shadow

அன்னை மீனாட்சிக்குப் பிரியமானவள்… – தெப்பக்குளம் மாரியம்மன்!

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் – இந்தத் திருப்பெயரைக் கேட்டதுமே மதுரைவாழ் பக்தர்களிடம் அப்படியொரு சிலிர்ப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்த அளவுக்கு அன்பர்களின் மனதில் குடிகொண்டிருக்கிறாள் இந்த மாரியன்னை. திருமலை நாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட மதுரையின் மிகப்பெரிய தெப்பக்குளம், மன்னரின் பெயரில் அழைக்கப்படாமல் மாரியம்மன் பெயரில் ‘மாரியம்மன் தெப்பக்குளம்’ என்றே பிரசித்திப் பெற்றிருக்கிறது.

அரண்மனைக் கட்டுமானத்துக்காக தோண்டப் பட்டதால் ஏற்பட்ட பள்ளத்தையே நாயக்க மன்னர் திருக்குளமாக அமைத்தாராம். இங்கே மண் தோண்டப்பட்டபோது கிடைத்த பெரிய விநாயகரையே மதுரை மீனாட்சியம்மன் கோயி லில் முக்குறுணி விநாயகராகத் தரிசிக்கிறோம். இக்குளத்தில் தை மாதம் நிகழும் தெப்போற்ஸவம் விசேஷமானது. இப்படி பெருமைகள் வாய்ந்த இந்தக் குளத்தின் அருகிலேயே மாரியம்மன் கோயில் கொண்டிருப்ப தால் கூடுதல் சிறப்புப் பெற்றுவிட்டது.

மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அன்னை மீனாட்சிக்கும் பிரியமான வள் இந்த மாரியன்னை என்று சிலாகிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். பாண்டிய மன்னர்கள், சேதுபதி மன்னர்கள், நாயக்க மன்னர்கள் அனைவராலும் வணங்கப்பட்ட அன்னை மாரி இங்கே கோயில் கொண்ட வரலாறு இதுதான்…

மன்னர் கூன்பாண்டியன் ஆட்சி காலத்தில் குறும்பர்கள் எனும் இனத்தவர்கள் மகிழ மரக் காடுகளாக இருந்த இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து, அப்பகுதி மக்களுக்குப் பெரும் தொந்தரவு கொடுத்து அட்டகாசம் செய்து வந்துள்ளனர். மேலும் அங்கிருந்த இயற்கை வளங்களையும் அழித்துவந்துள்ளனர். இதுபற்றிய புகார் மன்னர் கூன்பாண்டியன் கவனத்துக்குச் சென்றுள்ளது. மக்களைக் காப்பாற்ற அப்பகுதிக்குப் படையுடன் சென்ற மன்னர், ஆக்கிரமிப்பு செய்த குறும்பர் இனத்தவருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டி அடித்துள்ளார். அதன் வெற்றியைத் தொடர்ந்து அங்கிருந்த வைகை ஆற்றில் கிடைத்த அம்மனின் சிலையை வைகை ஆற்றின் தெற்குக் கரையில் வைத்து வழிபட்டுள்ளார். அதிலிருந்து போருக்குச் செல்லும்முன் அம்மனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதனால் பல வெற்றிகளையும் அடைந்திருக்கிறார். தங்களுடைய மன்னரே வணங்கியதால், மக்களும் மாரியம்மனை பக்திபூர்வமாக வழிபட்டு வருகின்றனர்.
தந்தையின் கட்டளையை நிறைவேற்றவேண்டி, தன் தாய் ரேணுகாதேவியின் தலையைத் துண்டித்த பரசுராமர், மறுபடியும் தன் தாயை உயிர்ப்பித்துத் தருமாறு தந்தையைக் கேட்டதாகவும், அதன்படி உயிர்த்தெழுந்த ரேணுகாதேவியே இங்கே மாரியம்மனாகக் கோயில் கொண்டதாகவும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

வைகை ஆற்றின் வண்டியூர் மேல்மடைக்கு நேரில் இருப்பதால் வண்டியூர் மாரியம்மன் கோயில் என்று அழைக்கப்படும் இந்தக் கோயிலில், மகிஷனை வதம் செய்வது போன்ற நிலையில் காட்சி தருகிறாள். அந்த வகையில் மாரியம்மனே மகிஷாசுரமர்த்தினியாகவும் திகழ்கிறாள் என்பதும் தனிச்சிறப்பு. மேலும் இடக்காலின் மீது வலக் காலைப் போட்டபடி இந்த அம்பிகை அமர்ந்திருப்பது அபூர்வ திருக்கோலம். போருக்குச் செல்லும் முன்பு வெற்றியை வேண்டி மன்னர்கள் வழிபட்ட மாரியம்மனை, தேர்வுகளிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டி வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். அரசமர விநாயகர், பேச்சியம்மன் ஆகியோரும் இங்கே காட்சி அருள்கின்றனர்.

பிணிகள் தீர்க்கும் தீர்த்தம்!

மாரியம்மன் கோயிலில் தீர்த்தப் பிரசாதம் விசேஷம். அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் இந்தத் தீர்த்தம், கோயில் நிர்வாகத்தினரால் பித்தளை அல்லது செம்புப் பாத்திரங்களில் சேகரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கண் நோய், அம்மை நோய், தோல் நோய் மற்றும் நாள்பட்ட வியாதி உள்ளவர்களுக்கு இந்தத் தீர்த்தம், பிணிகள் தீர்க்கும் மருந்தாகத் திகழ்கிறது என்பது நம்பிக்கை. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தப் பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.

கோயிலுக்கு வந்திருந்த மதுரை ஜீவா நகர் காமாட்சி என்ற பக்தை, ‘‘கல்யாணமாகி ரொம்ப வருஷமா எங்களுக்குக் குழந்தை இல்லை. மாரியம்மனுக்கு மாவிளக்கு போட்டு நேர்ந்துக்கிட்டேன். அடுத்த வருஷமே நான் வேண்டிக்கிட்ட அதே மாசத்துல ஆண் குழந்தை பொறந்துச்சி. அப்புறம் ஒருமுறை என் பையனுக்கு உடம்புக்கு முடியாம போயிடுச்சி. எத்தனையோ ஆஸ்பத்திரிக்குப் போயும் ஒண்ணும் சரிப்பட்டு வரலே. கடைசியில என் பிள்ளையை மாரியம்மனுக்குத் தத்து கொடுத்துட்டேன். சரியா முப்பது நாள்லயே பையனுக்குக் குணமாகிடுச்சி. இப்ப பையனுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்ங்கறதுக்காக வேண்டிக்கிட வந்திருக்கேன்’’ என்றார்.

முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த சுமித்ரா, ‘‘எங்க வீட்டுல விசேஷம். அதான் ஆத்தாக்கிட்ட முதல் பத்திரிகை வெச்சு சாமி கும்பிட வந்திருக் கோம். எங்க வீட்டுல மட்டுமில்லே, சுத்துப்பட்டு ஊர்க்காரங்களும் எந்த விசேஷம்னாலும் ஆத்தாக்கிட்டதான் உத்தரவு வாங்குவாங்க’’ என்றார் சிலிர்ப்பும் மகிழ்ச்சியுமாக!

தேடி வரும் அடியார்களின் வாழ்க்கைச் செழிக்க வரம் வாரி வழங்கும் கற்பகத் தருவாகத் திகழும் மாரியன்னையின் சந்நிதிக்கு நாமும் சென்று, அவளின் கருணை கடாட்சத்தைப் பெற்று வருவோமே!

Leave a Reply