shadow

அநாகரிகமாகச் சித்தரித்தால் தண்டனை

அது 1990-ம் ஆண்டு. மாணவிகளும் பெண்களும் ஒரு பேரணியில் பதாகைகளை ஏந்தி, சென்னை அண்ணா சாலையில் சென்றனர். பெண்களை அநாகரிகமாகச் சித்தரிக்கும் கவரொட்டிகளைக் கிழித்தபடியும் முழக்கங்களை எழுப்பியபடியும் இருந்தனர்.

பேரணியின் முன்னால் நடந்துவந்த பெண்களில் ராணி மேரி கல்லூரிப் பேராசிரியர் சரஸ்வதியும் ஒருவர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடத்தப்பட்ட பேரணி அது. அண்ணா சாலையில் பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்து ஒட்டப்பட்டிருந்த தரக்குறைவான மூன்றாம் தர டப்பிங் திரைப்படங்களின் சுவரொட்டிகள்தான் கிழிக்கப்பட்டன. அநாகரிகமான சித்தரிப்புகள் பெண்களின் கண்ணியத்துக்கும் சமத்துவத்துக் கும் சுதந்திரத்துக்கும் எதிரானவை என்பதை உணர்த்தும் வகையில்தான் அந்தப் பேரணி நடத்தப் பட்டது. ஆனால், அரசுக்கு எதிராகப் பேரணி நடத்தியதால் அரசுக் கல்லூரிப் பேராசிரியரான சரஸ்வதியை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது என்று கேட்டு, பல ஆண்டுகளுக்குப் பிறகே அந்தப் பிரச்சினை ஓய்ந்தது.

அன்றைக்குச் சாலையில் கடந்துசென்ற ராதிகாவுக்கு இந்தப் பேரணி சரியானதாகவும் முக்கியமானதாவும் தெரிந்தது. பெண்கள் குறித்த அநாகரிகமான சித்தரிப்புகள் தடைச் சட்டம் 1986-ம் ஆண்டில் நடைமுறைக்குவந்தது. அந்தச் சட்டப்பட்டி, ‘பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தை மற்றும் ஒழுக்கத்துக்கு ஊறு விளைவிப்ப தாகவோ, ஒரு பெண்ணின் உடலை அநாகரிகமாக இழிவுபடுத்தும் விதமாகவோ இருக்கக்கூடிய எவ்விதச் சித்தரிப்பும் பெண்களை அநாகரிகமாகச் சித்தரிப்பதாகும்’ என்று வரையறுத்தது.

1987-ல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, ராதிகா இளம் கலை சட்டம் படித்து வந்தார். அவருக்கு எப்போதுமே இதுபோன்ற சுவரொட்டிகளைப் பார்க்கும்போது கடுங்கோபம் வரும். அவருடன் படித்த மாணவிகள், ராதிகாவுக்குக் கோபம் வருவதில் நியாயமில்லை, சாலையைப் பார்த்து நடக்காமல் சுவரொட்டிகளைப் பார்ப்பதால்தானே அந்த அநாகரிகமான படங்கள் தெரிகின்றன என்று எதிர்வாதம்செய்தார்கள். அந்தச் சுவரொட்டிகள் ஒமுக்கமுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்த ஒழுக்கக் குறைவையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் சொன்னார்கள்.

“பெண்களை உடலாக, சதைகளின் கட்டுமான மாக, போகத்தின் வடிகாலாகப் பார்க்கும் பார்வைதான் காலம் காலமாக உள்ளது. அந்த உடலைத் தனது சொத்துபோல பாவிக்கும் பார்வையும் உள்ளது. யாரோ ஒரு பெண்ணை ஆபாசமாகப் படங்களில், எழுத்துகளில் பார்ப்பதற்கு ஏற்படும் வாய்ப்பு என்பது தங்களைச் சுற்றியுள்ள, தனக்கு அறிமுகமில்லாத எல்லாப் பெண்களையும் மனத்திரையில் அநாகரிகமாகப் பார்க்க வைக்கமுடியும். உளவியல் ரீதியாகவும் பெண்களைப் பற்றிய பார்வை மிகவும் கீழானதாக இருக்கும். ஒரு பெண்ணின் அறிவு, ஆற்றல், தனிப்பட்ட தகுதிகள், உணர்வுகளை மறுத்து, உடலாகப் பார்க்கக்கூடிய ஒரு சிந்தனை போக்கை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் வாய்ப்புள்ளது” என்றார் ராதிகா.

கண்ணியத்துக்குக் கேடு

ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற கலைப் படைப்புகளைத் தவிர, பெண்களை இழிவாகச் சித்தரிக்கும் எந்தப் பதிவையும் சட்டம் தடை செய்தது. அதுவரை தங்கு தடையின்றி பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்த சுவரொட்டிகள் பின்னர் வெகுவாகக் குறைந்தன. இந்தச் சட்டம் பொது இடங்களுக்கும் விளம்பரங்களுக்கும் பொருந்தும். பெண்களை உடல் பாகங்களாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டன.

இன்னும்கூட இந்தச் சமூகம் சுயமரியாதை, பெண்களை நாகாரிகமாக நடத்துவது குறித்த உணர்வுகளைக் கூர்தீட்டி வைத்துக் கொண்டிருந்தால் இன்னும் பல அநாகரிகமான சித்தரிப்புகள் நம் ஊடகங்களிலிருந்தும் பொதுவெளி களிலிருந்தும் காணாமல் போயிருக்கும். இந்தச் சட்டப்படி விளம்பர நிறுவனங்கள் பெண்களை அநாகரிகமாக விளம்பரங்களில் சித்தரித்தால், அந்த விளம்பர நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளரே குற்றம் சாட்டப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். அதே நபரோ, நிறுவனமோ இரண்டாம் முறை குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் தண்டனையுடன் ஒரு லட்சம் ரூபாய்வரை அபராதமும் விதிக்கலாம் என்றும் சட்டம் சொல்கிறது.

பெண்களை அநாகரிகமான முறையில் சித்தரிப்பதைத் தடைசெய்யும் சட்டம், 1987 முதல் நடைமுறையில் இருந்தாலும் பெண்களை, பெண் குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்கும் வலைதளங்கள், ஆபாச பக்கங்கள், வீடியோக்கள் போன்றவற்றை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது.

ஆபாசமான படங்களும் வீடியோக்களும் இளைஞர்களை மிக வெகுவாக ஈர்த்து, தாங்கள் கண்டவற்றை நடைமுறைப்படுத்தும் விதமாக, பெண்களைப் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்குகிறார்கள். எனவே, பெண்களை அநாகரிகமாகச் சித்தரிப்பதைத் தடை செய்யும் இந்தச் சட்டம், அதன் தேவை கருதியே சட்டமாக இயற்றப்பட்டது. மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி, ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பார்வையிடவும் சோதனை செய்யவும் பெண்களை அநாகரிகமாகச் சித்தரிக்கும் நபரை, வியாபாரத்தை, அச்சகத்தைச் சட்டப்பூவமாகக் கைப்பற்றவும் முடியும் என்கிறது.

எனவே இந்தச் சட்டத்தைப் பெண்கள் துணிந்து பயன்படுத்தினால் பெண்கள் மீதான அத்துமீறல்கள் வெகுவாகக் குறையும். பொதுவெளிகளில் பெண்களை அநாகரிகமாகச் சித்தரிப்பது குறித்து தொடர்ந்து கேள்வி கேட்கவேண்டும், தடுக்கவேண்டும்.

Leave a Reply