இனி வீடுதான் உங்கள் அலுவலகம்… மாற்றுச் சிந்தனையை நோக்கி மனிதவளம்!

Construction building/ 3d render.

மனித வாழ்வில் வேலை என்பது முக்கியமானது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் என மனித வாழ்வின் அத்தியவாசிய தேவைகளை அதுதான் பூர்த்தி செய்கிறது. அரிசி முதல் ஆன்ட்ராய்டு மொபைல்கள் வரை அனைத்தும் நவீனமயமாகிவரும் இன்றைய சூழலில், வேலை செய்வதிலும் மனிதர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

தினமும் காலை வீட்டிலிருந்து அவசர அவசரமாக கிளம்பி, அலுவலகத்துக்கு சென்று வேலை பார்க்கும் வாழ்க்கை முறை, பலருக்கும் பிடிக்கவில்லை. வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை முடித்தால் நன்றாக இருக்குமே என்று பலரும் மாற்றுச் சிந்தனைக்கு வந்துவிட்டனர், குறிப்பாக பெண்கள். குழந்தை பிறப்புக்கு பல பெண்கள், பல்வேறு சிக்கல்களை கருதி தங்கள் வேலையை விட நேரிடுகிறது.

இந்த நிலையில் வீட்டிலிருந்து வேலை பார்க்கவே பலரும் விரும்புவதாக ‘ரான்ஸ்டான்ட் இந்தியா’ என்ற நிறுவனம் நடத்திய ஒரு சர்வேயில் தெரியவந்துள்ளது. மொத்தம் 7500 பேர் கலந்துகொண்ட இந்த சர்வேயில் ஆண்கள், பெண்கள் பேதமின்றி 45 வயதுக்கு மேல் இருப்பவர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதையே அதிகமாக விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள். அதாவது சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 53 சதவிகித ஆண்களும், 52 சதவிகித பெண்களும் வீட்டிலிருந்து டெலிகம்யுனிகேட் முறையில், 45 வயதுக்கு மேல் வேலைப் பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள். இந்த முறையில் குறிப்பிட்ட நேரத்தில் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்து வேலை பார்க்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட நிறுவனம் கண்காணிக்கும்.

பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை பல நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் டொயோட்டா நிறுவனம், தனது மொத்த பணியாளர்களில் 25, 000 பேரை வீட்டிலிருந்து வேலை பார்க்குமாறு கூறியுள்ளது. இதில் அதிகமாக பயன் அடைவது பெண்கள்தான்.

எனவே வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டளார் பாலமுருகனிடம் கேட்டோம். 11 விஷயங்களை நம்முன் வைத்தார். அவை இங்கே…

1. அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவதற்கும் வீட்டிலிருந்து பணி செய்வதற்கும் நடைமுறை சிக்கல்கள் உண்டு. குழந்தைகளை பார்த்துக் கொள்வது, வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவது போன்றவற்றினால் கவனக் குறைவு ஏற்பட வாய்ப்பு இருக்கும். எனவே உங்களது பணிநேரத்தை, அலுவலகத்துக்கு முன்கூட்டியே தெரிவிப்பது நல்லது. உதாரணத்திற்கு மாலை 3 முதல் 4 மணி வரை, குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வர வேண்டியிருக்கும் என்றால், அதை அலுவலகத்தில் தெரிவித்துவிடுவது நல்லது. இதனால் உங்களுக்கு அந்த நேரத்தில் அலுவலக அழைப்புகள் வருவதை தவிர்க்க முடியும்.

2. வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துக் கொடுப்பது அவசியம். அதில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை முன்கூட்டியே உரிய நபர்களிடம் தெரிவிப்பது நல்லது.

3. வீட்டிலிருந்துதானே வேலை செய்கிறோம் என அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. வேலை நேரத்தில் தனிப்பட்ட வேலைகள் செய்வதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அதாவது, தினமும் 6 மணி நேரம் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதாக அலுவலகத்தில் கூறி இருக்கிறீர்கள் எனில், அந்த நேரத்தில் எந்தவிதமான தனிப்பட்ட வேலையையும் செய்யக் கூடாது. தவிர்க்க முடியாத நேரங்களில் முன்கூட்டியே உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அந்த வேலைகளை செய்யலாம்.

4. உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையை தவறுகள் இல்லாமல் முடிப்பது அவசியம். தவறுகள் ஏற்பட்டால், ‘வீட்டிலிருந்து வேலை பார்த்தாலே இப்படிதான்’ என்ற பொதுவான கருத்து உருவாகிவிடும். இதனால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறையை நிறுவனங்கள் குறைத்துவிடும் வாய்ப்பு உருவாக கூடும்.

