இணையம் வழியே வரும் நவீன ஒற்றன்!

எந்தவொரு இலவசமும் ஏதோ ஒரு மறைமுக விலையைக் கொண்டிருக்கிறது. முகநூலில் பயனாளிகள் இட்ட தகவல்கள் எப்படி அமெரிக்கத் தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கேள்விப்பட்டு உறைந்துகிடக்கிறது உலகம்!

முகநூல் மட்டுமல்ல… இணையம் வழியே வரும் பல விஷயங்களும் கூடவே ஒரு நவீன ஒற்றனை நம்மைச் சுற்றி கட்டமைக்கின்றன என்பதை எத்தனை பேர் புரிந்துவைத்திருக்கிறோம்? இந்த உச்சகட்ட பொருளாதார யுகத்தில் ‘பிக் டேட்டா’ எனப்படும் தனிநபர் பற்றிய பிரம்மாண்டமான தகவல் திரட்டு, மிகப் பெரிய மூலதனம் ஆகிவிட்டது.

நமது பிறந்த நாள் தொடங்கி உடல் உபாதைகள் வரை நமக்கே தெரியாமல் நம்மிடமிருந்து கறந்துகொண்டு, பிறகு நம்மிடமே வந்து பொருட்களையும் சேவைகளையும் சத்தமில்லாமல் விற்றுக் கோடிகளைக் குவித்துக்கொண்டிருக்கின்றன வர்த்தக நிறுவனங்கள். தகவல் தொழில்நுட்பத் தனியார் ஜாம்பவான்கள்தான் இந்த வியாபாரத்துக்கு உறுதுணை.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சதி மூளை, அரசாங்கத்தின் கண்காணிப்பு இவற்றையெல்லாம் கேள்விக்குள்ளாக்கும் இந்தத் தருணத்தில், நம்மைப் பார்த்து நாமே சில கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆதார் விவகாரத்தில் அரசாங்கத்திடமே, ‘எங்கள் ரகசியங்களுக்கு பாதுகாப்பில்லை’ என்று குரல் கொடுக்கும் நாம், உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு சத்தமில்லாமல் வலைவீசும் இணையப் பொழுதுபோக்குத் தூண்டில்களில் எந்தப் பிரக்ஞையுமின்றி வீழ்ந்துகொண்டிருப்பதை எப்போது நிறுத்தப்போகிறோம்?

தம்முடைய அறிவையும் திறனையும் உண்மையான உறவுகளையும் வளர்த்துக்கொள்வதற்குச் சரியான முறையில் இணையத்தைப் பயன்படுத்துவது வேறு; பொழுதுபோக்கின் பெயரால் இணைய போதையில் அடிபட்டு வீழ்ந்து தொலைந்து நிற்பது வேறு! மூலதனம் எப்போதும் வாய் பிளந்து நிற்கும். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நாம் என்றால், நாம், சமூகம், இந்த அரசும்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *