ஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம்

ஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம் என்பது நிருபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. ஆனால் எது ஆரோக்கியமான தூக்கம்? என்ற கேள்வி எழுவதுண்டு. அதற்கு விடை தந்துள்ளனர் அமெரிக்காவின் நேஷனல் சிலிப் பவுண்டேசன் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள், படுத்தவுடன் 30 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் தூங்குவது இடையில் இரவில் ஒரே ஒரு முறை மட்டும் எழுந்து பின் 20 நிமிடங்களுக்குள் மீண்டும் ஆழ்ந்து தூங்குவது என்பதுதான் ஆரோக்கியமான தூக்கத்தின் அளவுகோல் என்கிறார்கள்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் படுத்தவுடன் 60 நிமிடங்களுக்கு முன்னர் தூங்கிவிட வேண்டும். வயதானவர்கள் என்றால் இரவில் இரண்டு முறை எழலாம். ஆனால் அந்த இருமுறையும் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் தூங்கிவிட வேண்டும். இரவில் படுக்கையில் இருக்கும் நேரத்தில் 85 சதவீத நேரம் அவசியம் தூங்கியாக வேண்டும். மாறாக புரண்டு புரண்டு படுத்து 40 சதவீத நேரமே தூங்குவது ஆரோக்கியத்துக்கு கேடு தரும் என எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு ஆரோக்கியமான மனிதனாக சுறுசுறுப்பாக அன்றாட பணிகளில் நாம் ஈடுபட தூக்கம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஏன் என்கிறீர்களா?

பின்னாளில் வரும் ஒவ்வொரு பெரிய நோய்க்கும் தொடக்க நாட்களில் நீங்கள் சரிவர தூங்காததுதான் காரணமாக அமைகிறது என்கிறார், அமெரிக்காவின் பெர்க்கினி பல்கலைக்கழக மருத்துவ அறிஞர் மாத்யூ வால்க்கர். இளமையில் நன்றாக தூங்கி எழுந்தவர்கள் முதுமையில் ஆரோக்கியமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு மனிதனுக்கு 7 மணிநேர தூக்கம் அவசியம். அதற்கு குறைவாக தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். அதிக தூக்கமும், குறைந்த தூக்கமும் 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம்மை முதுமை அடைய வைக்கிறதாம். ஆக, தினமும் நீங்கள் இரவில் படுக்கச்செல்லும் நேரத்தை வரையறுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *