shadow

ஆண்டுக்கட்டணம் 15 லட்சம் ரூபாய்! இந்தியாவில் அதிகக் கட்டணம் வாங்கும் 6 பள்ளிகள்

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு கருத்தை முன்வைத்திருந்தார், அதாவது, ‘தமிழகத்தில் கற்பிக்கும் தரம் மிகவும் குறைந்துவிட்டது; 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூட தங்கள் பெயரை எழுதத் தெரியவில்லை. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாகிவிட்டன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம். கல்வி வியாபாரம் ஆனதுதான் இதற்குக் காரணம்’ என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அனைவருக்கும் கல்வி தரமானதாகவும், கட்டணங்கள் இல்லாமலும், கட்டாயமாகவும் தரப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொன்னாலும், இன்று எதார்த்த நிலைமை வேறு, தனியார் பள்ளிகளில் ஆரம்பப் பள்ளி செலவுகளே பெற்றோர்களை அலறவைக்கின்றன. உங்கள் குழந்தைகளை நீங்கள் ஏன் அரசுப்பள்ளிகளில் சேர்க்கவில்லை என்று கேட்கும் அதே நேரம், அவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என்று யோசிக்கவும் வேண்டும். ஐந்து பாடங்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையிலும் சில அரசுப் பள்ளிகள் இருக்கின்றன! ஒரே வகுப்பில் 50 முதல் 60 வரை மாணவர்கள் இருக்கும் நிலைமையும் உள்ளது. இருப்பினும், அரசு பள்ளிகளையும் மாணவர்களையும் தரம் உயர்த்தும் போராட்டங்கள் நடந்து வருகிறன. இப்படி ஒரு புறம் இருக்க, மற்றொரு புறத்தில் இந்தியாவின் காஸ்ட்லியான பள்ளிகளின் நிலைமை வேற லெவல்! இந்த பள்ளிகளில் அப்படி என்ன இருக்கிறது என்று தோன்றுகிறதா? இதோ !

டூன் பள்ளி (Doon School)

டூன் பள்ளி

ஆண் பிள்ளைகள் மட்டுமே கல்வி பயிலும் இந்த பள்ளி, 1929ஆம் ஆண்டு இமயமலையின் அடிவாரத்தில் டூன் பள்ளத்தாக்குப் பகுதியில் நிறுவப்பட்டது. தில்லியில் இருந்து சுமார் ஐந்து மணி நேர பயண தூரத்தில் டூன் பள்ளி அமைந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பலர் இந்த பள்ளியில் கல்வி பயின்றவர்கள்! குறிப்பாக, ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் இந்தியாவின் சைக்கிள், ஸ்கூட்டர் நிறுவனமான ஹீரோ குழுமத்தின் சுனில் முஞ்சால் மற்றும் பவன் முஞ்சால், பாலிவுட் டாப் ஹீரோ அமிதாப் போன்றவர்கள் இங்கு கல்வி பயின்றவர்கள். டூன் பள்ளி கட்டணம் தற்போது வருடத்திற்கு ரூ. 9,70,000, மற்றும் இடை செலவுகள் சுமார் 25,000 என்கின்றனர். ஒரே தவணையில் சேர்க்கை கட்டணமாக 3,50,000 ரூபாய் வசூலிக்கப்படும்.

வெல்ஹாம் சிறுவர் பள்ளி ( Welham Boys’ School )

welham

டூன் பள்ளி அமைந்துள்ள, அதே இமயமலை அடிவாரப் பகுதியில் மலைகளுக்கும், ஆறுகளுக்கும் மத்தியில் அமைந்துள்ள பள்ளி வெல்ஹாம் பள்ளி ( Welham Boys’ School ). சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பள்ளியில், ஆண்டுக்கு ரூ 5,70,000 கட்டணம் செலுத்த வேண்டும். மணி சங்கர் அய்யர், நவீன் பட்நாயக், சஞ்சய் காந்தி, விக்ரம் சேத், கேப்டன் அமரீந்தர் சிங் போன்ற பிரபலங்கள் வெல்ஹாம் பாய்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.

சிந்தியா பள்ளி (Scindia School)

