இறந்து போன மகனின் விந்தணுவில் இருந்து பேரக்குழந்தை: பிரிட்டனில் ஆச்சரியம்
பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தம்பதியரின் ஒரே மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்தான். இதனால் நிலைகுலைந்துபோன அந்த தம்பதி, தங்கள் மகன் மூலமாக ஒரு வாரிசை பெற்றெடுக்க விரும்பினர். கரு முட்டைகள் மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் நவீன முறை குறித்து அந்த தம்பதியர் அறிந்திருந்தனர்.
இதனால், மகன் உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாக, அவனது விந்தணுவை எடுத்து பதப்படுத்த முடிவு செய்தனர். அதன்படி சிறுநீரகவியல் நிபுணர் ஒருவர் மூலம், விந்தணு எடுக்கப்பட்டு, உறைநிலையில் பதப்படுத்தப்பட்டது. ஆனால் பிரிட்டனில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது சட்டவிரோதம் ஆகும். எனவே, அந்த விந்தணுவை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கருத்தரித்தல் மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்க விந்து செல்களுடன் தானமாக பெறப்பட்ட கருமுட்டைகளை சேர்த்து ஆய்வகத்தில் கரு வளர்க்கப்பட்டு வாடகைத் தாய் மூலம் கடந்த 2015ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். பின்னர் அந்த குழந்தையின் சட்டப்பூர்வ பெற்றோராக அறிவித்து, பிரிட்டன் திரும்பினர். தற்போது 3 வயதான அந்த குழந்தையை பிரிட்டனில் வளர்த்து வருவதாக நம்பப்படுகிறது.