shadow

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் பரிசீலனை

அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து சமூக நலத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பள்ளி மற்றும் உயர்கல்வித்துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்தை மேட்டூர் எம்எல்ஏவும் கல்வித்துறை முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை தொடங்கி வைத்தார்.

எஸ்.செம்மலை( மேட்டூர்): குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வி சட்டம் (ஆர்டிஇ) தமிழகத்தி்ல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைந்த வருகிறது. அரசு பள்ளிகள் இல்லாத இடத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளை குழந்தைகள் அணுக முடியாத இடத்தில் இதை அனுமதிக்கலாம்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்: மத்திய அரசு இந்த ஆர்டிஇ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. கிராமப்புற நலிந்த பிரிவினருக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடம் அளிக்கும் விதமாக இத்திட்டம் உள்ளது. அதே நேரம், கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ் வழங்கும் தொகையை நமக்கு வழங்கவில்லை. எதிர்காலத்தில் இத்திட்டத்தின் கீழ் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், மக்கள் மனநிலையும் தங்கள் குழந்தை ஆங்கிலம் கற்க வேண்டும் என்று உள்ளதால், அவர்கள் தனியார் பள்ளிகளை நாடுகின்றனர்.

செம்மலை: அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜியை கொண்டு வந்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி கொண்டுவருவது குறித்து, சமூக நலத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். நானும் சமூக நலத்துறை அமைச்சரும் அங்கன்வாடி மையங்களில் சென்று ஆய்வு நடத்தியுள்ளோம். அரசு பள்ளிகளில் முதல் வகுப்புக்கு 5 வயதில் சேர்க்கப்படுகிறது. எனவே, அங்கன்வாடி மையங்களில் 3 வயதுவரை விடுத்து, 4,5 வயதுடையவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். முதல்வர், துணை முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

செம்மலை: உடனடியாக இதற்கான நடவடிக்கையை அமைச்சர் எடுக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாற்ற வேண்டும்.ஆங்கிலம், தமிழ் பயிறுவிக்க ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். நான் பயணித்த வாகனத்தின் ஓட்டுனர், தன் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளதால் 16 மணிநேரம் உழைக்க வேண்டியிருப்பதாகவும், இதனால் வாகனம் ஓட்டுவதில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, விரைவாக தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

செம்மலை: பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி தேர்வுக்காக ஒதுக்கப்படும் 50 நாட்களை 25 ஆக குறைக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வந்தால், அதை பணி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு நல்லாசிரியர் விருதிலும் முன்னுரிமை அளிக்கலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave a Reply