வாழ்ந்த இந்த நாட்டில் உங்க அம்மா ஆட்சிக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க சாமி?

இவ்வாறு கமல்ஹாசன் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *