‘ஆடை’ திரைவிமர்சனம்

அமலாபால் நடித்த ஆடை திரைப்படம் நேற்று இரவு வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை இப்போது பார்ப்போம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வரும் அமலாபால் தனது குழுவினருடன் சேர்ந்து பிராங்க் ஷோ நடத்திவருகிறார். இந்த பிராங்க் ஷோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அமலாபால் பணி செய்யும் தொலைக்காட்சி அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது. இதனை அடுத்து தாங்கள் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒரு நாள் இரவு கடைசியாக தங்கியிருக்க அமலாபால் குழுவினர் முடிவு செய்கிறார்கள். அன்றைய நாளில் அனைவரும் மது அருந்தியபோது ஒரு சில அசம்பாவிதங்கள் , சர்ச்சைகள் நடக்கின்றன. இந்த நிலையில் காலையில் மது போதை தெளிந்து கண் விழித்து பார்க்கும் அமலாபால் தன்னுடைய உடலில் ஒரு ஒட்டுத்துணி கூட இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். அமலாபாலின் ஆடையை உறுவியது யார்? அவருடன் இருந்த மற்றவர்கள் என்ன ஆனார்கள்? உடை இல்லாமல் அந்தக் கட்டிடத்தில் இருந்து அமலாபால் வெளியே வர என்ன செய்தார்? என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை

அமலாபால் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு போல்டான பெண்ணாக சூப்பராக நடித்துள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதி முழுவதுமே அவர் ஆடை இல்லாமல் நடித்திருந்தாலும் ஒரு காட்சியில் கூட விரசமும் ஆபாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு போல்டான கேரக்டரை ஏற்று நடித்த அமலா பாலுக்கு ஒரு சபாஷ் கொடுக்கலாம்

மேலும் அமலாபாலை தவிர வேறு முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இல்லையென்றாலும் ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோரின் நடிப்பு ஓரளவுக்கு படத்தில் கதையோட்டத்திற்கு உதவுகிறது.

இசை அமைப்பாளர் பிரதீப்குமார் இசையில் இரண்டு பாடல்களும் நன்றாக உள்ளன. பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு மிகச் சரியாக உள்ளது

இயக்குனர் ரத்னகுமார் இன்றைய இளைய சமுதாயத்திற்கு தேவையான, ஒரு மிக அவசியமான கருத்தை இந்தப்படத்தில் வலியுறுத்தியுள்ளார். பெண் சுதந்திரம், மீடியா ஊழியர்களுக்கு இடையே இருக்கும் ஈகோ, சுதந்திரம் என்ற பெயரில் கண்டதை செய்யும் பெண்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தேவையில்லாத டிரண்டுகள், முட்டாள்தனமான கருத்துக்களுக்கு சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக்கொள்வது, இன்றைய தேர்வு முறை, தேர்வு எழுதப்போகும் மாணவர்களை இம்சைப்படுத்தும் தேர்வாளர்கள், என ஒட்டுமொத்தமாக சமூக தனது சமூகப் பார்வையை இந்த படத்தில் முன்வைத்துள்ளார்

குறிப்பாக யூடியூபில் பிரபலமாக பிராங்க் ஷோ நடத்துபவர்களுக்கு ஒரு சரியான சாட்டை அடி கொடுத்துள்ளார். அவர்கள் நடத்தும் பிராங்க் ஷோவால் பாதிக்கப்படும் நபரின் வாழ்க்கையே தலைகீழாக மாறி விடுகிறது என்பதையும் மிக அழுத்தமாக இந்த படத்தில் கூறியுள்ளார். இந்த படத்தில் ஒரு வசனம் வரும். உங்களுக்கு தெரிந்த ஒரு நபரிடம் அவருக்கே தெரியாமல் செய்வது தான் பிராங்க். உங்களுக்கு தெரியாத நபரை நீங்கள் பிராங்க் செய்தால் அதன் பெயர் நியூசென்ஸ் என்று க்ளைமாக்ஸில் ஒரு புதிய கேரக்டரை அறிமுகப்படுத்தி அந்த கேரக்டர் மூலம் தான் சொல்ல வந்த கருத்துக்களை மிக அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்

மொத்தத்தில் ஏ சர்டிபிகேட் திரைப்படம் என்று நினைத்துக்கொண்டு இது ஒரு அடல்ட் படம் என்று நினைத்து கொண்டு வருபவர்கள் கண்டிப்பாக ஏமாந்து விடுவார்கள். இன்றைய இளைய தலைமுறைகள் பார்க்க வேண்டிய ஒரு அவசியமான படம் தான் ஆடை

3.5/5

Leave a Reply