இந்த பழக்கவழக்கங்கள் மூளைத்திறனை பாதிக்கும் என்பது தெரியுமா?

மூளை என்பது மனித உடலின் மிக முக்கிய ஒரு பாகம். இந்த மூளையை பாதிக்கும் வகையில் நமது செயல்பாடுகள் இருந்தால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டும். குறிப்பாக ஒருசில பழக்கவழக்கங்கள் மூளையின் திறனை பாதிக்கும். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்

காலை உணவை தவிர்க்க வேண்டாம்:

உங்கம்மா காலையில் வீட்டை விட்டு கிளம்பும் போது, உங்க பின்னாடியே சாப்பாட்டை தூக்கிகிட்டு அலைவாங்க. நீங்க அதனை உதாசீனப்படுத்துவீங்க. ஆனால் அதன் முக்கியத்துவத்தினை எப்பவாவது உணருவீங்க. காலை உணவு என்பது உடலுக்கு மிக முக்கியமான ஒன்று. பல மணி நேரம் உணவு இல்லாமல் இருந்த மூளையினை அதே பட்டினியோடு அன்றைய வேலையை உங்களால் பார்க்க இயலாது.

செயல்பாட்டுத் திறன் குறையும். இவ்வாறு தொடர்ந்தால் நிரந்தர பாதிப்புகள் ஏற்படும். ஜப்பானிய ஆய்வு கூறுவது தொடர்ந்து காலை உணவினை தவிர்ப்பவர்களுக்கு 36 சதவீதம் கூடுதலாக பக்கவாதம் ஏற்படுகின்றது என்பதுதான். மூளைக்கு ‘க்ளூகோஸ்’ பற்றாத பொழுது எதனையும் புரிந்து கொள்ளும் தன்மை வெகுவாகக் குறைகின்றது. முறையான காலை உணவு உட்கொள்பவர்களுக்கு அடிக்கடி நொறுக்குத் தீனி சாப்பிடும் எண்ணம் தோன்றாது.

செல்போன் அதிகம் பயன்படுத்த வேண்டாம்: செல்போனில் உள்ள கதிர்வீச்சு போனை தூங்கும் பொழுது அருகிலேயே வைத்துத் தூங்குபவர்களை பாதிக்கின்றதாம். தலைவலி, குழப்பம் போன்றவை ஏற்படுகின்றது. இதனைப் பற்றிய மேலும் அபாயகரமான பாதிப்புகளையும் சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே முதலில் 10 மணிக்கு மேல் தேவை இல்லாமல் செல்போன் உபயோகத்தை தவிர்ப்பதை அனைவரும் குறிப்பாக மாணவ சமுதாயம் பழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.

நோய் வாய்பட்டிருக்கும் பொழுதும் வேலை செய்தல்: பலருக்கு தான் செய்யும் வேலையால் தான் அந்த ஆபீசே நடக்கின்றது என்ற எண்ணம் இருக்கும். தான் ஒரு அரைநாள் லீவு எடுத்தால் கூட கடும் பிரச்சினை என்பர். இவர்களுக்கு ஜுரமோ, மற்ற எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் விடாமல் அலுவலகம் செல்வர். இல்லையெனில் போனிலோ, கம்ப்யூட்டரிலோ வேலை செய்தபடி இருப்பர். தேவையான ஓய்வு என்பது அவசியம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முழு வீச்சில் வேலை செய்யும் நேரத்தில் அதிகம் உடலை வருத்திக் கொள்வது மூளையின் செயல்பாட்டுத் திறனை வெகுவாய் பாதித்து விடும்.

அதிகம் உண்பது: இன்றைக்கு பலருக்கும் இருக்கும் பிரச்சினை ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதுதான். இது ஒரு வகை மன பாதிப்புதான். அதிக கவலை, டென்ஷன், அதிக மகிழ்ச்சி இவற்றில் மனம் மூழ்கும் பொழுது அதிகம் உண்ணத் தொடங்கி விடுவர். இதனால் எடை கூடி பல நோய் பாதிப்புகள் வந்து சேர்ந்து விடும் என்பது மிகப் பெரிய உண்மை. ஆனால் இத்தகையோர் தேவையான சத்தான உணவுகளை உண்பதில்லை. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளையே உண்கின்றனர். இதனால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்காமல் உடல் பசியுடனேயே இருக்கும். இதனால் மூளை அதிக சோர்வுற்று செயல்திறன் அதிகம் குறைந்து விடும்.

வாய் திறந்து பேசுதல்: சிலர் அதிகம் பேசவே மாட்டார்கள். மிகக் குறைவாகவே பேசுவார்கள். சைகை செய்வார்கள். எழுதுவதைவிட பேசும் பொழுது மூளையின் பல பகுதிகள் உபயோகப்படுத்தப்படுகின்றது. சாதாரண மனிதனுக்கு மற்றவர்களுடன் ஓரளவு பேசுவது அவசியமாகின்றது. பலர் பேசாமல் இருப்பதாலேயே முகம் ‘உர்’ என்றும், ‘கடு கடுப்பாக’ இருப்பது போலவும் இருக்கும். இவ்வாறு இருப்பவர்களுக்கு டென்ஷன், மனஅழுத்தம் கூடுதலாக ஏற்படுகின்றதாம்.

முறையான தூக்கம்: இன்றைய சமுதாயத்தில் இரவு முழுவதும் அதிக நேரம் கண விழிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அதுவும் இரவு டி.வி. பார்க்க, செல்போனில் பேச என தூக்கத்தினை குறைத்து உடலைக் கெடுத்துக் கொண்டு வாழ்கின்றனர். பலர் மனஉளைச்சலால் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பலர் தூக்கமின்மை என்ற பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். யாராக இருந்தாலும் 8 மணி நேர தூக்கம் ஒருவருக்கு அவசியம். அதுவும் ஒரே போல் தூங்கி நேரப்படி எழுவதும் அவசியம். இல்லையெனில் குழப்பம், கோபம், அதிக மறதி, சோர்வு என ஒருவரை தூக்கமின்மை நிரந்தர நோயாளி ஆக்கி விடும்.

புகை பிடித்தல்: இதனின் தீமை ஏராளம். ஆய்வின்படி மூளையின் நரம்புகள், செல்கள், செயல்திறன் என அனைத்தையும் பாதிக்கும் நச்சுத் தன்மை கொண்டது. இதனைப் படிப்பவர்கள் உடனடியாக புகை பிடிப்பதனை நிறுத்தி விடுங்கள்.

சர்க்கரை: அதிக சர்க்கரை உடலுக்குத் தீங்கு. குறிப்பாக நரம்பு மண்டலத்திற்கு அதிக தீங்கு. ஆய்வுகளின்படி அதிக சர்க்கரை எடுத்துக் கொள்பவர்களுக்கு ‘மறதி நோய் ஏற்படுகின்றது.

உங்களுக்காக மட்டும் நீங்கள் செய்து கொள்ள வேண்டியவை: நம்மை நாமே நேசிக்க கற்றுக் கொண்டால் பல உடல், மன நோய்கள் தாக்குதல்களிலிருந்து நாம் விடுபடலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. நம் உடலையும், மனதையும் நாம் அலட்சியப்படுத்துவதன் காரணமே முறையாக உண்பதில்லை, முறையான பயிற்சிகளை நாம் மேற் கொள்வதில்லை என்று கூறுகின்றனர். இன்றைய சூழ்நிலையில் ஏதோ ஒரு காரணத்தினால் தனித்து இருப்பவர்கள் அநேகர் உள்ளனர். அவர்கள் தனிமை அவர்களுக்கு ஒரு பயத்தினை கொடுத்து விடுகின்றது. தனிமையும் ஒரு வாழ்க்கை அழகுதான் என்ற எண்ணம் இவர்களுக்கு ஏற்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *