இன்று வீடு, மனைகளைத் தரும் கஜலட்சுமி விரதம்

வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களை அருளும் கஜலட்சுமி எண்ணி, இன்று பெண்கள் விரதம் அனுஷ்டிப்பார்கள். இதனால், அவர்களின் செல்வமும் உயரும் என்பது பெரியோர்களின் வாக்கு.

அஷ்டலட்சுமிகளில் சிறப்பான வடிவமாகப் போற்றப்படுபவள், கஜலட்சுமி. பார்க்கடலைக் கடைந்தபோது வெளியான திருமகளை, அஷ்ட திக்கிலும் இருந்த தேவயானைகள் கூடிவந்து, தங்களது மனைவியரோடு மங்கள நீராட்டி, பிளிறலை எழுப்பி வழிபட்டன என்று புராணங்கள் சொல்கின்றன.

எனவேதான் ஆதிலட்சுமி, கஜலட்சுமி என்று போற்றப்படுகிறாள். அஷ்டலட்சுமிகளில், கஜலட்சுமி நடுநாயகமாக வீற்றிருப்பவள். இவள், நம் வீட்டின் நிலைப்படிமேல் அமர்ந்துள்ளதால், திருநிலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தாமரை மலரில் பத்மாசன நிலையில் திருமகள் வீற்றிருக்க, இருபுறமும் தேவ யானைகள் நின்று புனித நீரால் அபிஷேகம் செய்யும் நிலையில் கஜலட்சுமி இருப்பாள். சில படங்களில், யானைகள் லட்சுமிக்கு கவரி வீசுவது போலவும் காணப்படும்.

தயாலக்ஷ்மி, சாந்தலக்ஷ்மி என அழைக்கப்படும் இந்த கஜலட்சுமியே நிலங்களை அளிப்பவள். வீட்டின் அமைதிக்கும் இவளையே வணங்க வேண்டும். இரு கைகளில் தாமரை மலர்களை ஏந்தியும் மற்ற இரு கரங்களில் அபய, வர முத்திரை காட்டியும் அருளும் இந்த கஜலட்சுமி தேவியின் ‘கஜலட்சுமி விரதம்’ இன்றுதான் அனுஷ்டிக்கப்படுகிறது.

வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களை அருளும் இந்தத் தாயாரை எண்ணி, இந்த நாளில் பெண்கள் விரதம் இருப்பார்கள். கஜலட்சுமியை விரதம் இருந்து வழிபடும் ஒருவருக்கு கருணையும், கொடுக்கும் எண்ணமும் வளரும். இதனால், அவர்களின் செல்வமும் உயரும் என்பது பெரியோர்களின் வாக்கு. கஜலட்சுமி விரத நாளான இன்று, இந்த லட்சுமி தேவியை வணங்கி, அருளைப் பெறுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *