shadow

அனுபவம் இல்லாதவர்களுக்குக் கைகொடுக்கும் ஐ.பி.ஓ.

பங்குச் சந்தை முதலீட்டில் மிகக் கவர்ச்சிகரமான வார்த்தை ஐ.பி.ஓ. (initial public offering), முதல் நிலைப் பங்குச் சந்தை முதலீட்டில் மிக முக்கியமான விஷயம். அதிலும் பங்குச் சந்தையில் பெரிய அளவுக்கு அனுபவம் இல்லாத முதலீட்டாளர்களுக்கு ஐ.பி.ஓ நல்ல முதலீட்டு வாய்ப்பு.

பங்குச் சந்தையில் இரண்டு விதமான முதலீடுகள் இருக்கின்றன. ஏற்கெனவே சந்தையில் வர்த்தகமாகிக்கொண்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்வது. பெரும்பாலான முதலீட்டு வாய்ப்பு.

இன்னொரு வகை ஐ.பி.ஓ. அதாவது தங்களுடைய முதலீட்டைப் பெருக்கிக் கொள்ள நினைக்கும் நிறுவனங்கள் தங்கள் தகுதியையும் திறமைகளையும் எடுத்துச் சொல்லி, தங்கள் நிறுவனப் பங்குகளில் ஒரு பகுதியைப் பங்குச் சந்தையில் பட்டியல் இட முன்வரும். அப்படிப்பட்ட நிலை உருவாகும்போது முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்ய முயற்சி செய்வார்கள்.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முன் அந்த நிறுவனம் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். இந்த ஐ.பி.ஓ. விஷயத்தில் தன்னைப் பற்றிய அருமை பெருமைகளை எல்லாம் அந்த நிறுவனமே பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும். அதனால் நாம் எளிதாக முடிவெடுக்க முடியும்.

பங்குச் சந்தை முதலீடு பற்றிப் பேசும் எல்லா ஊடகங்களும் புதிதாகப் பட்டியல் இடப்படப்போகும் நிறுவனம் பற்றியும் அந்த முதலீட்டின் சாதக பாதங்கள் பற்றியும் அலசி ஆராய்வார்கள். அதை வைத்து நம்மால் முடிவெடுக்க முடியும்.

நிறுவனங்களைப் பற்றியும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் அந்த நிறுவனத்தின் எதிர்காலம் பற்றியும் ஆழ்ந்து ஆராய்ந்து நிறுவனங்களின் தரத்தைப் பட்டியலிட்டுக் கருத்துகளைச் சொல்கின்றன. அதன் அடிப்படையில்கூட நம்மால் முதலீட்டு முடிவை எடுக்க முடியும்.

ஆக, ஒரு நிறுவனத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள நமக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்ற அடிப்படையில் ஐ.பி.ஓ.வை இன்னொரு வகை முதலீடான இரண்டாம் நிலை முதலீட்டை விடச் சிறந்ததாகப் பார்க்க முடியும். முடிவைச் சிறப்பாக எடுப்பதற்கு இந்த அறிக்கைகளும் ஆய்வுகளும் நமக்கு உதவியாக இருக்கும்.

முதல் நிலைப் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் நாம் எப்படிப்பட்ட வருமானத்தை ஈட்ட முடியும் என்பதற்கு ஓர் உதாரணம். 1993-ம் ஆண்டு ஐ.பி.ஓ. மூலம் சந்தைக்குள் நுழைந்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆரம்ப விலை 95 ரூபாய். பட்டியல் இடப்பட்ட தினத்தில் 145 ரூபாய் என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கிய அந்தப் பங்கின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. மார்ச் மாத இறுதியில் அந்தப் பங்கின் விலை சுமார் 1022 ரூபாய்.

1993-ம் ஆண்டு 100 ரூபாய் மதிப்பில் இருந்த பங்கின் இன்றைய மதிப்பு, சுமார் 1000 ரூபாயாக இருக்கிறது. அதாவது சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முதலீடு பத்து மடங்கு பெருகியிருக்கிறது. வேறு எந்த வகை முதலீடாக இருந்தாலும் இதுபோன்று பத்து மடங்கு வருமானம் என்பது சாத்தியமாக இருக்காது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் தன் பங்கு களைச் சந்தையில் பட்டியல் இட்டபோது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த எல்லோருக்குமே தன் நிறுவனப் பங்கு களை ஒதுக்கிக் கொடுத்தது. அப்போது ஒருவர் நூறு பங்குகளைப் பெற்றிருந்தார் என்றால் அப்படியே கணக்கிட்டால்கூட இப்போதைய மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 25 வயதில் வேலைக்குச் சேர்ந்த ஒருவருக்குப் பத்தாண்டு அனுபவத்தின் பரிசாக நூறு பங்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். முப்பத்தைந்து வயதில் அவருக்கு நூறு பங்குகள் கிடைக்கின்றன. அந்த நூறு என்பது போனஸ், பங்கு பிரிப்பு போன்றவற்றுக்கு உட்படாமல் அப்படியே நூறாகவே இருக்கிறது என்று வைத்துக் கொண்டால்கூட அவருடைய அறுபதாவது வயதில் சுமார் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதுதான் பங்குச் சந்தையின் பலம். இதில் எந்த ஆபத்தும் இருக்கப் போவதில்லை. நல்ல நிறுவனத்தைத் தேர்வு செய்து முதலீட்டு முடிவை எடுத்து, தன் முதலீட்டைச் செய்துவிட்டால் அந்த முதலீட்டை மறந்துவிடலாம். நம் ஓய்வுக் காலத்தில் நாம் இளமையில் செய்த முதலீடு பெரும் வருமானமாகத் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

பங்குச் சந்தை முதலீடு சார்ந்த விளம்பரங்களைப் பார்க்கும்போதே முதலீட்டுச் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று சொல்கின்றன, அப்படியென்றால் ஆபத்து உண்டுதானே?

ஒரு திடமான நிறுவனத்தைத் தேர்வு செய்து அதில் முதலீட்டைச் செய்துவிட்டு சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேல் அமைதியாகக் காத்திருந்தால் நம்மால் இந்த வருமானத்தை ஈட்ட முடியும். அப்படிக் காத்திருக்கும்போது அதில் உள்ள ஏற்ற இறக்கங்களைத் தாண்டி லாபம் கிடைக்கிறது.

பங்குச் சந்தை முதலீடு என்பது குறுகிய காலத்தில் லாபம் பார்ப்பதற்கான வாய்ப்புதானே? அதில் முதலீடு செய்துவிட்டு இருபது ஆண்டுகள் காத்திருப்பது அபத்தம் இல்லையா? காத்திருங்கள்!

Leave a Reply