scindia

1897இல் இந்தியாவில் நிறுவப்பட்ட உறைவிடப் பள்ளி தான் சிந்தியா. ஆண்கள் மட்டுமே கல்வி பயிலும் இந்த பள்ளியானது, மத்தியப் பிரதேசத்தின் வரலாற்று சிறப்பு மிக்க குவாலியர் நகரத்தில் உள்ள குவாலியர் கோட்டையில் அமைந்துள்ளது. முதலாம் ஹெச்.ஹெச் மகாராஜா மாதவராவ் என்பவர் இப்பள்ளியை நிறுவினார். முதலில் சர்தார்கள் பள்ளியாக இருந்தது, அதாவது இளவரசர்கள், படைத்தலைவர்களின் பிள்ளைகள், பெருநிலக் கிழார்களின் பிள்ளைகள், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் பிள்ளைகள், மேலும் மராட்டியர்களுக்கு மட்டும் பாரபட்சம் இல்லை, இவர்கள் மட்டுமே இங்கு கல்வி பயின்றனர். கோட்டையின் மதிற்சுவர்கள், டான்டியா தோப் படைகள் பிரிட்டிஷ் உடன் போர் புரிந்ததையும், ஜான்ஸி ராணியின் இறுதி போர் வீரத்தையும் பார்த்திருக்கிறது. இந்திய நாட்டின் கப்பற்படை, விமானப்படையின் அதிகாரிகள் பலரும், இந்தியாவின் டாப் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியும், பல தேசிய விருதுகளை வென்ற இந்தியத் திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகர் சல்மான் கான், போன்ற பல பிரபலங்களும் இங்கு படித்தவர்கள். இங்கு உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்றால் வருடத்திற்கு கட்டணம் சுமார் 8,00,000 வரை தான் ஆகும் !

மயோ கல்லூரி (Mayo College)

mayo

பெயர்தான் Mayo College. இங்கு 12ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது. மயோ கல்லூரியானது மேற்கு இந்தியாவில் ஆரவல்லி மலைத்தொடரின் அடிவாரத்தில் ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் உள்ள உறைவிட பள்ளியாகும். 1869 முதல் 1872 வரை பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிச்சர்ட் போர்க் மயோ 6வது ஏர்ல் என்பவரால், 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது இந்த மயோ பள்ளி. இது இந்தியாவின் பழமையான பள்ளி. கோல்ஃப் (Golf) விளையாட்டு என்று சொல்லப்படுகிற குழிப்பந்தாட்டத்திற்கு தனி வகுப்புகள் எடுக்கப்படுகிறது. போலோ மற்றும் குதிரையேற்றம் கற்பிக்க, 50 குதிரைகள் பராமரிக்கப்படுகிறது. இதோடு 10 மீட்டர் ஏர் ரைபிள் விளையாட்டுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பத்திரிகையாளர் வீர் சங்வி, அமிதாப் காந்த், முன்னாள் நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போன்றவர்கள் இங்கு படித்தவர்கள். இங்கு கல்வி பயில வருடத்திற்கு கட்டணம் ரூபாய் 5,14,000 வரை ஆகும் !

எகோல் மாண்டேலே சர்வதேச பள்ளி ( Ecole Mondiale World School )

ecole

எகோல் மாண்டேலே மும்பையில் உள்ள ஒரு சர்வதேச பள்ளி, இங்கு International Baccalaureate ( IB ) எனும் சர்வதேச பாட திட்டத்தின் அடிப்படையில், சர்வதேச இளங்கலை படிப்பை படிக்கலாம். கூடுதலாக இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து போன்ற நாடுகள் வழங்கும் IGCSE பாட திட்டத்தில் உயர்கல்வி மற்றும் டிப்ளமோ கல்வியைப் பெறலாம். இங்கு பனிரெண்டாம் வகுப்பிற்கான கட்டணம் ரூபாய் 10,90,000!

உட்ஸ்டாக் பள்ளி, முசோரி (Woodstock School, Mussoorie)

Woodstock

கோ-எட் கல்வி முறையில் இயங்கும் உட்ஸ்டாக் பள்ளியானது, உத்தரகண்டில் உள்ள முசோரி நகரின், லாந்தோர் பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளி ஓர் மலைவாசஸ்தலம், பள்ளி வளாகத்தில் இருந்து பார்த்தால் டூன் பள்ளத்தாக்கு, தேரி ஹில்ஸ் மற்றும் பண்டைய சிவாலிக் மலைப்பகுதி போன்ற அனைத்தும் வரிசையாக கண்கவர் காட்சியளிக்கும். 12 ஆம் வகுப்பிற்கு ஆண்டுக் கட்டணமாக ரூ 15,90,000 செலுத்த வேண்டும். இதில் திரும்பப்பெற முடியாத தொகை ரூ 4,00,000-மும் பொருந்தும். குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் பாலிவுட் நடிகரான டாம் ஆல்டர் மற்றும் பிரபல பெண் எழுத்தாளர் நயன்தாரா சேகல் ஆகியோர்.

இன்று கல்வி மற்றும் கல்வி நிறுவனக்களின் போக்கை நாம் கணிப்பது அவ்வளவு சுலபமல்ல! கல்வி சேவையானது, செல்லும் இடம் தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தனியார் கல்வி கட்டணம் முறைப்படுத்த வேண்டும் என்று இங்குள்ள பலர், ஒவ்வொரு கல்வியாண்டின் துவக்கத்திலும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு நிலையான தீர்வு என்னவென்று இப்போதுவரை தெரியவில்லை! கல்விச் சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லப்படுகிறது! அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும் என்று நாம் நம்புவோமாக!

Leave a Reply