5. வேலை நேரத்தில் முகநுால், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இயங்குவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் இயங்கும் போது, உங்களுடைய கவனம் சிதறுவதற்கான வாய்ப்புள்ளது. இதனால் வேலையில் தவறு ஏற்படலாம். எனவே வேலை நேரத்தில் முழுக் கவனத்தையும் வேலையில் செலுத்துவது நல்லத

6. அலுவலக வேலைகளை துவக்கும்போது அதற்கான உபகரணங்கள் மற்ற பொருட்கள் அத்தனையும் அருகில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வேலை நேரத்தில் அதிகாரிகள் போன் செய்யும்போது குறிப்பு எடுத்துக் கொள்வதற்கு, வேலையில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அதை குறித்து வைத்துக் கொள்வது என வேலைக்கு உதவியாக இருக்கும் பொருட்கள் அனைத்தையும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்திலிருந்து போன் செய்யும்போதுதான் பேனாவை தேடினால் உங்கள் பணி குறித்து அதிகாரிகள் அதிருப்தியடைய நேரிடும்.

7. வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு தேவைப்படும் இன்டர்நெட் வசதி அதிக வேகத்தில் இருப்பது முக்கியம். ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் சாப்ட்வேரில் வேலை பார்க்க அனுமதிக்கிறது. அந்த சமயத்தில் இன்டர்நெட் வசதி சரியில்லை என்று வேலையில் தாமதம் ஏற்படுத்தினால் உங்களின் நற்பெயரை அது குறைத்து விடும்.

8. வேலையில் சந்தேகம் ஏற்படும்போதெல்லாம் போன் செய்வதை விட, மொத்தமாக ஒரு பேப்பரில் குறித்து வைத்து, ஒரேமுறை போன் செய்து சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். அடிக்கடி போன் செய்யும்போது அதிகாரிகள் எரிச்சல் அடையக்கூடும். எனவே இதை தவிர்ப்பது நல்லத

9. அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து பார்க்கும்போது, வேலைகள் செய்வதற்காக தனியாக ஒரு இடத்தை வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் அலுவலகத்தில் இருந்து எதாவது முக்கியமான ஃபைல்கள் கொண்டு வந்திருந்தால் அது பாதுகாப்பாக இருக்கும். தினமும் ஒரு இடத்தில் வேலைப்பார்க்கும்போது பைல்களை எங்கு வைத்தோம் என்பதில் தெரியாமல் போக வாய்ப்புள்ளது. அதோடு லேப்டாப், போன், டைரி ஆகியவற்றை குழந்தைகளிடம் இருந்து பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

10. அலுவலகத்தின் எப்படி ஒரு நாள் வேலையை முன்கூட்டியே திட்டமிட்டு செய்கிறோமோ அதைப்போல வீட்டிலிருந்து வேலைப்பார்க்கும்போது, ஒவ்வொரு நாளும் திட்டமிடுவது அவசியம். அப்போதுதான், எந்த வேலையை முன்கூட்டி முடிக்க வேண்டும், எந்த வேலையை தாமதமாக முடிக்கலாம் என்பது தெரியும்.

11. வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது அலுவலகத்தில் இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பது அவசியம். அதாவது வேலை முடித்து அனுப்பிய பிறகு அந்த வேலையின் தரம், அதில் ஏதாவது மாற்றம் தேவையா என சம்பந்தப்பட்டவரிடம் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும். இது உங்களின் வேலையை சிறப்பாக செய்ய உதவும். உங்களின் நன்மதிப்பு உயரும்.

வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை சோதனை அடிப்படையில்தான் பல நிறுவனங்களும் அமல்படுத்தி உள்ளன. எனவே அந்த வாய்ப்பு கிடைத்தவர்கள் அந்த வேலையை திறம்பட செய்வதன் மூலம்தான் இந்த வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு பணியாற்றவேண்டும்.

சில நிறுவனங்கள், பணியாளர்களை முழுவதுமாக வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் எனக் கூறியுள்ளது. சில நிறுவனங்கள், மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களுக்கு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் தங்களின் சொந்த வேலைக்காக விடுப்பு எடுக்க வேண்டியதிருக்கும். அந்த வேலை சில மணி நேரத்தில் முடிந்து விடும். அதன் பிறகு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வருவதில் நடைமுறை சிக்கல் இருக்கும். ஆனால் வீட்டிலிருந்து வேலையை செய்து கொள்ள அனுமதிக்கப்படும்போது ஊழியர்கள் தங்களின் சொந்த வேலைகள் முடிந்த பிறகு, அலுவலக வேலையை தொடர்ந்து செய்வார்கள். இதனால் அலுவலகத்தில் எந்தவிதமான வேலையும் பாதிக்காது.

வீட்டிலிருந்து ஊழியர்கள் வேலை பார்க்கும்போது, நிறுவனத்துக்கு கணிசமான செலவு குறையும். அதாவது மின்சார கட்டணம், போக்குவரத்து செலவு, இடம் வசதி பாதுகாப்பு செலவுகள் போன்றவற்றுக்காக செலவிடப்படும் தொகை கணிசமாக குறையும், லாபமும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *