அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை
music
கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட அரசு இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உத்திரகுமரன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசின் கலைப் பண்பாட்டு துறையின் கீழ் கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பாரம்பரியக் கலைகளான குரலிசை (வாய்பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும் முழுநேரப் பள்ளியாகும். 13 முதல் 25 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் சேரலாம். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள். பயிற்சி முடிவில் தமிழ்நாடு தேர்வுத் துறையால் தேர்வு நடத்தி, அரசுத் தேர்வுகள் இயக்குநரால் இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை. சிறப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.120 மட்டும் செலுத்த வேண்டும். மாணவ, மாணவியருக்கு நகரப் பேருந்தில் இலவசப் பேருந்து பயணச் சலுகை உண்டு.

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தமிழகத்தின் பாரம்பரியமிக்க கலைகளைப் பயிலுவதற்கு உரிய வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ள மாணவ, மாணவியர் இந்தப் பள்ளியில் சேர்ந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. தற்போது 2016-17-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

எனவே. பள்ளியில் சேர விரும்புவோர் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப் பள்ளி, பெங்களூரு சாலை (சென்ட்ரல் தியேட்டர் அருகில்), கிருஷ்ணகிரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *