இன்சுலின் செடி – சர்க்கரை நோயாளிகளின் வரமா?

அது பணக்காரர்களுக்கு வரக்கூடிய நோயாச்சே…’ என்று சர்க்கரை நோயைச் சொல்வார்கள். அது அந்தக் காலம். இன்றைக்கு ஏழை, பணக்காரன், சிறியவர், பெரியவர் என எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் எல்லோரையும் வதைத்துக்கொண்டிருக்கும் ஒரு நோயாக உருவெடுத்து நிற்கிறது. உலகம் முழுவதும் சர்க்கரை நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஏறத்தாழ 70 சதவிகிதம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்தும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அலோபதி மருத்துவத்தில் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள மருந்து, மாத்திரைகள் தரப்படுகின்றன. அதேவேளையில் இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் உணவு மற்றும் பல்வேறு மருத்துவ முறைகளின்மூலம் நோயைக் கட்டுக்குள் வைத்து வருகின்றனர். முறையாக இந்த மருத்துவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நோயை வென்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட சூழலில், சர்க்கரை நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகளின் வரிசையில் இன்சுலின் செடி என்ற ஒன்று சமீபகாலமாகப் பிரபலமாகி வருகிறது. அது சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாகச் சொல்லி நர்சரிகளில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செடியைச் சிலர் வீடுகளிலும் வளர்த்து வருகிறார்கள்.

காஸ்டஸ் இக்னியஸ் (Costus igneus) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் அமெரிக்காவின் ‘ஃப்ளோரிடா’ மாகாணமாகும். இன்சுலின் செடியின் மகத்துவம் பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர். இந்தியாவில் கேரள மாநிலத்தின் கொச்சியிலும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதற்கான நர்சரிகள் உள்ளன. வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் மிக எளிதாக வளர்க்கலாம். இலையின் சுவை சிறிது புளிப்பாக இருக்கும்.

இன்சுலின் செடியைப் பற்றி அறிந்து கொள்வதற்குமுன் இன்சுலின் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். ‘ஆயுர்வேதத்தில் இன்சுலினா?’ என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். மனிதர்களின் கண், நரம்பு, தோல், எலும்பு, கிட்னி என ஒவ்வொரு உறுப்பாகப் பாதித்து அணு அணுவாகச் சித்ரவதை செய்யக்கூடியது சர்க்கரை நோய்.

ஆயுர்வேதத்தில் ஆவரண மதுமேகம், தாது க்ஷய மதுமேகம் என இரண்டு வகை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் வகை எளிதாகக் குணப்படுத்தக் கூடியது. இரண்டாம் வகையைக் குணப்படுத்துவது மிகவும் கஷ்டம். இந்த இரண்டாம் வகை நோயாளிகளுக்குத்தான் இன்சுலின் செலுத்தப்படுகிறது. மேலும் ஆயுர்வேதத்தில் அதற்கு இணையான தாதுக்கள் கொடுக்கப்படுகின்றன. அந்தவகையில் காஸ்டஸ் இக்னியஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இன்சுலின் செடி சர்க்கரை நோயாளிகளுக்குப் பெரும் வரப்பிரசாதமாகும்.

இன்சுலின் செடியின் இலையை நாம் அருந்தும் டீயில் (ஒரு டம்ளர் தண்ணீருக்கு மூன்று இலைகள் வீதம்) சேர்த்துப் பயன்படுத்தலாம். உலரவைத்துப் பொடித்து ஒரு டீஸ்பூன் அளவை அப்படியே சாப்பிடலாம். ஆனாலும், இதை ஆயுர்வேத மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ நிலையிலோ இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. அதற்கு ஊசி மட்டுமே ஒரே வழியாகும். ஆனால், சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு காஸ்டஸ் இக்னியஸ் அதிக பலன்களைத் தருகிறது.

மேலும், இந்தச் செடியின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாகக் குறைக்கிறது.
இதன் மூலம் இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் உள்ள சர்க்கரை நோயாளிகள் பயனடைவார்கள்.

இருந்தாலும், இன்சுலின் செடி பற்றிச் சில குழப்பங்கள் நிலவுகின்றன. அதாவது, காஸ்டஸ் பிக்டஸ் (Costus pictus), காஸ்டஸ் இக்னியஸ் (Costus igneus) என இரண்டுமே இன்சுலின் செடிதான் என்று சிலர் கூறுகிறார்கள். இரண்டுமே காஸ்டேசியெ (Costaceae) எனும் குடும்பத்தைச் சேர்ந்தது என்றபோதிலும் இவற்றின் குணங்களில் சற்று வித்தியாசம் தென்படுகிறது. ஆனாலும், காஸ்டஸ் இக்னியஸ் என்ற தாவரமே இன்சுலின் நோய் தீர்க்கும் செடி என்பதில் மாற்றுக் கருத்தில்லை

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *